தொட்டவனும் கெட்டான்! விட்டவனும் கெட்டான்! – சிறுகதை


சிறுகதை – பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பகுதி. சென்னையின் புதிய அடையாளமாக மாறிப்போன OMR. IT கம்பெனிகளும் அதை ஒட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளும் நிறைந்து காணப்படும் புதிய நகரம். ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த இந்த பகுதி இப்போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்த கட்டிடங்களும், மாள்களும், ரெஸ்டாரண்டுகளும், ஹைடெக் தள்ளுவண்டிக் கடைகளும் இப்படி எல்லாமுமாய் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கிறது.
அந்தக் கார்ப்பரேட் உலகத்திற்குள் நவீன் என்பவன் ஒரு ஐடி கம்பெனியில் HR ஆக வேலைப் பார்க்கிறான். வொளுப்பானத் தோற்றம் , பளிச்சென்ற உடை, அழகாக வாரிய தலைமயிர். சாயலில் விராட் கோஹ்லியை ஞாபகப்படுத்தும் முக அமைப்பு. 35 வயது 90ஸ் கிட்ஸ் ஆனால் நேரில் பார்த்தால் 2K கிட்ஸ் போல் காட்சியளிப்பான். வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமை அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது .
நவீன் அலுவலகத்தில் நுழைந்தவுடன் அவனுடைய இருக்கைக்கு செல்லாமல் எப்பொழுதும் நேராக ரெஸ்ட் ரூம் இருக்கும் இடத்திற்கு சென்று அலங்காரம் செய்து விட்டு கலைந்த உடைகளை சரி செய்து விட்டு அதன் பிறகு தான் தன்னுடைய அறைக்கோ மற்ற வேலைக்கோ செல்வான். இதுதான் அவனுடைய தினசரி துவக்கம். இன்றைய நாளும் அதே போல் தான் வேகமாக ஓய்வறைக்கு செல்ல அங்கே ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் கதிரேசன் தரையை மாப் போட்டு துடைத்துக் கொண்டிருந்தான் கதிரேசனை பார்த்தபடியே உள்ளே சென்றான் நவீன்.
தன்னுடைய அன்றாட அலங்காரங்களை முடித்துவிட்டு வெளியே வந்த நவீன் கதிரேசனை பார்த்து கதிரேசா ஒரு நிமிஷம் இங்க வாங்க என்று அழைக்க. தோ வர்ரேன் சார் என்று மாப்பை ஓரமாக வைத்துவிட்டு நவீனிடம் வந்து சொல்லுங்க சார் என்று பவ்வியமாக நிற்கிறான். நான் உன்ன ரொம்ப நாளா பாத்துட்ருக்கேன். நீ எப்ப பாத்தாலும் இந்த கசங்கன சர்ட்டோட தான் ஆபீஸ்க்கு வர்ற, ஏன் உனக்கு நல்ல சர்டே கெடையாதா, அதுவும் இந்த ஒரே சர்ட்ட தான் எப்ப பார்த்தாலும் போட்டுட்டு வர, ஏன் நீ சம்பளம் வாங்குறதில்லையா ஒரு நாலஞ்சு சர்ட் வாங்கி வச்சுக்க வேண்டியது தான இங்க பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வருவாங்க இப்படி கசங்குன சட்டையோட வரியே அட்லீஸ்ட் அயன் பண்ணியாவது போட்டுட்டு வரலாம்ல. பாக்க நல்லாவா இருக்கு என்று கடிந்து கொண்டான். உடனே கதிரேசன் சாரி சார் இனிமே சரிப்பண்ணிக்கிறேன் சார் என்று பதில் கூற சரி நாளைலருந்து நல்ல சர்ட் ஏதாவது இருந்தா போட்டுட்டு வா சரியா என்று வார்ன் பண்ணிவிட்டு ஒரு மாசத்துல ஹவுஸ் கீப்பிங்ல இருக்கிற எல்லாத்துக்கும் யூனிஃபார்ம் ரெடி பண்ணி தந்துடறேன் அதுக்கப்புறம் எல்லாரும் யூனிபார்மோட தான் ஆபீஸ்க்கு வரணும் புரிஞ்சுதா என்று சொல்ல, புரிஞ்சுது சார் என்றபடி கதிரேசன் பவ்வியமாக நிற்கிறான். நவீன் அங்கிருந்து புறப்பட கதிரேசன் மாப்பை எடுத்துக்கொண்டு ஹவுஸ் கீப்பிங் அறைக்கு செல்கிறான்.
கதிரேசனுக்கு மனைவி இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை. தன்னுடைய கிராமத்தில் பிழைக்க வழியில்லாமல். விவசாயம் செய்ய வழியில்லாமல் தனக்கிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று கடன்களை அடைத்து விட்டு காசில்லாமல் தனியாக சென்னைக்கு வந்து ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வந்தவன் தான் கதிரேசன். விவசாயம் செழித்து வளர்ந்த காலம் போய் இப்போது விவசாயம் நலிந்து போய்விட்டதை நவீன் போன்றோர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. சென்னை போன்ற மெட்ரோபாலிட்டன் நகரத்தில் அதுவும் ஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் பலருக்கு விவசாயிகளின் இன்றைய நிலை புரியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
கதிரேசன் சென்னையில் ஒரு குறுகிய தெருவில் காற்றும் வெளிச்சமும் புகாத நெருக்கமான அடைத்து வைக்கப்பட்ட ஒரே ஒரு அறையைக் கொண்ட வீட்டில் தான் வசிக்கிறான். அந்த வீட்டில் ஒருவர் மட்டுமே கால்நீட்டி படுப்பதற்குத்தான் இடமுண்டு. அந்த இடத்திலேயே பாயை சுருட்டி வைத்து விட்டு தலை மாட்டில் சமையல் செய்து சாப்பிடக் கூடிய நிலைதான் கதிரேசனுக்கு. உதாரணத்துக்கு ஒரு பத்து பேர் செல்லக்கூடிய ஒரு லிஃப்டின் அளவே இருக்கும் வீடுதான் கதிரேசனின் வீடு.. அவன் வசிக்கும் வீட்டில் குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதே பெரும்பாடு. குளிப்பதற்கோ துணி துவைப்பதற்கோ சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தண்ணீர் கஷ்டம் காசு கொடுத்து தான் தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை எங்கே போவான் கதிரேசன் அவனுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் கிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு பணம் அனுப்பவே போதவில்லை இதில் சாப்பிடுவதா இல்லை தண்ணீருக்கு செலவு செய்வதா ஏதோ கிடைத்த தண்ணீரில் குளித்துவிட்டு தன் காலைக்கடனை அலுவலகத்தில் தான் செய்து முடிப்பான். இதில் எங்கிருந்து இஸ்திரி போட்ட சட்டை போட முடியும்.சரி நம்முடைய அதிகாரி நவீன் சார் சொல்லிவிட்டாரே அவருடைய பேச்சை எப்படி மீற முடியும் என்பதால் தன்னுடைய ஒருவேளை சாப்பாட்டை குறைத்துக் கொண்டு அந்த காசை மிச்சம் பிடித்து சட்டைக்கு இஸ்திரி போட்டு அணிந்து வர ஆரம்பித்தான்.
இப்படி சில வாரங்கள் செல்கிறது கதிரேசனை நவீன் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவர் முன்னாடி நடந்து செல்கிறான் அவர் சொன்னபடி இஸ்திரி போட்ட சட்டை அணிந்து கொண்டு வருகிறேன் என்பதை பார்த்து அவர் ஏதேனும் பாராட்டுவார் என்று நினைக்கிறான் ஆனால் அவர் பார்த்தும், சில நேரங்களில் பார்க்காமலும் சென்று விடுகிறார். சரி நம்மை பார்ப்பதா அவர்களுடைய வேலை அவர்களுக்கு ஏராளமான வேலை இருக்கும் இதில் நம்மை கண்காணிப்பது முக்கியமா என்ன என்று தன்னையே சமாதானப் படுத்திக் கொள்கிறான்.

மாதங்கள் செல்கிறது அலுவலகத்தில் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதாக கதிரேசன் உணர்கிறான். அரசல் புரசலாக ஒரு செய்தி அவனுடைய காதில் வந்து விழுகிறது அதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைகிறான் HR நவீனை வேலையை விட்டு நீக்கப் போவதான செய்தி தான் அது. என்ன காரணம் எதற்காக அவரை நீக்க போகிறார்கள். அவர் நன்றாகத்தானே வேலை பார்ப்பார் அவரை ஏன் வேலைய விட்டு நீக்க போகிறார்கள் புரியவில்லையே என்று தனக்குள்ளையே குழம்பிக் கொள்கிறான். இதைப் பற்றி அவரிடமே கேட்டு விடலாம் என்று முடிவு செய்து மறு நாள் அவருடைய வேலை முடித்து வீட்டிற்கு கிளம்ப அவர் காரில் ஏறுவதற்கு முன் அவரிடம் சென்று சார் ஒன்னு கேப்பேன் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்று தயங்கி தயங்கி கேட்கிறான் அதற்கு நவீன் பரவால்ல சொல்லுங்க கதிரேசன் என்று சொல்ல சற்று தயக்கத்தோடு இல்ல சார் உங்கள வேலய உட்டு தூக்கப் போறதா கேள்விப்பட்டேன் அது உண்மை தானுங்களா என்று கேட்க, ஃபேக்ட் என்னன்னா இந்த கம்பெனில என்ன மட்டுமில்ல நெறைய பேர வேலைய உட்டு தூக்கப் போறாங்க. பிரஷ்ஷரா இருந்தா உடனே வேலை கிடைக்கும் அதுவே எக்ஸ்பீரியன்ஸ் ஆக ஆக வேலைய உட்டு தூக்கிடுவாங்க. அதுல சில நம்பர் கேம்ஸ் இருக்கு. அது உங்களுக்கு சொன்னா புரியாதுனு என்று நெனைக்கிறேன் இப்ப நடக்கிற கிரைசிஸ்னால என்ன வேலைய உட்டு தூக்குறாங்க. நெறைய பேர பேப்பர் போட சொல்லிட்டாங்க வேற வேலைய தேட ஆரம்பிக்கணும் நெறைய கமிட்மெண்ட் இருக்கு எப்புடி சமாளிக்க போறேன்னு தெரில. வேற வேல கிடைச்சா அதுவும் நிரந்தரமா இருக்குமான்னு டெபனட்டா என்னால சொல்ல முடியல.
ரொம்ப ஸ்ட்ரெஸ்சா போயிட்டுருக்கு. ஃபேமிலியும் ரொம்ப பயப்புடுறாங்க அதனால ஒரு முடிவு பண்ணிருக்கோம் இங்க இருக்கிறத விட எங்க சொந்த ஊருக்கு போயிடலாம்னு நாங்க முடிவு பண்ணிருக்கோம் அப்பாவுக்கு சொந்தமா ஒரு 10 ஏக்கர் நிலம் ஊர்ல இருக்கு அதுல ஏதாவது இயற்கை விவசாயம் பண்ணி பாக்கலாம்னு தோனுது. இனிமே இந்த ஐடி வேலை பார்க்கிறது நமக்கு செட்டாகாது விவசாயத்த ஒரு ட்ரை பண்ணி பாக்கலாம்னு நெனைக்கிறேன். எல்லோரும் சரின்னு சொல்லிட்டாங்க. திருப்ப கிராமத்துக்கே போலாம்னு இருக்கேன்.
நவீன் விவசாயத்தைப் பற்றி சொல்ல சொல்ல கதிரேசனுக்கு தலை கிறுகிறுவென்று சுற்ற ஆரம்பித்தது. எவ்வளவு அசால்டாக விவசாயத்தை ஒரு ட்ரை பண்ணி பார்க்கலாம்னு சொல்றாங்க. அது எவ்வளவு பெரிய விஷயம் அதுலயே புரள்ற எங்களாலேயே விவசாயத்தில தாக்கு பிடிக்க முடியல. யோசித்துக் கொண்டிருக்கையில். கதிரேசன் உங்கள வேலைய உட்டு தூக்க மாட்டாங்க அதனால நீங்க கவலைப்படாம இருக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் கதிரேசன் அவரைப் பற்றியே யோசித்து கொண்டிருக்கிறான்.. எப்ப பாத்தாலும் ஏஸிக் காத்துல வாழ்ற ஆளுங்க காட்லயும் மேட்லயும் அடிக்கிற வெயில்ல வயல்ல எப்படி வேல பாப்பாங்க .போக வேணானு சொல்ல தான் தோனுது. நாம சொல்லி அவுரு கேப்பாரா. ஏழைச் சொல் என்னக்கி அம்பலம் ஏறிருக்கு என்ற பழமொழியை நினைத்துக் கொள்கிறான். சரி என்ன நடக்குமோ நடக்கட்டும். என்று நினைத்தவாறு விடை பெறுகிறான் கதிரேசன்.

நவீன் வழக்கமாக காரில் ஏறியவுடன் முதலில் FM மை ஆன் செய்வான். அதுபோல காரில் FM ஐ ஆன் செய்ததும் கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க இது 98.3 FM. என்று முடிய பாடல் ஒலிக்கிறது. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி…..விவசாயி……நவீன் காரை ஒட்டியபடி கண்ணாடியை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு கண்ணாடி நம்ம புள்ளைங்களாம் யார் பேச்ச கேட்டுருக்குதுங்க போ போய் அடிப்பட்டு திரும்பி வரட்டும் என்று அவனையே பார்த்து சிரிக்கின்றது……
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
நீதி : ( தனக்குத் தெரிந்த தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடாமல் அத்தொழிலை கைவிட்டவனும் சரி. நன்கு தெரியாத தொழிலில் ஈடுபட்டாலும் சரி இறுதியில் இருவருக்கும் பலன் கிடைக்காது என்பதுதான் இந்த சிறுகதையின் மூலம் நான் சொல்ல வரும் செய்தி)
Chandran t
July 21, 2025Very nice