வேள்பாரி…! வேறமாறி…!

ஒரு வரலாற்று நாவலின் கதை……

வரலாற்று நாவல் – மதுரை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற வேள்பாரி என்ற வீரயுக நாயகனின் கதையைப்பற்றிய ஒரு பகுப்பாய்வு தான் இந்த கட்டுரை.
அறக் கருத்துக்கள் கொண்ட வரலாற்று நாவல்களையும், வரலாற்று திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். வரலாறு சார்ந்த வீரம் சொரிந்த கதைகளில் அறம் சார்ந்த கருத்துருவாக்கங்கள் கொண்ட படைப்புகள் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட காலங்களும் உண்டு. தற்போதைய கார்ப்பரேட் உலகில் அறம் சார்ந்து இயங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இதற்கு முன்னால் வரலாற்றில் அறம் சார்ந்த செயல்களை செய்யக்கூடிய மனிதர்களும், அறம் சார்ந்த சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒரு சிலரும் வாழ்ந்திருக்கலாம். அல்லது கற்பனையாகக் கூட இருந்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அதை நம்மால் அரிதியிட்டு கூற முடியாது. இருந்தாலும் நாம் படிக்கும் வரலாற்று கதைகளும் சரி, நாம் தெரிந்து கொண்ட வரலாற்று நிகழ்வுகளை பற்றிய தொகுப்புகளிலும் சரி அறத்தை கடைப்பிடிக்கக் கூடிய சில மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். கற்பனை கதைகளும் நிறைய இருக்கின்றன. தற்போதைக்கு இதில் எது கற்பனை, எது உண்மை என்பதை பற்றி ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவையில்லை என்றே நான் கருதுகிறேன்.
அறம் சார்ந்த சிந்தனையை செயல் வடிவமாக கொண்ட ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கிறான் என்பதை பற்றி நாம் படிக்கும் போதும், தெரிந்து கொள்ளும் போதும் நமக்குள் மெய்சிலிர்க்கும் உணர்வுகள் ஏற்படுகின்றன. அப்படித்தான் இந்த வேள்பாரி நாவலில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பாரியைப் பற்றி விவரித்திருக்கிறார். முதல் பக்கத்தில் தொடங்கி கடைசி பக்கம் வரை பாரியை பற்றிய விவரங்கள் பரந்து விரிந்திருக்கிறான. இம்மியளவு கூட அறத்தை தவறவிட்டான், பிசகி விட்டான் என்று ஒரு இடத்திலும் சுட்டிக்காட்ட முடியாத அளவிற்கு ஒரு மனிதன் அறம் சார்ந்து வாழ்ந்திருக்கிறான் என்று இந்த நாவலின் மூலம் உணரும் போது நம் உடல் புல்லரித்து போய் நிற்கின்றது.

வேள்பாரியை பற்றின வீரமான கதைகளாகட்டும், வேள்பாரியின் கருணையை பற்றி சொல்வதாகட்டும். பல இன குழுக்களை காப்பாற்றுகின்ற காப்பாளனாக அவனை சித்தரிக்கும் போதாகட்டும் அவன் மேல் அளவுகடந்த காதல் பிறக்கின்றது. மாபெரும் மன்னர்களை தாண்டி பாரியின் சிந்தனை எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை கொண்ட ஒரு நீண்ட வரலாற்று நாவல் என்னை ஆழமாக பாதித்தது. கல்கியின் சரித்திர நாவல்களை படித்திருக்கிறேன். சாண்டில்யன் நாவல்களை படித்திருக்கிறேன். இப்படி நிறைய மாபெரும் எழுத்தாளர்களின் படைப்புகளை படித்திருக்கிறேன். இதுபோல் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நாவலை நான் இதுவரை படித்ததில்லை.
இந்தப் படைப்பை பற்றி ஒவ்வொரு வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்தி தள்ளுகிறது. நல்ல படைப்புகளை படித்தவுடனும் சில நல்ல திரைப்படங்களை பார்த்தவுடனும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு நமக்கு இயல்பாக ஏற்படும் அல்லவா அதுபோல வேள்பாரியைப் பற்றி மற்றவரிடம் சொல்ல வேண்டும் என்ற ஆவல் இயல்பாய் ஏற்படுகின்றது.
சு.வெங்கடேசன் அவர்கள் பல்வேறு தரவுகளை திரட்டி இந்த நாவலை எழுதி இருக்கிறேன் என்று கூறிய பதிவுகளை கண்டேன். இந்த நாவலில் எத்தனை சதவீதம் உண்மை எத்தனை சதவீதம் கற்பனை என்ற உண்மையை அவரிடமே விட்டுவிடுவோம். இந்த நாவலை படித்த பிறகு பூச்சிகள், விலங்குகள், மரங்கள், நிலம், நீர் நிலைகள், வனம், வானம் போன்றவற்றை பற்றி மிகச்சிறந்த புரிதல் நமக்கு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. நாம் நிறைய கற்றுக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு தகவல் களஞ்சியம் தான் இந்த வேள்பாரி நாவல்.
இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களைப் பற்றி அற்புதமான வார்த்தைகளால் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். நாயகன் வேள்பாரியை சந்திக்க கபிலர் பறம்பு நாட்டுக்கு புறப்பட்டு செல்லும் ஒரு பயணத்தில் துவங்குகிறது இந்த கதை. நம் கபிலர் மூலமாகத்தான் வேள்பாரியிடம் சென்றடைகிறோம். தமிழகத்தில் உள்ள மூவேந்தர்களானாலும் சரி ஒவ்வொரு குறுநில மன்னனாலும் சரி சிற்றரசர்களாக இருந்தாலும் சரி தங்களுடைய மண்ணில் கபிலரின் கால் பதியாதா? என்ற ஏக்கம் கொண்டிருந்தனர். அப்பேர் பட்ட அறிவு ஆசான் கபிலர் வேள்பாரியைப் பற்றி சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்க பாணர்களுடைய வார்த்தைகளிலும் , வாழ்த்துக்களிலும் வேள்பாரியை உறுதியாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட ஆரம்பித்தது.

யாராலும் வீழ்த்த முடியாத பறம்பு நாட்டில் பல இனக்குழுக்களின் பாதுகாவலனாக விளங்கும் வேளிர் குலத் தலைவன் வேள்பாரியை வஞ்சக சூழ் கணைகள் பழி தீர்க்க காத்திருக்கும் வேளையில் அவனை சந்திக்க பறம்பு நாட்டை நோக்கிய தன் பயணத்தை தொடங்குகிறார் கபிலர். அவர் தொடங்கிய பயணத்தில் எத்தகைய மனிதர்களை சந்தித்தார்? பாரியை சந்தித்தாரா இல்லையா? பாரியிடம் அவர் என்ன தெரிந்து கொண்டார் பாரி இவரைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதை பற்றிய எண்ணங்கள் முழு நாவலிலும் பரவிக் கிடக்கின்றன.
பரம்பு நாட்டின் தெய்வ வாக்கு விலங்கை கவர்ந்து செல்வதே பாண்டிய மன்னனின் பெருங்கனவு. அந்த பெருங்கனவை வேளிர் குலத் தலைவனின் சிறு படை கொண்டு சமர் புரியும் பறம்பு நாட்டின் குடிகள். என்னவானது அந்த இறுதி யுத்தம். இந்த கேள்விகளோடு இப்பெரும் நாவலை பற்றி உங்களிடம் தொடர்ந்து உரையாட விரும்புகிறேன். இந்த உரையாடலை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்த தொடரிலிருந்து வேள்பாரியை பற்றின பகுப்பாய்வை பற்றி நாம் காண்போம். வாருங்கள் நாமும் பறம்பு நாட்டை நோக்கிப் பயணிப்போம்….
பயணம் தொடரும்…..
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
August 1, 2025Ungal writing style very nice, pls continue