பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 4


காரில் அமர்ந்திருந்த மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கேசன் காரை ஓட்ட அவன் அருகில் லட்சுமி அமர்ந்திருந்தாள். ரவிக்குமார் பின் சீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் ஏகப்பட்ட எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தது. அது என்ன என்று மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் இந்தப் பயணம் ஒரு இறுக்கமான சூழலாகத்தான் இருந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ரவிக்குமார் யோசனை முற்றி நகத்தை கடித்து, கடித்து காரிலேயே துப்பிக் கொண்டிருந்தான். லட்சுமி திரும்பும் போது எதேச்சையாக பார்த்து விட்டாள். புதிதாக வாங்கிய போக்ஸ்வேகன் இவி காரில் இப்படி துப்பி அசிங்கப்படுத்தி வெக்கிறானே என்ற செயல் அவளை எரிச்சல் படுத்தியது.
லட்சுமியின் விருப்பத்திற்காக இந்த புதிய காரை ஆறு மாதங்களுக்கு முன்புதான் வாங்கி இருந்தான் கேசன். இருவரும் நன்றாக காரை ஒட்டி பழகி இருந்தார்கள். லட்சுமி கேசனை காட்டிலும் சீக்கிரமாக வண்டி ஓட்ட கற்றுக் கொண்டாள். நங்கநல்லூரில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு அடிக்கடி கார் எடுத்து கொண்டு போகக்கூடிய அளவுக்கு நன்றாக பழகி இருந்தாள். நகத்தைக் கடித்து துப்புவதை சொல்வதற்காக கேசனிடம் ஜாடை காட்டி முயற்சி செய்தால் அதை கவனியாது வண்டியை சீரியஸாக ஓட்டிக் கொண்டிருந்தான் கேசன். கார் அண்ணா நகர் சிக்னலில் வந்து நின்றது.
சரி இப்பயாவது திரும்பி பார்ப்பான் என்று சாடையாக கவனித்தாள். ம்ஹூம் அவன் திரும்புற மாதிரி தெரியல. அவன் ஏதோ யோசனையில் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் பொறுக்காமல் லட்சுமி என்னங்க என்று கூப்பிட, திரும்பி என்னம்மா என்று செய்கையாலே தலையை ஆட்டி கேட்டான். கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் சாந்தி கால்ணி வழியா போங்க என்று சொல்ல, அந்த வழியா எங்க போறது என்று கேசன் கேட்க. அதாங்க சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் இருக்குல அங்க நிப்பாட்டுங்க நான் சொல்றேன் என்று சொல்ல ஏம்மா இப்ப எங்க நாம போயிட்டு இருக்கோம் இப்ப வந்து திங்ஸ் வாங்க போறேன்னு நிக்கிற. அதெல்லாம் வந்து வாங்கிக்கலாம்ல என்று சலித்துக் கொண்டான். ஏங்க முக்கியமானது வாங்கணும்னு சொல்றேன் நீங்க பேசாம வண்டிய சந்தோஷ்ல நிப்பாட்டுங்க என்று கராராக சொன்னாள். சரி நிப்பாட்றேன் என்று சொல்லி அண்ணா ஆர்ச் வழியாக காரைத் திருப்பினான்.
சாந்தி காலணியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வந்து வண்டி நின்றது. கேசன் வண்டியை விட்டு இறங்காமல் சரி நீ போ சீக்கிரம் வாங்கிட்டு வா நா வண்டில ஒக்காந்து இருக்கேன் என்று லட்சுமியை கிளப்பினான். ஏங்க நீங்களும் வாங்க என்று சொல்ல நான் எதுக்குமா நீ போய் வாங்க மாட்டியா போய் வாங்கிட்டு வா என்று சலித்துக் கொண்டான். எங்க பேசாம வாங்க இப்ப வர்ரிங்களா இல்லையா என்று குரல் ஒசத்த. சரி வர்ரேன் என்று காரை விட்டு இறங்கி அவள் கூடவே நடந்து சென்றான். இங்கு நடைபெற்ற வாக்குவாதங்கள் எதையும் காதில் வாங்காமல் அதே யோசனையுடன் வெளியே வேடிக்கை பார்த்தபடியே எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான் ரவிக்குமார்.

இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார்கள். உள்ளே நுழைந்ததும் கேசன் லட்சுமியிடம் என்ன வாங்கணும்னு சொல்லு என்று கேட்க, லட்சுமி கேசனின் அருகில் வந்து ஏங்க…எதுக்குங்க அவரை கூட்டிட்டு வந்தீங்க. அவரு ஏற்கனவே ஒரு மாதிரி நடந்துப்பாரு. டிப்ரஷன்ல வேற இருக்காரு. அங்க பாருங்க நகத்தை கடிச்சு கடிச்சு காருக்குள்ளே துப்பிட்டு இருக்காரு. இது காரா இல்ல குப்பை தொட்டியா? எனக்கு டென்ஷன் ஆகுது என்று மற்றவர்களுக்கு கேட்காதபடி மெல்லமாக கடிந்து கொண்டாள். கேசனுக்கு ஒன்னும் புரியவில்லை. ஏய் இது ஒரு பிரச்சனையா வீட்டுக்கு போய் கார தொடச்சி விட்டா சரியா போக போகுது. இத சொல்றதுக்கு தான் சூப்பர் மார்க்கெட் வந்தியா என்று டென்ஷன் ஆனான். ஆமா பின்ன பர்சேஸ் பண்ணவா வந்தேன். நாம இருக்கிற நிலைமைல ஷாப்பிங் ரொம்ப முக்கியம். இத சொல்றதுக்கு தான் ஒங்கள்ட்ட எவ்வளவோ ஜாட காட்றேன் நீங்க எங்க திரும்பி பாக்குறீங்க நேரா பார்த்து வண்டியை ஓட்டிக்கிட்டே போறீங்க கடிவாளம் கட்ன குதிர மாரி என்று சலித்துக் கொண்டாள். பின்ன நேரா பாத்து வண்டிய ஓட்டமா ஒன்ன பாத்து வண்டிய ஓட்ட சொல்றியா என்று எகிறினான். ஆமா அப்டியே பாத்துட்டாலும் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள். இப்ப எதுக்கு தேவ இல்லாம பேசுற சரி நீ முதல்ல வண்டில வந்து ஏறு நான் அவன்கிட்ட சொல்றேன் என்று காரில் ஏற கிளம்பினான்.
அவன் கையை பிடித்து நிறுத்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம் அவர இப்ப நீங்க ஏதாவது சொன்னீங்கன்னா தப்பா எடுத்துப்பாரு, நீங்க வேணா பின்னாடி உக்காந்து பேசிட்டு வாங்க நான் வண்டிய ஓட்றேன் என்று சொல்கிறாள். அதெல்லாம் வேணாம் நான் பாத்துக்கிறேன் நீ பேசாம வா என்று மறுக்கிறான். ஏங்க விடுங்க நாதான் ஓட்டுகிறேனு சொல்கிறேன்ல பாதி தூரம் போனதுக்கு அப்புறம் வேணாம் நீங்க ஓட்டுங்க என்று வற்புறுத்தினாள். சரி சரி நீயே ஓட்டு இப்ப வேணாம் ஹைவேஸ்ல ஏறுனதுக்கப்புறம் வண்டியை தர்றேன் அதுக்கப்புறம் நீயே ஓட்டு என்று சொல்ல. சரி என்று சமாதானமடைந்தாள் லட்சுமி.
இருவரும் காரில் ஏறிக் கொண்டார்கள். கார் பெங்களூருவை நோக்கி புறப்பட்டது. கார் போய்க்கொண்டிருக்க மரகதம் டிப்போ என்ற போடு ஒரு கடையில் தொங்கிக் கொண்டிருந்தது. அதை கண்ணாடி வழியாக பார்க்கிறான் ரவிக்குமார். மனைவி மரகதம் அவன் கண்முன் வந்து சென்றாள் ச்சே அவள்ட்ட சண்ட போட்ருக்க கூடாது அவளும் என்ன பண்ணுவா ரொம்ப கஷ்டப்படுற குடும்பத்துல பொறந்தவ கல்யாணம் பண்ணி போற வீட்லயாவது நிம்மதியா இருப்பானு கல்யாணம் பண்ணி வெச்சாங்க இப்ப என்ன கல்யாணம் பண்ணி மூணு வேள சோறு கூட அவளுக்கு நான் நிம்மதியா கொடுக்கல. அவளும் என்னதான் பண்ணுவா என்னோட சுயநலத்தால அவள நா கஷ்டப்படுத்துறேன். அவ சொல்ற மாதிரி ஒரு நல்ல வேலைக்கு போயிருந்திருக்கலாம். இனிமேலாவது மரகதத்தை கஷ்டப்படாம பாத்துக்கணும் அவ நிம்மதியா வாழ்றதுக்கு ஏதாவது பண்ணனும். நான் வரஞ்ச ஓவியத்தால காசு பணம் தான் உண்டாக்க முடியல. அதுமூலமா கெட்ட சம்பவந்தான் நடந்திட்ருக்கு. அந்த பேனாவால தான் இவ்வளவு பிரச்சன நடக்குதான்னு தெரியல. பெங்களூர் போயிட்டு திரும்ப வந்ததும் முதல் வேலையா அந்த பேனாவை ஒடச்சு போட்றனும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான்.

ஆனால் மரகதம் எடுத்த இந்த விபரீதமான முடிவு பற்றி அவனுக்கு தெரியாமல் போனது துரதிர்ஷ்டம் தான். ஹவுஸ் ஓனர் பதட்டமாக போனில் ரவிக்குமாருக்கு தொடர்பு கொள்கிறார். போன் இரண்டு மூன்று முறை முழுவதும் ரிங் ஆகி கட் ஆகிறது. ஹவுஸ் ஓனர் எரிச்சல் அடைகிறார். என்ன மனுஷன் இந்த நேரத்துலகூட போன எடுக்க மாட்டேங்குறான் என்று கடுப்பாகிறார். ரவிக்குமார் பாக்கெட்டை தடவுகிறான் பாக்கெட்டில் அவனுடைய போன் இல்லை. தன்னுடைய மொபைல் போனை அவசரத்தில் வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து விட்டான். ஓன் ஃபோனை கொஞ்சம் குடேன் மரகதத்துக்கு ஒரு கால் பண்ணிட்டு தரேன் என்று கேட்க, இந்தாடா என்று போனை தருகிறான் கேசன். ஃபோனை வாங்கியவன் மனைவி மரகதத்திற்கு போன் செய்கிறான். ரிங் போய்க்கொண்டே இருக்கிறது யாரும் எடுக்கவில்லை. மீண்டும் அடிக்கிறான் போனை யாரும் எடுக்கவில்லை. அவனுக்கு மனதில் ஏதோ ஒரு நிம்மதியற்ற குழப்பம் உண்டாகிறது. சரி கடைசி முறை முயற்சி செய்வோம் என்று போனை அடிக்கிறான் ரிங் போய்க்கொண்டே இருக்கிறது யாரும் எடுக்கவில்லை போனை கட் பண்ண அழுத்த போகிறான் அப்பொழுது மறுமுனையில் ஹலோ என்ற குரல் கேட்கிறது. ஹலோ மரகதம் என்று ரவிக்குமார் கேட்க சொல்லுங்க மரகதம் தான் பேசுறேன் என்று சொல்லும்போது போனின் தொடர்பு கட் ஆகிறது. ரவிக்குமார் மீண்டும் தொடர்பு கொள்கிறான். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது. கவலையோடு போனை கேசனிடம் கொடுக்கிறான்.
போனை எடுத்தது யார்?
ஏன் உடனே சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது? என்பதை அடுத்த தொடரில் காண்போம்.
மீண்டும் பயணிப்போம். . .
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
PRAKASH
August 19, 2025பேனா – திரில்லர் தொடர் மிகவும் அருமையாக உள்ளது
PRAKASH
August 19, 2025பேனா – திரில்லர் தொடர் மிகவும் அருமையாக உள்ளது பயணம் மேலும்தொடர வாழ்த்துகள்
Chandran t
August 19, 2025Rompa thrilling ga, pokudu next episode?