சகலகலா டாக்டர்! டாக்டர்! – சிறுகதை

சிறுகதை –

அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சி காலத்தில் ஜெர்மனியில் யூதர்களுக்கு உம்மென்றால் சிறைவாசம் இம் என்றால் வனவாசம் என்பது போன்ற ஒரு நிலை இருந்தது அதுபோல நம்ம சந்தோஷுக்கு தும்முனா சளி இருமுனா ஜலதோஷம் என்று எப்போதும் பாடாய் படுத்தி எடுக்கிறது. கத்திரி வெயிலிலும் கபத்தோட திரியிற கட்டுமஸ்தான உடம்புக்காரன் நம்ம சந்தோஷ். ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் என்ற போர்டை படித்தால் கூட அவனுக்கு டக்கென்று ஜலதோஷம் பிடித்து விடும். அந்த அளவுக்கு அவனுக்கு பக்கா பாடி.
பாவம் அவனோட பிரச்சனைக்கு அலோபதி டாக்டர்களிடம் சென்று அல்லாடி பார்த்து விட்டான் ஒன்றும் நடக்கவில்லை. சித்த மருத்துவர் சிலரிடம் சிக்கியும் பார்த்தான் சிக்கலை தீர்க்க முடியவில்லை. ஹோமியோபதியோ, நேச்சுரோபதியோ எந்த பதியாலும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. இம்யூனிட்டி பவர் இம்மியளவும் இல்லாத பாடி சோடா நம்ப சந்தோஷ். சரி என்ன பண்ணுவது இருக்கும் வரை இருமிகிட்டாவது இருப்போம் என்று மனதை தேற்றிக் கொண்டான். வெளியில் செல்லும்போது ஹாலிவுட்டின் ஆண்டனியோ பாண்ட்ராஸ் போல மாஸ்க்கை மாட்டிக் கொண்டு திரியும் நம்ம ஊரு மாஸ்க் ஆஃப் சாரோ.
யாராவது தும்மினாலோ, இருமினாலோ, சளியைக் காரித் துப்பினாலோ போதும் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே ஒரு பிரிஸ்கிரிப்ஷனை வாயில் வந்து நீட்டுவார்கள். என்னது வாயில் வந்து நீட்டுவார்களா என்று பதற வேண்டாம் தங்களுக்குத் தெரிந்த மருத்துவ குறிப்புகளை உடனே தட்டி விடுவார்கள் என்று சொல்ல வந்தேன். நம்மை விட நிறைய பேருக்கு நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது என்று சில நேரங்களில் ஆச்சரியப்பட்டு போகிற அளவுக்கு மெடிக்கல் டிப்சை அள்ளி வீசுவார்கள்.
ஒரு நாள் தன் நண்பரை பார்க்க அவருடைய அலுவலகம் சென்றான் சந்தோஷ். அப்போது பார்த்து சாமி படத்திற்கு சாம்பிராணி போட அதிலிருந்து வந்த புகை தலைவனுக்கு மூக்கில் ஏரி நாசியை தொலைத்து மூளை வரை சென்று விட்டது. சும்மா விடுமா அவனுடைய உடம்பில் உள்ள பாக்டீரியா வந்ததே ஒரு தும்மல் கர்சீப்பை வாயில் திணித்தபடி வாசலுக்கு ஓடி வந்தான். இதை பார்த்த நண்பனின் தூரத்து உறவினர் என்ன சார் இந்த புகைக்கே தும்புறீங்க உங்க பாடி ரொம்ப வீக் சார் என்று டக்கென்று கண்டுபிடித்துவிட்டார். சார் ரொம்ப பயங்கரமான ஆளா இருப்பாரோ என்று வடிவேலு பாணியில் சந்தோஷ் அவரைப் பார்க்க, நான் சொல்ற மருந்த சாப்பாட்டுக்கு முன்னாடியும், சாப்பாட்டுக்கு பின்னாடியும் சாப்ட்டீங்கணா மூணு நாள்ல முடிச்சு விட்றலாம் என்றதும். என்ன சார் சொல்றீங்க முடிச்சு விட்ருவீங்களா என்று பதறி போய் கேட்கிறான். உங்கள இல்ல சார் உங்க பிரச்சனையை முடிச்சு உட்ராலானு சொன்னேன் இதுக்கு போய் பயப்படுறீங்களே என்று சமாதானம் சொல்கிறார்.
சரி சார் என்ன மருந்து சொன்னீங்க என்று அவரிடம் மருந்து டீடைலை கேட்க சார் இப்ப எல்லாம் இயற்கை மருத்துவம் தான் சார் பெஸ்ட். எல்லா நோய்க்கும் நம்மகிட்ட சொல்யூஷன் இருக்கு சார் என்று காண்பிடண்டா சொல்கிறார். அடடா சரியான நேரத்தில் சரியான ஆளதான் சந்திச்சிருக்கோம் இவரை கெட்டியா புடிச்சுக்க வேண்டியது தான் என்று மனதுக்குள் குதுகளித்துக் கொண்டான் சந்தோஷ் அவரிடம் பவ்யமாக சார் நீங்க சித்தா டாக்டரா என்று கேட்க இல்லப்பா என்கிறார். அப்ப ஹோமியோபதி இல்லன்னா நேச்சுரோபதி கரெக்டா என்று கையை சுண்டியபடி கேட்க, அட இல்லப்பா என்று மறுக்கிறார். உங்களப் பாத்தா யுனானி டாக்டர் மாதிரியும் தெரியல, உங்க உடம்ப பாத்தா பிசியோதெரபி டாக்டராவும் இருக்க சான்ஸ் இல்ல அப்ப யார் சார் நீங்க என்று குழப்பமாக கேட்கிறான்.
அட நீங்க சொல்ற எந்த டாக்டரும் இல்ல இவ்வளவு நாலேஜ் எனக்கு எங்கருந்து வந்ததுனு தெரியுமா என்று கித்தாப்பாய் கேட்கிறார். தெர்லசார் என்று அப்பாவியாய் ஒப்புக் கொள்கிறான். அவர் சிரித்துக்கொண்டே வாட்ஸ்அப்ல இருந்து தான் என்றதும். என்னது வாட்ஸ் அப்பில இருந்தா என்ன சார் சொல்றீங்க. அட ஆமாங்க அதுலர்ந்துதான் கத்துக்கிட்டேன். டெய்லி வாட்ஸ் அப்ல இத சாப்ட்டா இந்த நோய் குணமாயிடும் அத சாப்ட்டா அந்த நோய் குணமாயிடும்னு நிறைய ஃபார்வர்டு மெசேஜ் வரும்ல அத படிச்சு பார்ப்பேன் சில பேர் கிட்ட சொல்லுவேன் அதுல சில பேருக்கு சரியாயிடும். ஓகே அப்ப நம்ம சொல்றது கரெக்ட் தான் அப்படினு இது சம்பந்தமான வாட்சப் குரூப்ல என்ன இனச்சுக்கிட்டேன். ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் கூட விடறதுல்ல எல்லாத்தையும் ஒன்னுவிடாம படிச்சிடுவேன். அதனால நிறைய பேர் நம்மள விஷயம் தெரிஞ்ச ஆள்னு பேசிக்கிறாங்க என்று பந்தாவாக சொல்ல,

சந்தோஷுக்கு வந்ததே கோபம். யோவ் அவஅவன் பல வருஷம் படிச்சு டாக்டராகி ட்ரீட்மென்ட் பாத்துட்டு இருக்காங்க. அதுவே எனக்கு சரியாகமாட்டேங்குதுனு கவலப்பட்டுட்டு இருக்கேன். நீ என்னடானா வாட்ஸ்அப்ல படிச்சிட்டு வந்து டாக்டர் மாதிரி எல்லாத்துக்கும் வைத்தியம் பாத்துட்டு திரியுற எனக்கு வர்ற கோவத்துக்கு உன்ன…. என்று பல்லை கடிக்கிறான். அட நீ என்னப்பா இப்படி கோச்சிக்கிற நான் டிப்ஸ் குடுத்து எத்தன பேருக்கு சரியாயிருக்கு தெரியுமா? எனறு கூசாமல் அள்ளிவிடுகிறார், அப்ப நீ வாட்ஸ்அப் யுனிவர்சிட்டில படிச்சு வாட்ஸ்அப் டாக்டர் ஆகியிருக்க அப்படித்தானே. யாராவது தும்முனா இருமுனா போதும் வாட்ஸ்அப்ப படிச்சிட்டு வந்து ஆளாளுக்கு டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்சிறீங்க. உங்கள எல்லாம் வச்சு வெளுக்கனும்டா
அவஅவன் ஒடம்புக்கு என்ன மருந்து செட் ஆகும்னு டாக்டருக்கு படிச்சவங்களுக்குத் தான் தெரியும் நீங்க என்னடானா வாட்ஸ்அப்ல வர ஃபார்வேர்ட் மெசேஜ் பாத்துட்டு முழுசா மாறின சந்திரமுகி மாதிரி டாக்டராவே மாறி இருக்கீங்க இனிமே எவனுக்காவது வாட்ஸ்அப்ப பாத்துட்டுவந்து டிப்ஸ் கொடுக்குறத பார்த்தேன் அந்த இடத்திலேயே வந்து ஓ வாயிலயே மிதிப்பேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு கோபத்தோடு நண்பனிடம் கூட சொல்லாமல் வெளியேறிவிட்டான். இப்படி தான் நிறைய பைத்தியங்க ஊருக்குள்ள வாட்ஸ்அப் டாக்டர்களா திரிஞ்சிக்கிட்டு இருக்கானுங்க. என்னங்க நான் சொல்றது சரிதான?
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
July 19, 2025நீங்க செல்வது
ரொம்ப சரி தான் உண்மையான விசயம் தாங்க
சொல்லி இரூக்கிக மிக்க நன்றி,