சிறுகதைகள்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் – சிறுகதை

சிறுகதை – டிசம்பர் மாதமொன்றில் லண்டன் நகரம் பணிப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. ஒரு கேக் துண்டில் தேங்காய் துருவல் எப்படி தூவி இருக்குமோ அதுபோல ஒவ்வொரு கட்டிடங்களிலும் பணித்துளிகள் தூவிக் கிடக்கின்றன.  இந்த ரம்யமான சூழலில் மனிதர்களைப் போல் மரங்களும் அசைவற்று உறங்கிக் கொண்டிருந்தன. 

நான்கு அடுக்கு கொண்ட ஒரு மாடி வீடு. அந்த மாடி வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள ஐந்தாம் நம்பர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகிறான் அண்ணாதுரை. வீட்டின்  கதவில்  மாற்றப்பட்டிருந்த பெயர் பலகையை பார்க்கிறான் அதில் M. தேவேந்திரன். ப்ரொபசர் குயின் மேரிஸ் யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன் என்று போடப்பட்டிருந்தது. அந்தப் பெயர் பலகை சரியாக இல்லாமல் கோணலாக இருப்பதை பார்த்து அதை நேராக்கும் படி மாற்றுகிறான். ஆனால் அந்தப் பெயர் பலகை மீண்டும் பழையபடி கோனலாகவே வந்து நிற்கிறது. மீண்டும் சரி செய்யலாம் என்று கையை உயர்த்தியவன் கதவு திறக்கவே கையை கீழே  இறக்குகிறான். கதவை திறந்தபடி   55 வயது மதிக்கத்தக்க தேவேந்திரன் காட்சியளித்தார் . பிறகு அவராகவே பேசத் தொடங்குகிறார். எஸ் வாட் யூ வாண்ட் என்று அண்ணாதுரை பார்த்து கேட்கிறார். சார் மிஸ்டர் தேவேந்திரன் என்று கைகுலுக்க கையை நீட்டுகிறான் துரை. எஸ் ஐ அம் என்று தேவேந்திரன் பதிலுக்கு கையைப் பிடித்து குலுக்குகிறார். பிறகு யூ ஆர் என்று  கேட்க,  சார் ஐ அம் அண்ணாதுரை பிரிம்மிங்ஹாம் என்றதும். தேவேந்திரன் முகம் இறுக்கமாகிறது. பிறகு சட்டென்று சுதரித்தவாறு. ப்ளீஸ் கம் என்று உள்ளே அழைத்து செல்கிறார். அண்ணாதுரை அவர் பின்னாடியே செல்கிறான்.

இருவரும் லிவிங் ரூமில் நிற்கிறார்கள்.  தேவேந்திரன் ஒரு சோபாவை காட்டி ப்ளீஸ் சிட் டவுன் என்று அமர சொல்கிறார். தேங்க்யூ சார் என்றபடி துரை அமர்கிறான். வீட்டை சுற்றி முற்றி பார்க்கிறான். சுவற்றில்  வாள் கேடயம் போன்ற அழகு பொருள் மாட்டப்பட்டிருந்தது. இன்னொரு பக்கம் அரண்மனை போன்ற  படங்கள் மாற்றப்பட்டிருந்தன. மறு பக்க சுவற்றில் ராணி எலிசபத்திடம் தேவேந்திரன் பரிசு பெறுவது போன்ற புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. துரை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்ன தம்பி என்ன சாப்பிடுறீங்க டி ஆர் காபி என்று துரையை பார்த்து கேட்கிறார். துரை இல்ல சார் பரவாயில்ல இப்பதான் சாப்ட்டு வந்தேன் என்று பார்மாலிட்டி வார்த்தைகளை உதிர்க்கிறான். தேவேந்திரன் சொல்லுங்க என்ன விஷயமா வந்துருக்கீங்க என்று நேரடியாகவே துரையை பார்த்து கேட்க. அவனும் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.

சார் உங்க பொண்ணு திவ்யா  எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதான் உங்கள மீட் பண்ணி பேச சொன்னாங்க என்று சொல்லும் போது தேவேந்திரன் தன்னுடைய கால் மேல் காலை போட்டபடி சாய்ந்து சோபாவில் அமர்கிறார். அமர்ந்து விட்டு என் பொண்ணு சொன்னது இருக்கட்டும் தம்பி நீங்க என்ன சொல்ல வரீங்க அதை சொல்லுங்க என்ற ஒரு எகத்தாலமான தொணியில் கேள்வியை கேட்கிறார். துரை இதை எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் சமாளித்துக் கொண்டு சார் நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வந்துடுறேன் நானும் திவ்யாவும் லவ் பண்றோம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறோம். ஆனா நீங்க அதுக்கு சம்மதிக்கலன்னு சொன்னாங்க என்றதும் தேவேந்திரன்  ஒரு நிமிடம் கழித்து எதுக்கு சம்மதிக்கலைனு  உங்களுக்கு புரியலைன்னா அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு தம்பி என்று எழுந்து வாலும் கேடயமும் இருக்கும் சுவற்றின் இடத்திற்கு சென்று அதை பார்த்தபடி நிற்கிறார்.

துரை அவரைப் பார்த்து அங்கிள் எனக்கு ஓரளவு புரியுது பட் அத உங்க கிட்ட நேரடியாவே கேட்டுட்டு போயிடலாம்னு தான் வந்தேன் என்ற வினாவுடன் பதிலுக்காக தொக்கி நிற்கிறான். தேவேந்திரன் திரும்பி பார்த்து புரிஞ்சுகிட்டா ரொம்ப நல்லது. சரி தம்பி நேர்ல கேட்கணும்னு வந்துட்டீங்க நேரடியாவே பதில் சொல்றேன். என்னதான் ஃபாரின்ல நாம ஒண்ணா வாழ்ந்தாலும் உங்க சாதி வேற, ஏன் சாதி வேற சோ உங்க சாதில  கல்யாணம் பண்ணி கொடுக்கிற   அளவுக்கு நாங்க இன்னும் பக்குவம் ஆகல என்றதும். அண்ணாதுரைக்கு கோபம் கொப்பளிக்கிறது. சட்டென்று சோபாவை விட்டு எழுந்தவன் மீண்டும் அமைதியாக அமருகிறான். பிறகு நிதானமாக தேவேந்திரனை பார்த்து சார் இன்னுமா சார் சாதி பார்க்கிறீங்க  நாம வாழ்றது லண்டன்ல  இப்பல்லாம் யார் சாதி பார்க்கிறாங்க அப்புடினுதான் நெனச்சுட்ருந்தேன் ஆனா இங்கேயுமா என்று ஆதங்கத்துடன் கேட்கிறான். உடனே தேவேந்திரன் கேள்வியை முடிக்கும் முன் கையை நீட்டி சீரியசாக இப்பல்லாம்  சாதி  பார்க்கிறதிலன்னு யார் சொன்னா? இந்த Facebook youtubeல பகுத்தறிவு, சமூக நீதி, சாதி பாக்குறது தப்பு அப்புடினு அதிகமா பேசிட்ருப்பாங்க  அத பாத்து நீங்க கன்வின்ஸ் ஆயிட்டீங்க. அதே பேஸ்புக் யூடுப்ல இன்னொரு சைடுல பாத்தீங்கன்னா உயர் சாதிப் பெருமையை பத்தி நிறைய பேர் பேசுவாங்க. அதை நீங்க கவனிக்காம உட்டுருப்பீங்க. எப்பவுமே சாதி உயிர்ப்போட தான் இருக்கும் அது எந்த நாட்டுக்கு போனாலும் மாறாது என்றதும். 

துரை  இறுக்கமான முகத்துடன் எழுந்து எலிசபெத்  போட்டோ மாட்டி இருக்கும் சுவற்றிற்கு போய் நின்று அந்த படத்தை பார்த்து விட்டு திரும்பி தேவேந்திரனை பார்த்து  சரி சார் நாங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டோம். சாதி இன்னும் மாறலன்னு வெச்சுக்குவோம்  ஆனா நீங்க படிச்சவர் தானே அதுவும் உங்க படிப்பை வெச்சு  லண்டன் வந்து ப்ரொபஸரா இருக்கீங்க. உங்க மனசுல கூட மாற்றம் வரலையா என்று கவலையோடு கேட்கிறான். உடனே தேவேந்திரன் அங்கிருந்து நகர்ந்து சோபாவில்  வந்து அமர்கிறார்.  நிமிர்ந்து பார்த்து என்னப்பா புரியாத புள்ளையா இருக்க படிப்புக்கும்  இதுக்கும் என்ன சம்பந்தம்? ஒவ்வொருத்தர் பொறப்புக்கும் ஒரு ஹிஸ்ட்ரி இருக்கு. நான் ஆண்ட பரம்பரையில பொறந்தேன்ற பெருமைய மறந்துற முடியுமா என்று சொல்லி முடிக்கவும்  துரை வேகமான வார்த்தைகளோடு  சார் இப்ப நீங்க ஒன்னும் மன்னர் இல்லையே! இப்ப சாதாரண காலேஜ் ப்ரொபஸர்தான  என்று சற்று ஆவேசமாக கேட்க. அதற்கு பதிலடியாக தேவேந்திரன் இருந்தாலும் எங்களுக்குன்னு ஒரு அடையாளம் இருக்குல்ல. பேருக்கு பின்னாடி அடையாளத்தை போட்டுக்கலனாலும்  வந்த வழிய மறந்துற முடியுமா என்று ஆணவமாக பதில் சொல்கிறார். அப்ப உங்க அடையாளத்தோட இருக்கிற உங்க சாதியிலேயே பிறந்த ஒரு சாதாரண லேபருக்கு உங்க பொண்ண கட்டி கொடுப்பீங்களா என்று பதில் கேள்வி கேட்கிறான் துரை. தேவேந்திரன் சிரிச்சுக்கிட்டே அது எப்படிப்பா முடியும் ஒரு பிச்சக்காரனுக்கு தன் பொண்ண எந்த பாதர்தான் கட்டிக் குடுப்பான் என்று சொல்ல.

அண்ணாதுரை  அதுதான் அங்கிள் சொல்றேன் அப்படி பார்த்தா நான் ஒன்னும் பிச்சைக்காரன் இல்லையே நா ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனில பெரிய பொறுப்புல இருக்கேன். வசதின்னு பார்த்தா உங்களை விட ஜாஸ்திதான் அப்ப எனக்கு ஏன் கட்டிக் கொடுக்க மாட்டீங்க என்று ஆதங்கத்துடன் கேட்கிறான்.  தேவேந்திரனடமிருந்து சற்றும் யோசிக்காமல்  பதில் வந்தது. பணம் இருந்தா போதுமா தம்பி என்று பலமாக சிரிக்கிறார் பிறகு தொடர்ந்து உயர உயர பிறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுதுல என்று கிண்டல் தொணியில் பதிலளிக்க அதைக் கேட்டு அண்ணாதுரைக்கு மிகுந்த வருத்தமும் கோபமும் உண்டாகியது. சரி சார் நீங்க சொல்ற மாதிரி நாங்க ஊர்க் குருவி தான் எனக்கு முன்னால பிறந்த நிறைய  ஊர்க் குருவிங்க  பறந்து வந்துதான் எங்க சமுதாயத்தை முன்னேற  பாடுபட்டாங்க. அவங்களோட நெழலில இருந்து தான் நாங்க இப்ப சந்தோஷமா வாழ்ந்தகிட்டிருக்கோம்.

ஒன்னு மட்டும் சொல்றேன் சார் உங்க பொண்ணு வேணாம்னு சொல்லிட்டு நான் இப்ப போயிடலாம் எனக்கும் சுயமரியாதை இருக்கு. ஆனா என்னோட காதல் அப்புடி சொல்ல உட மாட்டேங்குது. நீங்கல்லாம் எந்த நாட்டுக்கு போனாலும் எவ்வளவு வசதியா வாழ்ந்தாலும் அவங்களோட கல்ச்சர கத்துக்கிட்டாலும் உங்க மனசுல இருக்கிற இந்த அழுக்கான சாதி அடையாளங்கள எங்க போனாலும் சுமந்து கிட்டே திரியிறீங்க. இந்த அழுக்கு உங்ககிட்டருந்து எப்பவும் மாறாதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். இருந்தாலும் திவ்யாவோட  அப்பான்ற முறையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம். வாய்ப்பு கிடைச்சா மீண்டும் ஒரு நாள் பாப்போம் சார் என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்து விட்டு கதவை திறந்து கொண்டு விடு  விடுவென்று வெளியேறினான்.

தேவேந்திரனோ மெலிதான புண்ணகையுடன் மீசையை தடவியபடி சோபாவில்  சாய்ந்தபடி  ஆலோசனையில் மூழ்கினார். கதவில் மாட்டியிருந்த பெயர்ப் பலகை மாட்டப்பட்ட நாளிலிருந்து  கோணலாகத்தான் இருக்கிறது. அதை நேராக்க  தேவேந்திரன் மனது வைத்தால் தான் முடியும்.

– ஃப்ரெடி டிக்ரூஸ் – 

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

சிறுகதைகள்

குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச
சிறுகதைகள்

கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து