குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை –

தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச துண்டுகளையும், கழிவு பொருட்களையும், எச்சங்களையும் இட்டுச் செல்வதால் மிகவும் எரிச்சல் அடைகிறார். இந்தக் கூடு இங்கு இருப்பதால் தானே நமக்கு இவ்வளவு பெரியத் தொல்லை என நினைத்து மரத்தில் உள்ள கூட்டைக் கலைக்க முடிவெடுத்து அதை நிறைவேற்றவும் செய்கிறார். இது ஒரு சாதாரண நிகழ்வு தான் என்று நாம் கடந்து சென்றாலும் அந்தக் கூட்டைக் கலைத்த மாரியப்பனால் அப்படி சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை அந்த செயல் அவருக்கே வினையாய் போய் முடியும் என்று அவர் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
மறுநாள் காலை வீட்டின் மேலே காகங்கள் கரையும் சத்தம் மாரியப்பனின் காதைக் கிழிக்கிறது. மாரியப்பன் கையில் தொரட்டிக் கம்பை எடுத்து வந்து காகங்களை விரட்டுகிறார். கம்பைக் கண்டவுடன் காகங்கள் தலை தெரிக்க பறந்து செல்கிறது. மாரியப்பன் ஒரு ஐந்து நிமிடம் தொரட்டிக்கம்புடன் அங்கே நின்றுகொண்டு காக்கா கூட்டம் மீண்டும் வருகிறதா என்று பார்க்கிறார். எந்த காக்கா கூட்டமும் வரவில்லை என்று தெரிந்தவுடன் துரட்டியை ஒரு ஓரத்தில் சாய்த்து வைத்து விட்டு வீட்டுக்குள்ளே சென்று விட்டார்.
மறுநாள் காலை அதே போல் காக்கா கூட்டம் வந்து கரைந்து கொண்டிருந்தது. மாரியப்பனுக்கு இது மிகப்பெரிய எரிச்சலை உண்டாக்கியது. இது என்னடா பெரிய சல்லையா போச்சி என்று சலித்துக் கொண்டு மறுபடியும் அவர் தொரட்டிக்கம்பை எடுத்து வந்து காகங்களை துரத்துகிறார். இந்த முறை காக்கா கூட்டம் அவர் வீட்டை விட்டு அகலாமல் மாறி மாறி வேவ்வேறு இடத்தில் அமர்ந்து கொண்டு ஜாலக் காட்டியது. பொறுமையிழந்த மாரியப்பன் கற்களையும் , கையில் கிடைக்கும் பொருட்களையும் எடுத்து காக்கைகள் மீது வீசத் தொடங்கினார். காக்கைகள் கூட்டம் கல்லடி படாமல் தப்பித்து சிட்டாய் பறந்து சென்றது. இப்படியாக ஒரு நாள் இரண்டு நாள் அல்ல தொடர்ந்து ஒரு வாரகாலமாக இதே நிலைமைதான் மாரியப்பனுக்கு.
இந்த தொடர் சம்பவம் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களையும் நிம்மதி இழக்க செய்தது. காக்கா கூட்டத்தை விரட்டுகிறோம் என்ற பேரில் கல்லைத் தூக்கி வீசுவதால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேலே கல் வந்து விழுகிறது. சில நேரங்களில் மாரியப்பன் வீசும் கல் அவர்கள் வீட்டுக்குள்ளேயும் சென்று விழுந்து விடுகிறது. அவர்கள் மாரியப்பனை அழைத்து கண்டபடி சத்தம் போடுகின்றனர். இது மாரியப்பனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. காக்காவோட சத்தம் ஒரு பக்கம், அக்கம் பக்கத்து வீட்டாரின் ஏச்சும் பேச்சும் மறுபக்கம் இந்த இரண்டும் அவரை பாடாய்ப்படுத்தியது.

மாரியப்பனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக்கண்ட மனைவி விசாலம், ஏங்க பேசாம நாமலே ஒரு கூட்ட கட்டி அந்த மரத்தில வச்சா இந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்திடும்ல என்று யோசனை சொல்ல. மாரியப்பன் அதெல்லாம் தேவையில்லாத வேல திரும்பவும் கூட்ட கட்டி வெச்சா மறுபடியும் வீட்ட சுத்தி அசிங்கம் பண்ணி வைக்குங்க என்று மறுத்து விட்டார். இதைக் கேட்ட விசாலத்திற்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. இந்த மனுஷன் நாம சொல்லி எதைத்தான் கேட்டிருக்கிறார் எப்படியோ போட்டும் என்று தனக்குள்ளே முனங்கியபடி தன்னுடைய வேலையை பார்க்கச் சென்று விட்டாள். மாரியப்பனுக்கு காக்காவைவிட அக்கம் பக்கத்தினர் ஏச்சும் பேச்சும்தான் மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. இந்த பிரச்சனைக்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என்று மண்டைய போட்டு கசக்கிப் பார்த்தார் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை.பிறகு ஒரு சிறிய யோசனை வந்தவராக மனைவி விசாலத்திடம் சென்று விசு நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் என்றார். விசாலத்தை எப்போதும் அவர் விசு என்று தான் சுருக்கி அழைப்பார். விசாலம் சொல்லுங்க என்றாள். நாம வேணா ஒரு நாள், ரெண்டு நாள் நம்ம கல்யாணி வீட்டுக்கு போய்ட்டு வர்லாமா என்று கேட்டார் அதை கேட்டதும் அவர் மனைவிக்கு சரி என்றேப்பட்டது. சட்டென்று எதுவும் யோசிக்காமல் சரிங்க நல்ல யோசனை கல்யாணி தனிக்குடித்தனம் போயி ஒரு எட்டு சென்டு பாக்கவேயில்லை அப்படியே பேரப்பிள்ளையும் பாத்துட்டு வந்தா ஏன் மனசுக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும் என்று மகிழ்ச்சியோடு சொல்ல, காலை வெள்ளனே கிளம்பி தங்கள் ஒரே மகளை பார்க்க போகலாம் என்று முடிவெடுத்தனர்
மாரியப்பன் தஞ்சாவூரில் இருந்தாலும் கும்பகோணத்தில் கட்டிக் கொடுத்த மகளை எப்போதாவது தான் போய் பார்ப்பார். மகளையும் மாப்பிள்ளையையும் பொங்கலுக்கு முறையாக வீட்டிற்கு அழைத்து சீர்வரிசை செய்து மரியாதை செய்து அனுப்பி வைப்பார். மற்றபடி பெரும்பாலும் அவர்களின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விடுவார். மாப்பிள்ளை புகழேந்தி கும்பகோணத்தில் மிகப்பெரிய எலக்ட்ரிகல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கும்பகோணம் கடை வீதியில் மார்வாடி கடைகளுக்கு மத்தியில் அவருடைய கடையும் இணையான பெரிய கடையாக இருந்தது. மாரியப்பன் மகள் கல்யாணிக்கு போன் போட்டு நாளைக் காலை அவர்களை பார்க்க வரும் விவரத்தை சொல்ல கல்யாணிக்கு ஏக குஷி கல்யாணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் சென்ற பின் அப்பா அம்மா இன்னும் நம் வீட்டிற்கு வரவில்லை என்ற ஏக்கம் அவளுக்கு நிறைய இருந்தது இப்பதாவது அவர்களுக்கு வர எண்ணம் வந்ததே என்ற ஏக சந்தோசம் கணவன் புகழேந்திக்கு உடனே போன் போட்டு விஷயத்தை சொல்லிவிட்டாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மகள் வீட்டிற்கு மாரியப்பனும், விசாலமும் செல்கிறார்கள். விடுமுறை நாள் என்பதால் மருமகன் புகழேந்தியும் வீட்டிலேயே இருக்கிறார்.அங்கு ஏக தடபுடல் விருந்து வைத்து இருவரையும் கவனிக்கிறார்கள். விசாலம் மகளையும், பேரனையும் பார்த்த மகிழ்ச்சியில் இருந்தாலும் மாரியப்பன் மட்டும் ஏதோ ஒரு கவலையில் இருக்கிறார் என்பதை கவனித்த மருமகன் புகழேந்தி, என்ன மாமா வந்ததுலருந்து ஒரே யோசனையா இருக்கீங்க என்று கேட்க, அதெல்லாம் ஒன்னுமில்ல மாப்ள என்று சமாளிக்கிறார். அன்றைய நாள் மாரியப்பனைத் தவிர எல்லோருக்கும் இனிதாய் கழிந்தது.
திங்கள்கிழமை காலை புகழேந்தி மாரியப்பனிடம் மாமா நல்லா ரெஸ்ட் எடுங்க நான் கடைக்கு போயிட்டு வரேன் நா வரதுக்கு நைட் ஆயிடும். நீங்க வேனா ஒரு எட்டு கடைக்கு வந்துட்டு பாத்துட்டுப் போங்களேன். நான் கடைலதான் இருப்பேன். நான் வேணா கடைப் பையன வண்டி குடுத்து அனுப்பி வைக்கிறேன். நீங்க அவனோட வந்திடுங்க என்றதும் மாரியப்பன் மாப்ள ரொம்ப சந்தோஷம் நாங்க இப்பவே பஸ் புடிச்சி வீட்டுக்கு கெளம்பளானு முடிவு பண்ணிருக்கோம் என்று தயங்கி தயங்கி சொல்ல, அட என்ன மாமா வந்து ஒரு நாள் தான் ஆகுது அதுக்குள்ள கிளம்பிறேனுட்டு பேசாம இருங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு ஒரு வாரம் தங்கிட்டு போங்க. அங்க போய் ஏன்னா பண்ணப் போறீங்க என்ன வேலையா வெட்டியா என்று கேட்க , விசாலம் இடைமறித்து இல்ல மாப்ள வீட்ல போட்டது போட்டபடியே கெடக்குது உங்க எல்லோரையும் பாக்கணும்னு தோணுச்சு அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு வந்தோம். ஒரு நாள் தங்கினதே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு தோ பொங்கலும் பக்கத்தில வந்திருச்சி அப்ப உங்கள அழைக்க வர்ரோம்ல சாவகாசமா இருந்து தங்கிட்டு போறோம் என்று சொல்ல. புகழேந்தி சரித்த உங்க இஷ்டம் நான் வண்டி ஏற்பாடு பண்றேன் என்றதும். மாரியப்பன் இல்ல மாப்ள உங்களுக்கு எதுக்கு சிரமம் நாங்க பஸ்லே போய்க்கிறோம் என்றதும். அப்படீங்களா என்று யோசித்து விட்டு சரிங்க மாமா பத்திரமா போயிட்டு வாங்க என்று சொல்லி விடைபெற்று வண்டியில் ஏறி கடைக்கு கிளம்பிவிட்டார்.
மாரியப்பன், விசாலம் இருவரும் மகளிடம் சொல்லிவிட்டு ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். வீட்டிற்கு வந்ததும் மாரியப்பன் வீட்டின் மேலே காக்கா கூட்டம் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறார். காக்கா எதுவும் தென்படவில்லை அவருக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. அன்று முழுவதும் ஓய்வு எடுத்து விட்டு இரவு இருவரும் படுக்க செல்கிறார்கள். மாரியப்பனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை மறுபடியும் இந்த காக்கா வந்து தொல்லை கொடுக்குமோ என்ற பயம். உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறார் நீண்ட நேரம் கழித்து அப்படியே உறங்கிப் போகிறார்.
காலை விடிகிறது மாரியப்பன் நெடுநேரம் அசந்து தூங்குவதாக நினைத்த விசாலம் அவரை எழுப்பாமல் தன் அன்றாட வேலையை கவனிக்க சென்று விட்டாள் . ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மாரியப்பனுக்கு காதுக்குள்ளே காகங்களின் சத்தம் கிணற்றுக்குள் கேட்பது போல் கேட்டுக் கொண்டிருக்க, அவரின் கண்கள் விழிக்க தடுமாறுகிறது. விசாலம் அவரை தட்டி எழுப்புகிறாள். அவருக்கு லேசாக முழிப்புத் தட்டுகிறது. இப்போது காகத்தின் சத்தம் கொஞ்சம் கூடுதலாக கேட்க ஆரம்பிக்கின்றது. ஏங்க எழுந்து வந்து இங்க பாருங்களேன் என்று அவசரப்படுத்துகிறாள். மாரியப்பன் திடுதுப்பென்று எழுந்து உட்காருகிறார். இப்போது காக்கைகளின் கரையும் சத்தம் பலமாக கேட்கிறது. என்னாச்சு என்று விசாலத்திடம் கேட்கிறார். ஏங்க நீங்களே வந்து பாருங்க என்று விசாலம் பதற்றமாக சொல்ல, ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறார் கீழே ஒரு காக்கா இறந்து கிடக்கிறது. அவர் விசாலத்தை பார்த்து இது எப்படி வந்திச்சி என்று கேட்க, எனக்கு ஒன்னும் தெரிலங்க வெளியில வந்து பாத்தா காக்கா ஒன்னு செத்துக்கெடக்கு மத்த எல்லா காக்காவும் வீட்டை சுத்தி கத்திக்கிட்டே பறந்துட்ருக்கு எனக்கு ஒன்னும் புரியல என்றதும்.
எனக்கு புரிஞ்சு போச்சு என்று மாரியப்பன் புன்னகை செய்யகிறார். உங்களுக்கு என்ன புரிஞ்சிது? என்று விசாலம் புரியாமல் கேட்கிறாள். நேத்து மாப்பிளகிட்ட நடந்த விஷயத்த சொன்னேன். அதுக்கு அவுரு இதுக்கு ஏன் மாமா கவலைப்படுறீங்க இது ஒன்னும் பெரிய விஷயம்ல்ல நான் பாத்துக்கிறேன் நம்ம கடப் பையன் கிட்ட சொல்லி அந்த காக்கா உக்கார எடத்துல கரண்ட் சப்ள கொடுத்துட்டா போதும் கரன்ட்ல அடிபட்டு ஒன்னு ரெண்டு செத்து போயிடும் அதுக்கப்புறம் ஒரு காக்காவும் வந்து உங்கள தொந்தரவு பண்ணாது என்று சொன்னார். அவர்தான் செஞ்சுருப்பார்னு நெனைக்கிறேன் என்றதும். விசாலம் பதறிப்போய் அடப்பாவி மனுஷா சும்மா இருந்த கூட்ட கலச்ச, இப்ப அது பத்தாதுன்னு கரன்ட் வெச்சி அதுங்கள சாகடிக்கிற வேலையை பார்த்துட்ட, பாவம் அது வாயில்லா ஜீவன்யா ஏன்யா ஓம்புத்தி இப்புடி போவுது. செவ்வாகெழம அதும் என்ன வேல பாத்து வெச்சிருக்க அதும் ஒரு உயிர் தான என்று தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள்.மாரியப்பன் கோபமாக இப்ப என்ன ஆச்சுன்னு இப்புடி குதிக்கிற அதுங்க வீட்ட சுத்தி அசிங்கப்படுத்தி வெக்கிதுங்க. சரி கூடு இருந்தா தானே இங்க வந்து அசிங்கம் பண்ணும் அதுக்காக அதை கலச்சு உட்டேன். அதுங்க மறுபடியும் வராதுனு பாத்தா உடாம வந்து தொல்ல பண்ணுதுங்க. சரி ரெண்டு நாளு இந்த எடத்தை விட்டு போயிட்டு வந்தா திரும்ப அதுங்க வராதுனு நெனைச்சு கல்யாணி வீட்டுக்கு போலாம்னு யோசிச்சேன். போன எடத்துல எமூஞ்சி உம்முன்னு இருக்கிறத பாத்துட்டு மாப்ள தனியா அழைச்சிட்டுப் போய் என்ன ஏதுன்னு கேட்டாரு. நடந்த விஷயத்தை சொன்னே. இதுக்கு போயா இப்படி இடிஞ்சு உட்கார்ந்திருக்கீங்க என்று அவுரு சாதாரணமா சொன்னாரு கூடவே இந்த ஐடியாவும் சொல்லி பசங்கள விட்டு நான் பாத்துகிறேனு சொன்னாரு. ஆனா அவுரு உடனே இத செய்வார்னு நா நெனைக்கல சரி இப்ப நம்ம நல்லதுக்கு தானே செஞ்சாரு நீ ஏன் ரொம்ப அலட்டிக்கிற என்று சொல்லிவிட்டு ஒரு குச்சியையும் முறத்தையும் எடுத்துக்கொண்டு வாசல் பக்கம் செல்கிறார். இதைக் கேட்ட விசாலம் கண்ணீருடன் ஒரு மூலையில் சென்று அமர்ந்து விசும்ப ஆரம்பித்தால்.
மாரியப்பன் குச்சியை விட்டு இறந்த காக்காவை அள்ளிப்போட்டு தூரத்தில் இருக்கும் ஒரு குப்பை மேட்டில் கொண்டு போய் தூக்கி எறிகிறார். காக்கை கூட்டம் கரைந்தபடி குப்பை மேட்டையே வட்டமடித்தது சில காக்கைகள் இறந்த காக்கா அருகில் சென்று அதைப் பார்த்து பார்த்து கரைந்து கொண்டிருந்தது. அவைகள் என்ன சொல்லி கரையும் என்பதை எந்த மனிதர்களுக்கு தான் தெரியும். அதற்காக மாரியப்பன் கொடூர மனம் படைத்தவர் என்று நினைக்கத் தேவையில்லை. தெரியாமல் ஏதோ செய்து விட்டார். அதனால் அதன் பலனை அனுபவிக்கிறார். மறுநாள் அதற்கு அடுத்த நாள் இப்படி மூன்று நாட்கள் கடந்தன ஒரு காக்காவும் வீட்டிற்கு வந்து கரையவில்லை. மாரியப்பனுக்கு நிம்மதியாகிவிட்டது. உடனே மாப்பிள்ளைக்கு போன் போட்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். மற்றபடி விஷாலத்திற்கு மட்டும் இந்த சம்பவம் மனதிற்குள் ஆழமாய் பதிந்து ரணத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம் கணவர் ஏதோ செய்யக்கூடாத காரியத்தை செய்துவிட்டதாக மனதிற்குள் புழுங்கியதால் அந்த மனக்கவலையே அவளை தீவிர நோய்க்குள் தள்ளியது இதற்கு அப்புறம் எல்லாம் அமைதியாகிவிடும் என்று நினைத்த மாரியப்பன் கடை வீதியில் இருந்து பழங்கள் வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார், அப்போது அவர் தலைக்கு மேலே சர்ரென்று ஏதோ ஒன்று உரசி சென்றது. அவர் கையில் இருந்த பையை நழுவ விட்டு சட்டென்று தலையை தடவியபடி மேலே பார்க்கிறார், மேலே ஒன்றும் இல்லை. சரி என்று கீழே விழுந்த பையை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்றபின் மறுபடியும் சர்ரென்று அழுத்தமாக ஏதோ ஒன்று உரசி செல்ல பையை கீழே விழாமல் கெட்டியாக பிடித்தபடி சட்டென்று மேலே பார்க்கிறார். காக்கா ஒன்று வேகமாக சென்று மின்கம்பத்தில் போய் அமர்கிறது. மாரியப்பனுக்கு என்ன என்று புரிந்து விட்டது. சரி காக்கா தான் நம்மை தாக்க வருகிறது என்பதை உணர்ந்து கொண்டார். பிறகு அவர் சூதானமாக வீடு வரை மேலேயே பார்த்தபடி தட்டு தடுமாறி சென்று சேர்ந்து விட்டார்.வெளியில் நடந்ததை விசாலத்திடம் அவர் சொல்லவில்லை. காரணம் தேவையில்லாமல் ஏதாவது புலம்புவால் என்று மறைத்து விட்டார்.

மறுநாள் காலை வெளியே வந்து வீட்டிற்கு மேலே காகங்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்க்கிறார். காகங்களைக் காணவில்லை. ஆனால் தூரத்தில் இருக்கும் கரண்ட் கம்பியில் மூன்று காக்கா அமர்ந்திருப்பதை பார்க்கிறார். அவைகள் எல்லாம் இவரையே பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கிறார். ஒருவேளை இருந்தாலும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவருக்கு சற்றென்று பதற்றம் ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த காகங்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே கோபமாக உள்ளே சென்று பெரிய குச்சியை எடுக்கிறார். இதை பார்த்த விசாலம் ஏங்க குச்சிய எடுத்துகிட்டு எங்க போறீங்க என்று கேட்க ஒரு நிமிஷம் இரு அதுங்கள ஒரு வழி பண்ணாம விடமாட்டேன் என்று ஆங்காரத்துடன் சொல்கிறார். விஷாலத்திற்கு ஒன்றுமே புரியவில்லை எதை ஒரு வழி பண்ண போகிறார் என்று விழிக்க அதாண்டி அந்த காக்காங்கள என்று சொல்ல எந்த காக்காவ சொல்றீங்க இப்பதான் அதுங்க இங்க வர்றதில்லையே அப்புறம் எந்த காக்காவ சொல்றீங்க என்று கோபமாக கேட்க, அதாண்டி அங்க கரண்ட் கம்பத்தில உக்கார்ந்திருக்கிற அந்த மூணு காக்காங்களதான் சொல்றேன். அததான் அடிக்கப் போறேன் என்றதும் ஏங்க உங்களுக்கு என்னங்க ஆச்சு கிறுக்கிருக்கு புடிச்சுடுச்சா இப்ப எதுக்கு ஊர்ல இருக்கிற காக்காங்கள்ட்ட எல்லாம் சண்டைக்கு போறீங்க, நீங்க மறுபடியும் சண்டய வெலைக்கு வாங்குறீங்க என்று கோபிக்க.,நீ பேசாம இரு ஒனக்கு ஒன்னும் தெரியாது நா வெளிய போனா என் தலயில வந்து கொத்துதுங்க அதுங்கள சும்மா உட மாட்டேன் என்று ஆவேசம் பொங்க காகத்தை அடிப்பதற்கு நிற்கிறார். விஷாலத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஏங்க எப்பவும் காக்கா நெனப்பாவே இருக்கீங்க பேசாம பிரச்சனய வளக்காதீங்க அதுங்கள அடிக்க போயி மறுபடியும் உங்க மேல கோபப்பட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்து கத்த போதுங்க. உஸ்ஸ் ஸ்ப்பா என்னால முடியல என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கட்டிலில் போய் சாய்கிறாள்.
மாரியப்பன் டென்ஷனாகி இப்ப என்னதான் என்ன பண்ண சொல்ற வெளியில போனா தலையில வந்து கொத்துது அப்ப நான் எப்படி தான் வெளிய போறது என்று குமுறினார். நீங்க என்னமோ பண்ணுங்க ஒரு கூட்ட கலச்சது எங்க கொண்டு போய் விட்ருக்கு பாருங்க. ஏண்டி நான் என்ன வேணும்னா இதெல்லா செஞ்சேன் என்று குச்சியை வீசி எறிந்து விட்டு நாற்காலியில் போய் அமர்கிறார். சரி வரது வரட்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். இந்த வீட்டில் நடப்பதை நினைத்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விசாலத்திற்கு மேலும் உடல்நிலை பலகீனமாகியது. மாரியப்பன் வெளியே செல்லும்போது தவறாமல் கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போக ஆரம்பித்தார். காகம் தலைக்கு மேல் பறந்தால் குச்சியை வைத்து வீசுவார் இப்படி நாட்கள் கடந்தன இப்போது எல்லோரும் மாரியப்பனை குச்சித்தூக்கி என்று தான் அழைக்கின்றனர்.
ஒருநாள் நோய்வாய்ப்பட்ட விசாலம் இறந்து போகிறாள். விசாலத்தின் இழப்பு மாரியப்பனுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை கொடுத்தது. ஒருவேளை நான் தான் அவள் இறப்புக்கு காரணமாகி விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி அவரைப் பாடாய் படுத்தியது. மாரியப்பனுக்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் இழந்தது போல் ஆகிவிட்டது. விசாலத்திற்கு ஈமச்சடங்குகள் நடக்கிறது. நடந்த மூன்றாம் நாள் மாரியப்பனை தங்களுடன் வந்து தங்கி விடுமாறு மகள் கல்யாணியும் மாப்பிள்ளை புகழேந்தியும் அழைக்கிறார்கள். அதற்கு மாரியப்பன் கொஞ்ச நாள் சென்டு நானே வர்றேன் என்று சமாதானம் சொல்கிறார். அவர்களும் சரி உங்கள் விருப்பம் என்று முடிவு செய்து ஊருக்கு கிளம்புகிறார்கள்.
நாட்கள் செல்ல செல்ல அக்கம் பக்கத்தினர் யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டின் உள்ளேயே அடைந்து கிடக்கிறார். அவர் அதிகம் வெளியே வராமல் இருப்பதால் வெளியே என்ன நடக்கிறது என்றுகூட அவருக்கு தெரியாமல் போயிற்று. இப்படி பல மாதங்கள் கடக்கிறது. ஒருநாள் மாரியப்பன் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்படுகிறது. அவருடைய தபால் பெட்டியிலும் பல கடிதங்கள் கிடக்கின்றன, இது எதுவும் தெரியாமல் மாரியப்பன் மனைவி விசாலத்தின் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒருநாள் வீட்டுக்கு முன்பு ஒரே கூச்சலும் குழப்பமும் கேட்கிறது. வாகனங்கள் ஒலி எழுப்பும் ஓசை கேட்கிறது. இரைச்சல் அதிகமாக மாரியப்பன் வெளியே வந்து எட்டிப் பார்க்கிறார். அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன்பு கூடி இருப்பதை பார்க்கிறார். சில காவலர்களும் நிற்கின்றனர், அரசு அதிகாரிகள் கையில் ஃபைலுடன் நிற்கின்றார்கள். வெளியே வந்து பக்கத்து வீட்டு பழனிச்சாமியை அழைத்து என்னவென்று கேட்கிறார். அதற்கு அவர் நாம எல்லாரும் ஆக்கிரமிப்பு செஞ்சு கவர்ண்மென்ட் எடத்துல வீடு கட்டிருக்கோமா அதனால வீட்ட இடிக்க போறோனு சொல்லி இப்ப வந்திருக்காங்க என்று குமறலுடன் சொல்ல, மாரியப்பன் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என்னது இது ஆக்கிரமிப்புல கட்ன வூடா எவன் சொன்னது, நாங்க ரெண்டு தலைமுறையா இங்க குடி இருக்கோம் கோர்ட்டுக்கு போனா என்ன ஆகும்னு தெரியும்ல என்றதும் கோட்டுக்கு போய் பாத்தாச்சி ஒன்னும் எடுபடல என்று பழனிசாமி பதில் சொல்ல. அது எப்புடியா ஒடனே நடவடிக்கை எடுப்பாங்க இதுக்கு முன்னாடி எதுவும் சொல்ல மாட்டாங்களா என்று கேட்க, அதெல்லாம் பல மாசமா லெட்டர் போட்டாங்க நேர்ல வந்தும் சொன்னாங்க சரி நாங்க தான் அலட்சியமா அவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க மாட்டாங்கன்னு நினைச்சோம். கோர்ட்டு கேசுனு ஒன்னும் நடக்கல இப்ப என்ன பண்றதுன்னு தெரியல என்று கண்கலங்க பேசினார் அதைக் கேட்ட மாரியப்பன் அப்படியே அமைதியாகி விட்டார். ஏதோ யோசனை வந்தவராக திரும்பி வேகமாக வீட்டின் உள்ளே சென்றார்.சிறிது நேரங்களுக்கு பிறகு ஒரு கையில் அவருடைய மனைவியின் புகைப்படம் மற்றோரு கையில் கொஞ்சம் துணிகள் உள்ள பை எடுத்துக்கொண்டு அப்படியே வெளியே வந்து வீதி நோக்கி நடக்க ஆரம்பித்தார். தள்ளுமுள்ளு போன்ற என்ற எந்தவித எதிர்ப்பும் இன்றி புல்டோசர் உறுமிக் கொண்டே மாரியப்பன் வீட்டின் உள்ளே சென்றது.

ஒரு வருடம் கழித்து ஒரு முதியோர் இல்லத்தில் மாரியப்பனை பார்க்க மகள் கல்யாணி, பேரப்பிள்ளை மற்றும் புகழேந்தி மூவரும் சென்று பார்க்கின்றனர். வார்டன் அவர்களிடம் வந்து அப்பா தோட்டத்தில் தான் இருக்கிறார் போய் பாருங்க என்றதும் எல்லோரும் தோட்டத்தை நோக்கி செல்கின்றனர் அங்கு மாரியப்பன் குச்சிகளை வைத்துக்கொண்டு சிறு கூடுகளை கட்டிக் கொண்டிருந்தார். அருகில் கட்டியிருந்த மற்றொரு கூண்டில் பறவைகள் கீச் கீச் என்று கத்திக்கொண்டு அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன. மூவரும் அப்பாவின் முன் நிற்கின்றனர். மாரியப்பன் அவர்களை நிமிர்ந்து பார்த்து அகமகிழ்ந்து கட்டி அணைக்கிறார். மகள் கல்யாணி கண்களில் நீர் வழிய அப்பா எப்படி இருக்கீங்க நீங்க எங்க கூட வரக்கூடாதா என்று கண்ணீர் மல்க கேட்கிறாள். இல்லம்மா எனக்கு இந்த எடமே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மா இல்லாததால நான் அவளோட நினைவுகள சுமந்துகிட்டு இங்கே இருந்துக்கிறேன். எனக்கு எப்ப வரணும்னு தோணுதோ அப்ப கண்டிப்பா நான் உன் வீட்டுக்கு வரேன் என்று தீர்க்கமாக சொல்கிறார். சரிப்பா உங்க இஷ்டம் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு மூவரும் விடை பெற்று செல்கிறார்கள். மாரியப்பன் மிகவும் சிரத்தையோடு குச்சிகளை வைத்து கூடுகள் கட்டத் துவங்குகிறார்.
– ஃப்ரெடி டிக்ரூஸ் _
Chandran t
July 15, 2025மிகவும் அருமையான நல்ல தரமான செய்தி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,