பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 2

End of Episode 1 : ஒரு வாரத்திற்கு முன் தன்னை ஓவியமாக வரைந்து தருமாறு பஞ்சாபகேஷன் ரவிக்குமாரிடம் சொல்ல, அவனை தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறான். அந்தப் படத்தை பார்த்தவுடன் அவனுக்கு பேரதிர்ச்சி ஆகிறது. ஐயையோ தவறு செய்து விட்டோமே என் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் அவன் வரைந்த ஓவியங்களை பொறுக்கிக் கொண்டு தலை தெரிக்க பஞ்சாபகேசன் வீட்டை நோக்கி ஓடுகிறான்.

EPISODE 2 : பஞ்சாபகேசனுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் ரவிக்குமார் ஓடிய ஓட்டம் ஒலிம்பிக்கில் உசேன் போல்ட் ஓடிய ஓட்டத்திற்கு ஈடானது. ரவிக்குமார் வீட்டிலிருந்து நாலு கிலோ மீட்டர் தூரம் தான் பஞ்சாபகேசனின் திருவல்லிக்கேணி வீடு. தேனாம்பேட்டையில் உள்ள ரவிக்குமார் வீட்டிலிருந்து ஓடத் தொடங்கிய கால்கள் ராயப்பேட்டை சந்து பொந்துகளில் புகுந்து டிரிப்லிக்கேனின் ஆறாவது வீதியின் முனையில் வந்து நின்றது. பஞ்சாபகேசனின் வீட்டின் முன்பு 10 பேர் மாலையுடன் நிற்பதை பார்க்கிறான். கண்கள் தன்னை அறியாமல் குளம்கட்ட தொடங்கியது. நாம நினைத்தது நடந்து விட்டது. வீட்டில் ஒரு சொட்டு அரிசி தீர்ந்து போனால் எப்படித்தான் கேசனுக்கு மூக்கு வேர்க்குமோ அரிசிப்பையுடன் வாசலில் வந்து நிற்பான். அதுவும் ஐந்து கிலோ சிவாஜி பிரண்ட் அரிசி . ஏன் வீட்டுக்கு வாங்க போம்போது ஒனக்கும் சேத்து வாங்கிட்டேன்டா அப்டியே போற வழில குடுத்துட்டு போலாம்னு வந்தேன் என்று வாய்க்கூசாமல் பொய் பேசுவான். அப்படிப்பட்ட நண்பனுக்கு இன்னக்கி வாய்க்கரிசி போட்ற நெலமய நானே உருவாக்கிட்டேனே. ஐயோ இப்படி ஒரு துரோகத்தை சோறு போட்டவனுக்கே செஞ்சுட்டேனே என்று துக்கம் தாலாமல் பீறிட்டு வரும் அழுகையை கையால் பொத்தியபடி ஒரு கம்பத்தில் சாய்ந்து கதறி அழுகிறான். எனக்கு உதவாத என்னோட கலை என் நண்பன சாகடிக்க உதவிட்டதே என்று வெதும்புகிறான். நாலு கிலோ மீட்டர் ஓடி வந்தவன் நாலடி தூரம் உள்ள வீட்டிற்கு செல்ல முடியாமல் வேறொருவர் வீட்டின் வாசலிலே முடங்கிப் போனான்.

பஞ்சாபகேசனின் வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தவர்கள் ரவிக்குமாரை திரும்பிப் பார்க்கிறார்கள். ரவிக்குமார் கண்களைத் துடைத்தபடி அவர்களை ஏறெடுத்துப் பார்க்கிறான். அவர்கள் ஏன் நம்மை பார்க்கிறார்கள் என்று விளங்கவில்லை. அந்த கூட்டத்தில் ஒருவன் ரவிக்குமாரை நோக்கி கையை நீட்டுகிறான். அப்போது சட்டென்று தோளில் இன்னொருவன் கை வைக்கப்பட பதற்றமாக நிமிர்ந்து பார்க்கிறான். பக்கத்தில் பஞ்சாபகேசன். நிமிர்ந்தவனுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை. தொண்டைக் குழியில் வார்த்தைகள் வெளிவராமல் மேலும் கீழும் உருண்டு கொண்டிருந்தன . டேய் கேசா என்ற வார்த்தை அதையும் மீறி பீறிட்டு வெளியேற கைகள் இரண்டும் பஞ்சாபகேசனின் காலை இருக பற்றியது. கேசனுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. டேய் ரவி என்னடா ஆச்சு ஏன்டா இங்க வந்து உக்காந்துருக்க எதுக்குடா அழுவுற என்று கேள்வி மேல் கேள்வி கேட்க எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் அவன் கண்களிலிருந்து பதில் கண்ணீராக அருவி போல கொட்டியது.

கேசன் ரவிக்குமாரை தூக்கி நிறுத்துகிறான். என்னடா ஆச்சு வீட்ல ஏதாவது பிரச்சனையா என்ற கருணை வார்த்தையை கேட்டு ஒன்னும் இல்லடா நீ நல்லா இருக்கில்ல எனக்கு அது போதும் என்று ரவி சொல்லி முடிப்பதற்குள் கூட்டத்தினர் இருவரின் அருகில் வந்து நிற்கிறார்கள். வந்தவர்கள் மாலையை பஞ்சாபகேசனின் கழுத்தில் ஒவ்வொருவராக போட கேசனும் மாலையை கழட்டி போட்டவருக்கே திருப்பி போடுகிறான். கூட்டத்தினர் மகிழ்ச்சியோடு கைதட்டுகின்றனர். அந்த இடம் ஒரு விழா கூட்டம் போல் காட்சியளித்தது. ரவி அந்த கூட்டத்தை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கிறான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல். கூட்டம் கேசனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல விலகி இருந்த ரவிக்குமாரின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கூடவே கூட்டிச் செல்கிறான் பஞ்சாபகேசன்.
நடப்பதை நம்ப முடியாமல் பார்த்தபடி சென்று கொண்டே இருக்கிறான் ரவிக்குமார். நாம வரைஞ்ச ஆர்ட் மாதிரியே உண்மையாவே சில சம்பவம் நடந்திருக்கு. ஆனா இவன வரைஞ்சது மட்டும் ஏன் உண்மையா நடக்கல என்று தனக்குள் குழம்பிப் போனான். அப்ப நாம தான் தேவையில்லாம தப்பா புரிஞ்சுகிட்டோமோ? தற்செயலா ஒரு சில சம்பவம் நடந்திருக்கு அதுக்கு போய் நாம தான் வீணா கற்பனை பண்ணிக்கிட்டோம். சே….சரியான முட்டாளா இருக்குமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான். வந்தவர்கள் வாழ்த்து சொல்லிவிட்டு அப்படியே கலைந்து செல்ல ரவிக்குமார் பஞ்சாபகேசனிடம் எதுக்காக ஒனக்கு மாலை போடுறாங்கனு கேட்கிறான். எனக்கு வட்டச் செயலாளர் போஸ்டிங் போட்டுருக்காங்கடா அதனால தான் கட்சிக்காரங்க வந்து வாழ்த்திட்டு போறாங்க என்று சொல்லிவிட்டு சரி வா உள்ள போலாம் என்றபடி வீட்டுக்குள்ளே அழைத்துச் செல்கிறான்.

உள்ளே சென்றவுடன் நீ உக்காரு நா கொஞ்சம் பிரஷ்ஷாயிட்டு வரேன் என்று சொல்லி பாத்ரூமுக்குள்ளே நுழைகிறான். அவனுடைய மனைவி லட்சுமி ரவிக்குமாரை வரவேற்று சோபாவில் அமர சொல்கிறாள். ரவிக்குமார் சோபாவில் அமர்கிறான். லட்சுமி உள்ளே சென்று காபி டம்ளர் உடன் வெளியே வருகிறாள். அப்போது தொலைபேசி ஒலிக்க இதாங்கண்ணா சாப்பிடுங்க என்று சொல்லி காபியை ரவிக்குமாரிடம் கொடுத்து விட்டு போனை எடுக்கிறாள். போனில் செய்தியை கேட்டு அதிர்ச்சியாகி என்னங்க என்று கதறி அழுகிறாள். பாத்ரூம் சென்ற பஞ்சாபகேசன் என்ன ஆச்சு என்று பதறியபடி வெளியே வந்து கேட்க ஏங்க உங்க தம்பி பெங்களூர்ல ஆக்சிடன்ட்ல இறந்துட்டாங்களாம் என்று சொல்லி கேசனை கட்டிக்கொண்டு அழுகிறாள். ரவிக்குமாருக்கு கை நடுங்க ஆரம்பித்தது. காபி கப் கீழே சரிந்து விழ, கப்பிலிருந்து சிதறிய காப்பித் துளிகள் தரையில் ஓவியம் போல படருகின்றது.
ரவிக்குமாரின் வீட்டின் மேசையில் ஒரு வெள்ளைத் தாளின் மீது அந்தப் தூரிகைபேனா உருண்டு கொண்டிருந்தது. அந்த வெள்ளைத் தாளில் அடுத்து என்ன அதிர்ச்சியானப் படம் வரையப்பட்டிருந்தது என்பதை அடுத்த தொடரில் காண்போம்……
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
August 7, 2025U r a mutitaleted person I never seen different type of writing knowledge person I expect more from you,