JUDGEMENT DAY – 1952 – INC Vs CPI – அரசியல் கட்டுரை – பகுதி-3


அரசியல் கட்டுரை – 1952 சென்னை மாகாண தேர்தல் முடிவுகள் காமராஜரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் 188. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற இடங்களோ 152. இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜருக்கு மிகப் பெரிய நெருக்கடியாக மாறியது. மெஜாரிட்டி பெறாததால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்களை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் நின்று கொண்டிருந்தது. முத்துராமலிங்க தேவரின் ஃபார்வேர்டு பிளாக் கட்சி 22 இடங்களையும் சில கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் மீதி இடங்களை பங்கு போட்டுக் கொண்டனர். அண்ணா தலைமையிலான திமுக தேர்தலில் போட்டியிடாமல், யாருக்கும் ஆதரவு தராமல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் எதிராக களமாடியது.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு பஞ்சம் பட்டினி மற்றும் ஆந்திர மாநில பிரிவினையே காரணம் என்று பேசப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் வலுவான கொள்கை இருந்தும் பெரும்பாலான தலைவர்கள் சிறையில் இருந்ததால் தேர்தலில் இரண்டாம் இடமான எதிர்கட்சி வரிசைக்குத்தான் அந்தக் கட்சியால் வர முடிந்தது.
1952 தேர்தலில் ஆளுங்கட்சியாக காங்கிரஸும் எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்டும் போட்டி போட்டுக் கொண்டிருந்த தமிழக அரசியல் வரலாற்றில் இன்று அந்த இரண்டு கட்சிகளின் நிலைமையை நாம் பார்த்தால் மிகவும் பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் ஏதாவது ஒரு திராவிட கட்சிகளை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு உண்டாகிப் போனது. காமராஜருக்கு பிறகு காங்கிரஸில் ஒரு கரிஷ்மாடிக் லீடர் அமையாதது தான் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். அதே போல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவானந்தம் போன்ற வீரியமான தலைவர்களுக்கு பின் மற்ற எந்தத் தலைவர்களும் காலத்திற்கு ஏற்ப தங்களின் தெளிவான தொலைநோக்கு பார்வைகளை எடுக்காமல் விட்டுவிட்டதே இன்று அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். 1952 ல் கம்யூனிஸ்ட் கட்சி 62 இடங்கள் பெற்றது. அடுத்த 1957 தேர்தலில் 4 இடங்கள். தற்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டு கட்சிகளும் சேர்ந்து அதே 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தங்களின் வரலாற்றை சுருக்கிக் கொண்டது.

உலக அரங்கில் கம்யூனிச இயக்கங்கள் தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பலமிழந்து கொண்டே வருகிறது. இன்று கேரளாவில் மட்டுமே வலுவான கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்கின்றது. கொள்கைகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அந்த கொள்கைத் தேரை ஓட்டிச் செல்லும் ஒரு திறமையான சாரதியை பொறுத்து தான் வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட வெற்றிகரமான சாரதியாக கேரள முதல்வர் பினராய் விஜயன் இன்றளவில் காணப்படுகிறார். தற்போதைய சூழலில் இந்தியாவில் ஒரு மாநிலத்திலாவது கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடையாமல் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருப்பது நமக்கு சற்று ஆறுதல் தரும் விடயம். கேரளா என்ற மாநிலம் ஒன்று மட்டுமே இந்தியாவில் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.

உலகின் சர்க்கரை கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் கியூபாவில் ஏற்பட்ட புரட்சியை கேள்விப்பட்டிருப்போம். பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவாரா போன்ற கம்யூனிஸ போராளிகள் கட்டமைத்த வெற்றிகள் இன்னும் உலக அரங்கில் பேசப்பட்டு கொண்டிருக்கின்றன. கம்யூனிச நாடான கியூபாவில் இன்று நீங்கள் சென்று பார்த்தால் அப்படியே ஆச்சரியப்பட்டு போவீர்கள். கல்வி மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டு வருகின்றன. 1000 கிலோமீட்டர் பயணிக்கும் ரயில் கட்டணம் வெறும் இந்திய ரூபாய் மதிப்பில் 60 ரூபாய் மட்டுமே.! அந்த அளவு குறைந்த அளவில் மக்களுக்கான சேவைகளை செய்து வருகின்றனர் கியூபா ஆட்சியாளர்கள்.

இது மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு போதுமென்றால் நிச்சயம் போதாது. மற்ற விடயங்களை சுட்டி காட்டினால் உங்களுக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. உதாரணமாக இந்தியாவை விட தொழில் புரட்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும், தகவல் தொழில்நுட்பத்திலும் அந்த நாடு பின் தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. நிகழ்காலத்திற்கு ஏற்ப வாகன வசதிகள் பெரிய நகரங்களில் கூட கிடையாது. ரயில்களில் ஆயிரம் கிலோமீட்டருக்கு குறைந்த கட்டணம் வரவேற்க்கக் கூடியது என்று வைத்துக் கொண்டாலும் அந்த குறைந்த கட்டணத்தில் ரயிலில் பயணிக்க பத்து நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் உண்மை. அப்படி செய்த பிறகும் ரயில் புறப்படும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் உங்களுக்கு இருக்கை உள்ளதா இல்லையா என்ற தகவலே உறுதியாக தெரியவரும். ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ரயில் இயங்கும். அங்கு இருக்கும் சாலைகளில் 20,30 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பழைய கார்களே இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள கட்டிடங்கள் பழைய கட்டிடங்களாகவே நகரம் முழுக்க காணப்படுகின்றன. இன்டர்நெட் வசதி பெரிய அளவில் அங்கு கிடைப்பதில்லை. இந்த நிலையிலே மக்கள் தங்களை வாழ பழக்கிக் கொண்டார்கள். ஆகவே கொள்கைகள் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப அந்த கொள்கைகள் புதுப்பிக்கப்படாமல் இருந்து விட்டால் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதற்கு கியூபா ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால் இதே கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட சீனாவை எடுத்துக் கொள்ளுங்கள் இன்று டெக்னாலஜியில் உலக அரங்கில் முதலிடத்தை நோக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் புதுப்புது மாற்றங்களை தினந்தோறும் செய்து கொண்டே இருக்கின்றது. மின்சார பேட்டரி கார் உற்பத்தியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் TESLA கார்களை விட சீன BYD மின்சார கார்கள் உலக அரங்கில் அதிக விற்பனை செய்து, டெஸ்லாவை பிண்ணுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது. சீனா வரும் 2035 ற்குள் உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடாக மாறக்கூடிய அத்தனை சாத்திய கூறுகளும் அதன் வளர்ச்சியில் தென்படுகின்றன. அதற்கு காரணம் தங்களது கம்யூனிச கொள்கைகளை காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டே வருவதால் இத்தகைய வளர்ச்சி சாத்தியப்படுகின்றது. சரியான தலைமையின் கீழ் ஒரு நாடு செல்லுமேயானால் அந்தக் கொள்கையை தலைசிறந்த கொள்கையாக உலகம் ஏற்றுக் கொள்ளும்.
இன்று சீனாவைப் போல தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கொள்கையை தமிழகத்திற்கு ஏற்ப முடிவுகளை மாற்றி அமைத்தால் வெற்றிகள் சாத்தியப்படும். காலத்திற்கேற்ப தங்கள் கட்சியை தகவமைத்துக் கொள்ள தவறிவிட்டால் இந்த நான்கு இடங்களை கூட இனிவரும் காலங்களில் பெற முடியுமா என்பது கேள்விக் குறியே? இன்னொரு கட்சிக்கு பின்னாடியே சென்று கொண்டிருந்தால் அவர்களின் நிலைமை அதல பாதாளத்திற்கு சென்று விடும் என்பதே காலம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.
1952 ல் முதலமைச்சர் இராஜாஜியை நீக்கிவிட்டு பெரியாரின் துணையுடன் காமராஜர் எப்படி அசுர பலத்துடன் 1957ல் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் என்பதை பற்றி அடுத்த தொடரில் காண்போம்….
பயணம் தொடரும்….
– ஃப்ரெடி டிக்ரூஸ் –