கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025

கட்டுரை –
விருதுநகரில் வசிக்கும் சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார் என்று அவர்கள் கனவிலும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இன்று தமிழ்நாடு தலை நிமிர்ந்து இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமகனார் உதித்த நாள் 15 ஜூலை 1903 இன்று.
அவர் பிறந்த இந்த நன்னாளில் அவரை நினைத்து பெரும் உவகை அடைவோம்.
காமராஜரை பற்றி பெரியார்
இந்திய அரசாங்க ஆட்சியில் சமதர்மம் கொள்கை ஏற்பட திரு காமராஜர் தான் காரணம் என்றும், கல்வி வள்ளல் என்றும் முழங்கியவர் தந்தை பெரியார்
தமிழர்களே திரு காமராஜரை பற்றிக் கொள்ளுங்கள் அவரை விட்டால் உங்களுக்கு வேறு நாதி கிடையாது இது என் மரண வாக்குமூலம் என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தேவகோட்டை மாநாட்டில் 1963 ஜூலை 9ல் உணர்ச்சி பொங்க பேசினார்.
ஜாதி ஒழிப்பில் காமராஜருக்கு முழு அக்கறை உண்டு. அவர் முதல்வரானதால் ஜாதியை ஒழிக்க இதுவே நல்ல தருணம் அவரால்தான் இது சாத்தியமாகும் என்று 1954 செப்டம்பர் 15ல் திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டத்தில் காமராஜரை பற்றி நம்பிக்கையோடு பேசினார் பெரியார்
காமராஜரை பற்றி மற்ற தலைவர்கள்
தமிழகத்தின் உயர்வுக்கு, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக காமராஜர் செய்த பணிகளை வரலாறு மறக்காது.” – பண்டிதர் ஜவஹர்லால் நேரு
நேருவுக்கு பின் நாட்டில் உள்ள சிறந்த தலைவர்களில் காமராஜர் ஒருவர் தான் சிறந்தவர் என்று புகழாரம் சூட்டினார் – ஜெயபிரகாஷ் நாராயணன்
அவர் தமிழகம் மட்டும் அல்ல, இந்திய அரசியலுக்கும் ஒளிவிளக்காக இருந்தார்.” – – இந்திரா காந்தி
காமராஜர் ஒருவர் சாதாரண அரசியல்வாதி அல்ல. அவர் தமிழகத்தில் கல்வி, அரசியல், மக்கள்பணியில் ஒரு புரட்சி நிகழ்த்திய தலைவர் – கலைஞர் மு. கருணாநிதி
எளிமை, நேர்மை, தொண்டாற்றும் மனம் – இவை மூன்றும் ஒரே மனிதரில் இருந்தால், அவர் காமராஜர் தான்.” – எம்.ஜி.ஆர்
மாஸ்கோ க்ரிம்ளின் மாளிகையில் கதர் வேட்டியும் முக்கால்கை சட்டையும் தோளில் ஒரு துண்டும் அணிந்து கொண்டு எளிமையாக வலம் வந்தவர் ஐயா காமராஜர்- செல்வி.ஜெ.ஜெயலலிதா
காமராஜர் பற்றி அமெரிக்க நாளேடு
நேரு மறைவிற்குப் பிறகு இந்தியா துண்டு துண்டாகி விடும் என்று நினைத்தோம் ஆனால் காமராஜர் அதனை காப்பாற்றி விட்டார் என்று புகழ் பெற்ற அமெரிக்க பத்திரிக்கை எழுதியது
நல்லதையே சிந்திக்கும் மாமனிதர்
குஜராத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது தலைவர்கள் எல்லோரும் ஹிந்தியில் உரையாற்றிவிட்டு அமர காமராஜரையும் உரை நிகழ்த்த சொன்னார் நேரு அதற்கு காமராஜர் இந்தி தெரியாததால் என்னால் தமிழ் மட்டும்தான் உரை நிகழ்த்த முடியும் என்று சொன்னார் அதனால் நான் உரை நிகழ்த்தவில்லை என்று மறுத்துவிட்டார் ஆனால் பிடிவாதமாக இருந்த நேரு காமராஜரை உரை நிகழ்த்தும்படி வற்புறுத்தினார் நேருவின் வற்புறுத்தலால் தமிழில் சில மணித்துளிகள் ஒப்புக்காக பேசிவிட்டு அமர்ந்து விட்டார் காமராஜரின் உரையை கேட்ட ஒரு தொண்டர் ஒருவர் பயங்கரமாக கைதட்ட அருகில் இருந்த மற்றொருவர் அவர் பேசிய மொழி உங்களுக்கு புரிந்ததா என்று கேட்க அதற்கு கைதட்டிய நபர் மொழி முக்கியமல்ல பேசியவர் மிகவும் நேர்மையான நல்ல மனிதர் அவர் எது பேசி இருந்தாலும் நல்லதை தான் பேசி இருப்பார் என்று சொன்னார் நல்லதையே சிந்திக்கும் செயல்படுத்தும் மாமனிதர் தான் அவர்
அரசியல் களத்தில் அதிரடி தொடக்கம்
அரசியலில் தன்னுடைய முதல் காலடியை 1919 இல் டாக்டர் வரதராஜு நாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள எடுத்து வைத்தார்.
சுதந்திர வேட்கை பற்றி எரிந்து கொண்டிருந்த காலத்தில் 1920 ஒத்துழையாமை இயக்கத்திலும் கள்ளுக்கடை மறியலிலும் கலந்து கொண்டார்
1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக முதன்முறையாக சிறை வாழ்க்கையின் சுவாசத்தை அனுபவித்தார்.
1932 ல் ஸ்ரீவில்லிபுத்தூர் வெடிகுண்டு சம்பவத்தில் மீண்டும் ஒருமுறை சிறைக்கு சென்றார்
காங்கிரஸ் கட்சியின் கதாநாயகன்
1936 இல் தன்னுடைய அயராத பணியின் பலனாக 33வது வயதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஆனார்
1947 இல் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழ்நாடு கட்சித் தலைவராகவும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1950 இல் மூன்றாவது முறையாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1964 அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கர்மவீரர் கோலோச்சிய சட்டமன்றம்
1937 இல் விருதுநகரில் தன்னுடைய 34 ஆவது வயதில் முதன் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941 இல் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1945 இல் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
1946 இல் விருதுநகரில் மீண்டும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
பெருந்தலைவர் கண்ட பாராளுமன்றம்
1952 விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
1969 நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்
தமிழ்நாட்டை அதிரவிட்ட முதல்வன்
1953 ஏப்ரல் 13 இல் தமிழ்நாட்டில் 49 வயதில் முதல் முதல் முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1957 இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார்
1962 ல் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்
பதவிக்கும் எல்லை உண்டு என்று வகுத்தவர்
1963ல் முதல்வர் பதவியில் இருந்து K-பிளான் என்ற திட்டத்தின் கீழ் பதவி விலகினார்
தமிழுக்கும், கல்விக்கும் செய்த நற்கொடை
1955 – 56 இல் இலவச கல்வி திட்டத்தை அறிவித்தார்
1957இல் அவரது ஆட்சியில் தமிழ்நாடு ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது
1961 தமிழ்நாடு என்று அழைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது
இதுபோல் பல்வேறு திட்டங்களை கல்வி திட்டத்திற்கும், தமிழுக்கும் செய்து கொடுத்தார்.
அணைகளைக் கட்டிய அண்ணல்
மணிமுத்தாறு அணை
அமராவதி அணை
வாளையார் அணை
வைகை அணை
ஆரணி அணை
மங்கலம் அணை
கிருஷ்ணகிரி அணை
மலம்புழா அணை
போன்ற அணைகளை கட்டிக் கொடுத்தார்
தொழிலுக்கு கொடை அளித்த பாரி
சாதாரண ஜவுளி கடையில் வேலை செய்த கர்மவீரர் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்ததும் அவர் கட்டிய தொழிற்சாலை
நெய்வேலி சுரங்க தொழிற்சாலை
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை
இந்துஸ்தான் டெலிபின்டர் தொழிற்சாலை
நீலகிரி படச்சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை
திருச்சி திருவரம்பூர் கனரகத் தொழிற்சாலை
சென்னை ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலை
கிண்டி நந்தம்பாக்கத்தில் உள்ள அறுவை சிகிச்சை மருந்துகள் செய்ய கருவிகள் தொழிற்சாலை
பட்டாபிராம் ரயில்வே வாகனங்கள் செய்யும் தொழிற்சாலை
மேட்டூர் பேப்பர் மில் ஆலை
இந்தியாவிலேயே தொழில்துறையில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது காமராஜரின் ஆட்சிக் காலத்தில் தான்
எளிமை என்பது என் அடையாளம்
தினமும் உணவில் உப்பு புளிப்பு காரம் இல்லாமல் வெறும் கஞ்சியை குடித்து வந்தார்.
கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க வந்தபோது அதை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளியவர்
தன் காரில் எப்பொழுதும் சைரன் ஒழிக்கக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டவர்.
காமராஜர் தன் வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகள் சிறைக்கூடத்தை கழித்தவர்.
மீளாத் துயரம் நம் மனதில் இன்றும்
1975 அக்டோபர் 2 தேசத்தந்தை காந்தியின் பிறந்த நாளில் இந்த மண்ணை விட்டு மறைந்தார்
வான் புகழ் வாழ்த்து
ஏட்டிலடங்காத எண்ணற்ற பணிகளை அவர் செய்து முடித்தாலும் அதை என்னவென்று தேடி தேடி தெரிந்து கண்டடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழர்களும் அவருக்கு செய்யக்கூடிய நன்றி கடன் ஆகும் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் எளிமையின் வடிவமே உருவான வான் புகழ் போற்றும் திருமகனார் காமராஜரின் புகழை போற்றி மகிழ்வோம்.
ஆசிரியர்