TVKART

சாலையில் சத்தமிடும் சாத்தான் – விழிப்புணர்வு கட்டுரை

விழிப்புணர்வு கட்டுரை

சென்னை மாநகரச்  சாலையில் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் அவஸ்தை ஒன்று உண்டென்றால் அது காது கிழியும் அளவுக்கு கேட்கும் ஹாரன் சத்தம் தான்.  வாகனங்கள் சில நேரங்களில் போக்குவரத்து நெருக்கடிமிக்க சாலையில் செல்லும் போது பின்னாலேயே ஹாரன்  அடித்துக் கொண்டே வரும் நபர்களால் ஏற்படுத்தக்கூடிய அடாவடி செயல்பாடுகளைப் பற்றித்தான் நாம் இப்போது பேசப் போகிறோம்.

அநேக மக்கள் இதுபோன்ற தொந்தரவை அனுபவித்து இருப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். சிலர் அடிக்கும் இந்த ஹாரன் சத்தம் வண்டிகளின் இன்ஜின்  சத்தங்களைத் தாண்டி நம் காதுகளை வந்து தாக்கக்கூடியதாக தான் இருக்கிறது.  நாம் வாகனம் ஓட்டும்போது தினமும் இந்தக் கொடுமையை அனுபவித்து இருப்போம்  இதில் கொடுமையான விடயம் என்னவென்றால் இந்த ஹாரன் எதற்கு வண்டியில் கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் சிலர் ஆக்சிலேட்டரை அழுத்துவது போல ஹாரனை தொடர்ந்து அழுத்திக் கொண்டே வருகிறார்கள். 

ஹாரன் சத்தம் என்பது  தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஒரு ஒலி எழுப்பும் சாதனம். ஆனால் சிலர் மது அருந்தும் போது பக்கத்தில் சைடிஸ் ஆக ஊறுகாய் தொட்டுக் கொள்வதைப் போல வண்டி ஓட்டும் போது அடிக்கடி ஹாரனை தொட்டுக் கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான ஒரு மனநிலை என்று நமக்கு புரியவில்லை. இந்த ரோட்டில் நாம் மட்டும்தான் போக வேண்டும் மற்றவர்கள் உடனே வழி விட்டு நகர வேண்டும் என்ற நோக்கில்தான் இதுபோன்ற அச்சமூட்டும் செய்கையில் சிலர் ஈடுபடுகிறார்கள். 

இரண்டு சக்கர மோட்டார் வாகனம் ஓட்டுபவர்களில் சிலர் முதியவர்களாக இருக்கலாம், பெண்களாக இருக்கலாம் அல்லது இதய பிரச்சனை உள்ளவர்களாக  இருக்கலாம் சிலர் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவசர நிலையில் கூட இருக்கலாம் இப்படிப்பட்ட பலதரப்பட்ட  மக்கள் தினமும் சாலையில் பயணிக்கும் சூழலில் இந்த ஹாரன் சப்தம் அவர்களை எப்படி பயப்படுத்தும் அல்லது அச்சுறுத்தும் என்பதை இவர்கள் ஏன் உணர மறுக்கிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் எந்தவிதமான வாகன விதிகளையும் கடைபிடிப்பதில்லை சிக்னலில் வாய்ப்பு கிடைத்தால் நிற்காமல் செல்வது, ட்ராபிக் அதிகமானால் பிளாட்பார்மில் ஏறிச் செல்வது, ஒவ்வொரு வாகனத்தையும் வளைந்து வளைந்து முந்தி செல்வது, ஒரு வழிப் பாதையில் மீறிச் செல்வது, பச்சை விளக்கு விழுவதற்கு முன் பின்னால் இருந்து கொண்டே சிக்னலில் முன்னாடி இருக்கும் நபரை போக சொல்லி ஹாரனை  தொடர்ந்து அடிப்பது. இப்படி எல்லாவித விதிமுறைகளையும் கடைபிடிக்காத கனவான்கள் தான்  இந்த சமூகத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களையெல்லாம் யார் தான் தட்டிக் கேட்பது. எந்தவித சுயக்கட்டுப்பாடும் இல்லாதவர்கள் இப்படி தான்தோன்றித்தனமாக  சாலையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு திரிகிறார்கள். இந்த மாதிரியான நபர்களை கட்டுப்படுத்த சட்டம் இயற்றித்தான் தடுக்க முடியும். வாகன  உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும், விதிமீறல்கள் செய்தாலும், தலைக்கவசம் அணியாமல் சென்றாலும் அபராதம் விதிக்கும் காவல் அதிகாரிகள் அதிக ஒலி எழுப்பியபடி செல்லும் இந்த வாகன ஓட்டிகளை ஏன் தண்டிப்பதில்லை? அவர்களை துரத்திப் பிடித்து  தண்டிக்க, அபராதம் விதிக்கச் செய்வது இயலாத காரியம் என்று வைத்துக் கொண்டாலும் தற்போது அமலில் இருக்கும் வேகக்கட்டுப்பாடு கருவி போல ஒலிக்கட்டுப்பாடு கருவி என்ற ஒன்றை நிறுவி அதிக ஒளி எழுப்பும் வாகனத்திற்கு அபராதம்  விதிக்கலாமல்லவா. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அதைப் பற்றி அரசு தான் சிந்திக்க வேண்டும்.

மாசுக்கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒலி கட்டுப்பாடும் மிகவும் முக்கியம்தானே. காற்று மாசுபாடு ஏற்படுவது போல் போல் ஒலி மாசுபாடு ஏற்படுத்துவது இந்த சமூகத்திற்கு நாம் ஏற்படுத்தும் அநீதிதானே.  அதிகப்படியான டெசிபல் கொண்ட ஒலி எழுப்பிகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதி ஏற்கனவே இருந்தாலும் சுயக் கட்டுப்பாடு இல்லாது வாழும் இந்த மாதிரியான மாக்களால் எப்படி சமூகத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும்.  யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை அடுத்தவர்களை தள்ளிவிட்டு நாம் மட்டும் முன்பாக வீட்டுக்கோ, அலுவலகத்துக்கோ விரைவாக சென்று விட வேண்டும் என்ற குறுகிய நோக்கம் கொண்டு வாழ்பவன்  இந்த சமுதாயத்திற்கு என்ன விதைத்து விட்டுப் போகிறான். சுத்தத்தைப் பற்றி சிங்கப்பூரை உதாரணமாக எடுத்துப் பேசுகிறோம் உழைப்பைப் பற்றி ஜப்பானை உதாரணமாக எடுத்து பேசுகிறோம். அங்கு எல்லாம் அரசு எடுக்கும் நடவடிக்கையால் மட்டுமே இந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதில்லை அங்கு வாழும் ஒவ்வொரு மக்களின் சுய ஒழுக்கமும்,தங்களுக்குள்ள கடமையும் பொறுப்புணர்ச்சியும்  இருப்பதால் தான் அந்த சமூகத்தில் இப்பேற்பட்ட மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்கின்றன. 

சாலையில் வாகனத்தில் செல்லும்போது தேவையில்லாமல்  ஹாரன் அடிக்கும் பழக்கத்தை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். அதிகப்படியான ஹாரன் சப்தம் எழுப்புவதால் நாம் நெருக்கடியான பரபரப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற நெருக்கடி மனதிற்குள் உண்டாகிறது. எவ்வளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டாலும் ஒலி எழுப்பாமல் அமைதியாக ஓட்டிச் சென்றாள் நமக்கு மன அழுத்தம் குறைந்து வீடோ அலுவலகமோ சென்ற பின் நிம்மதியான ஒரு  சூழலை உருவாக்க முடியும். சிங்கப்பூர் ஜப்பான் போன்ற  நாடுகளைப் போன்று நாமும் உதாரணமாக வாழ்ந்து காட்டுவோம். வாழ்த்துக்கள்

ஆசிரியர் –

admin

About Author

1 Comment

  1. Chandran t

    July 17, 2025

    அருமையான செய்தி வாயழ்த்துக்கன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *