2025 டிசம்பர் திக் திக்

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று திரு விஜய் அவர்களை அவருடைய பட்டினப் பாக்கம் இல்லத்தில் சந்தித்தார். இரண்டு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின்றது. இதற்கு முன் ஐந்து பேர் கொண்ட குழு தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அமைத்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று 05/12/2025 விஜய் அவர்களை ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தும் குழு சந்தித்து உரையாடிவிட்டு வந்த பிறகு இன்று அதே கட்சியின் சார்பாக ஒருவர் விஜய்யை சந்திப்பது தமிழ்நாட்டில் பேசுபொருளாக அமைந்திருக்கிறது. இது அடுத்தடுத்த நாட்களில் தமிழக அரசியலில் விவாத பொருளாக மாறும். காரணம் ஏற்கனவே விஜய்யோடு கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் மீது ஒரு பார்வை இருந்து வந்தது. அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இன்றைய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு மேலும் வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
காங்கிரஸின் இந்த நடவடிக்கை திமுகவிடம் பேரம் பேசுவதற்கான வலிமையை கூட்டுவதற்கான ஒரு உத்தியாகவே கருதப்படும் என்று வைத்துக் கொண்டாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான இளம் தலைவர்கள் விஜய்யோடு கூட்டணி அமைப்பதே சிறந்தது என்று கருதுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. காங்கிரஸில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விரும்புவதாக தெரிகிறது. இதில் விஜய் கட்சியில் இணைந்து கூட்டணியோடு இந்த 2026 தேர்தலை சந்திக்க இளம் காங்கிரஸ் தலைவர்கள் விரும்புவதற்கு காரணம் விஜய் அவர்கள் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்றும் கட்சி துவங்கிய முதல் மாநாட்டிலே அறிவித்த பிறகு 1967 க்கு பிறகு காங்கிரஸ்க்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கக்கூடிய ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பமாக கருதுகிறார்கள்.
ஆகையால் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் விஜயோடு கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று விரும்புகிறார்கள். ஒரு சில மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதையே வழிமொழிகிறார்கள். ஆகையால் இந்த சரியான வாய்ப்பை காங்கிரஸ் கட்சி 50 வருடங்களுக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளுமா? அல்லது தவறவிடுமா? என்பது இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும். பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி மேலிடம் கடந்த காலங்களில் தவறான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் ஒரு சில குறிப்பிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு, தலைவர்களுக்கு தாங்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று எம் எல் ஏ அல்லது எம்பி ஆகிவிட வேண்டும் என்று விரும்புவதால் கடினமான முடிவுகளை (ரிஸ்க்) எடுக்க விரும்புவதில்லை. மாநிலத்தில் ஆண்டு கொண்டிருக்கும் ஏதோ ஒரு வலிமையான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அவர்களோடு வெற்றியை பெற்று பதவியில் இருப்பதே விரும்புகிறார்கள்.

காங்கிரஸ் மேலிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற இளம் தலைவர்கள் மட்டுமே கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அவர்களுக்கு போர்படை தளபதிகளாக வயது முதிர்ந்த நிர்வாகிகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதால் சில கடினமான முடிவுகளை எடுக்க முடியாமல் தலைமை திணறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் வாக்கு வங்கி இருந்தாலும் தற்போது அதன் வாக்கு சதவீதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதற்கு காரணம் அவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கக்கூடிய தவறான முடிவுகளினால் தான் அந்த சரிவு உண்டாகிறது.
கட்சியில் இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி விரும்பினாலும் அதற்கு முட்டுக்கட்டையாக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருப்பதால் வெற்றி வாய்ப்பு கண்டிப்பாகக் சரிந்து கொண்டே செல்லும். இதை எப்போது அவர்கள் உணர்ந்து, புரிந்து செயல்படுவார்கள் என்று அடிமட்ட தொண்டர்கள் குமரி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை 2026 தேர்தலில் தொடர்ந்து திமுகவுடன் கூட்டணியில் நீடிக்குமா அல்லது விஜய்யுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது இன்னும் ஒரு மர்மமாகவே இருக்கிறது.
இறுதியாக பழைய சிந்தனை கொண்ட நிர்வாகிகளின் பேச்சை தட்ட முடியாமல் எந்தவித புது முயற்சியும் எடுக்க முடியாமல் ஒரு தைரியமான முடிவுக்கு கட்சியை கொண்டு செல்லாமல் மீண்டும் ஒரு அறிய வாய்ப்பை தவறவிடுமேயானால் இது போல் இனி ஒரு வாய்ப்பு அவர்களுக்கு தமிழகத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.! அப்படி ஒரு வேலை தைரியமான முடிவை எடுத்து விஜய்யுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் அன்று முதல் காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சி அடைந்து இந்தியா முழுக்க தனது வெற்றி கணக்கை துவங்க ஆரம்பிக்கும் என்பது உண்மை. ஆனால் அந்த முடிவை அவர்கள் அவ்வளவு சீக்கிரம் எடுக்க மாட்டார்கள் என்பதுதான் இன்றைய யதார்த்தம். சரி பொறுத்திருந்து பார்ப்போம் இப்பொழுது டிசம்பர் மாதம் துவக்கத்தில் இருக்கிறோம் 2025 இறுதியில் காங்கிரஸ் கட்சி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கிறதா? இல்லை 2026 இல் பழைய கூட்டணியுடன் போட்டியிட்டு அரிய வாய்ப்பை தவற விடுகிறதா? என்பதை காலத்தின் (காங்கிரஸ்)கையில் விட்டு விடுவோம்.
நன்றி வணக்கம்
ஆசிரியர்




