JUDGEMENT DAY – 1962 – INC Vs DMK -அரசியல் கட்டுரை-பகுதி-5


அரசியல் கட்டுரை – 1957-இல் காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற பிறகு தன்னுடைய அமைச்சரவையில் பழைய அமைச்சர்களையே சேர்த்துக் கொண்டாலும் புதியதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கக்கன் அவர்களையும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்தம்மாளையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்தார். நான் மேற்கூறிய வரிகளில் கக்கன் அவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டேன். அவரை இன்ன சமுதாயம் என்று குறிப்பிட்டு முத்திரை குத்துவது ஏற்புடையதான கருத்தாக என்றைக்குமே எனக்கு இருந்ததில்லை. சாதி மத வேறுபாடற்ற உலகம் திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவன் நான் இருப்பினும் வரலாற்று நிகழ்வை குறிப்பிடும்போது சக மனிதனைஇந்த சமூகம் என்ன மாதிரியான வகைப்படுத்தலை கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே சில தலைவர்களை அடையாளப்படுத்த வேண்டி இருக்கிறது. அப்படி தாழ்த்தப்பட்ட சமூகமாக அடையளப்படுத்தப்பட்டவர்கள் எப்படி எமர்ஜாகி முன்னேறி வெற்றி கண்டார்கள் என்பதற்கான ஊக்கமாகத்தான் அவர்களை இன்ன சமூகம் என்ற அடைமொழியில் சுட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு உருவானது.
15 இடத்தில் வெற்றி பெற்ற திமுகவை காட்டிலும் ஒரு இடம் கூடுதலாக பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் இடம் பெற்றது. இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்று கொண்ட காமராஜருக்கு வரும் காலங்களில் தமிழக களம் கடுமையான சவால்களை கொடுக்க காத்திருந்தது. நாளுக்கு நாள் தமிழகத்தில் சாதி பிரச்சனைகள் பெரிய அளவில் தலை தூக்க ஆரம்பித்தது. தேவர் சாதிகளும், தாழ்த்தப்பட்ட சாதிகளும், நாடார்களும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நின்றனர். இந்த சாதி பிரச்சனை வேறு கோணத்தில் திரிக்கப்பட்டது அதாவது காங்கிரஸ் வெர்சஸ் பார்வர்ட் பிளாக் கட்சி என்ற இருமுனை போட்டியாக கூர் தீட்டபட்டது. அது முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் எதிரொலித்தது. அதன் பிறகு முத்துராமலிங்கத் தேவருக்கும் இமானுவேல் சேகரன் அவர்களுக்கும் இடையேயான போராக மாறிப்போனது. காலம் செய்த பிழையான வரலாற்றை இன்றும் தாங்கி நிற்பது வேதனைக்குரியது.

வலுவான காங்கிரஸ் கட்சியை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வேர்ட் பிளாக் கட்சி போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக களமாடி கொண்டிருந்தாலும் அண்ணா அவர்கள் திமுக கட்சியை உருவாக்கிய நாள் முதல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரதான கட்சி திமுக தான் என்ற பிம்பத்தை கட்டமைக்க தொடங்கினார். இப்படி தன் எதிரியை யார் என்று அண்ணா தொண்டர்களுக்கும், மக்களுக்கு முன்பாக திமுகவை நிலை நிறுத்திக் கொண்டார். அதன் விளைவு அண்ணாவை 1967 இல் ஆட்சி அமைக்கக்கூடிய இடத்திற்கு நகர்த்திச் சென்றது காலம்.
காங்கிரஸ் கட்சியை எதிர்க்கக்கூடிய வலிமை பெற்ற கட்சிகள் ஒவ்வொன்றாக பலம் இழக்க தொடங்கியது. அப்போது இளைஞர்களை மட்டுமே அதிகப்படியான தொண்டர்களாக வைத்திருந்த திமுக அண்ணா தலைமையில் பிரதான இடத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்தது. அதையும் தாண்டி அண்ணா அவர்கள் தங்களை காங்கிரசை விட திமுக தான் முதன்மை சக்தி என்று கூர்மைப்படுத்த தொடங்கினார். அதற்கு காங்கிரஸ் கட்சியும் வலு சேர்க்கும் விதமாக தங்களை அறியாமல் பலவீனப்படுத்திக் கொண்டே வர ஆரம்பித்தது.

தற்போதைய தமிழக அரசியல் களத்தில் புதிதாக கட்சி துவங்கிய விஜய் அவர்கள் திமுகவிற்கு மாற்று சக்தி நாங்கள் தான் என்ற நேர்கோட்டில் பயணிக்க தொடங்கி இருக்கிறார். அவர் அண்ணாவின் அறிவார்ந்த வழிமுறைகளை பின்பற்றுகிறார் என்ற எண்ணம் எழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தோன்றுகிறது. விஜய்க்காண களத்தை காலம் ஒருவேளை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இதில் அவர் இலக்கை அடைவாரா அல்லது இலக்கை தவற விடுவாரா என்பது பற்றிய அவரின் செயல்பாடுகளை பொறுத்துதான் நம்மால் கட்டியும் கூற முடியும்.

1957 க்கு பிறகு காலம் திமுகவிற்காக கனிய தொடங்கியது. ராஜாஜி பதவி விலக குலக்கல்வி திட்டம் எப்படி காரணமாக அமைந்ததோ அதுபோல அன்றைய காமராஜரின் ஆட்சிக்கு இறங்கு முகமாக பிரதமர் நேருவின் பேச்சு காரணமாக அமைந்தது. சாதி ஒழிப்பு போராட்டம் செய்த பெரியாரை பைத்தியக்காரர் என்றும். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வீரியமாக செய்த அண்ணாவை சிறுபிள்ளைத்தனம் என்றும் பிரதமர் நேரு விமர்சனம் செய்தது காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தத் துவக்கிய புள்ளியாக கருதப்பட்டது. நேருவின் இந்த கிண்டலான பேச்சை தொடர்ந்து அண்ணா இந்திய எதிர்ப்பு போராட்டத்தை தீவிர படுத்த துவங்கினார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நேருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டத் துவங்கிய நிகழ்வு கால ஓட்டத்தில் அண்ணாவை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் இடத்திற்கு நகர்த்திச் சென்றது.
திரு. மு. கருணாநிதி அவர்களின் சீரிய சிந்தனையால் முதல் வெற்றியை ருசிக்கத் தொடங்கியது திமுக. காமராஜர் என்ற பெரும் பிம்பத்தை உடைத்து உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி அனைவரின் மூக்கிலும் விரல் வைக்கும் அளவிற்கு ஆச்சரியத்தை கொடுத்தது. 1959 ஏப்ரல் 30 இல் திமுகவின் முதல் மேயரானார் ஆ. பொ. அரசு அவர்கள்.
இன்றைய பிஜேபி அரசு இந்தியாவில் பிரதான மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பதற்கு ஆரம்ப விதையாக 1955 ஜூன் 7ல் P.C. SEKAR தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து வித்திட்டவர் அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத். அந்த விதை தான் இன்று மரமாகி வளர்ந்து இந்தியா முழுவதும் இந்தி மயமாக்க B.J.P ஒன்றிய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு மட்டுமே இந்தி மொழிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் மொழி உணர்வுக்கு தமிழர்களை தவிர வேறு யாரும் இணையானவர்கள் இல்லை என்பதே வரலாறாகும். மொழியை தன் பெயராகவே வைத்து தனக்கான அடையாளமாக ஆக்கிக் கொண்டவன் தமிழனே. அத்தகைய பற்று கொண்ட தமிழை அழிக்க யார் வந்தாலும் வெறுமனே கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான் உணர்வுள்ள தமிழன். இந்தப் புள்ளியில் தான் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் உணர்வுகளில் வேறுபட்டு நிற்கின்றன. அதன் விளைவே காலத்தால் வீழ்த்தப்பட்டார் காமராஜர். தன் உயிரை விட மேலானதாக தமிழை கருதக்கூடியவர்கள் தமிழர்கள். மொழிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் தமிழர்கள். கே ஜி எஃப் படத்தில் ” ராக்கி முன்னாடி யாரும் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார்” என்ற பில்டப் வசனம் வருமல்லவா! அது போல தமிழுக்கு எதிரா யாரும் குறுக்க மட்டும் போயிடாதீங்க என்று எச்சரிக்கை எப்போதும் தமிழ்நாடு கொடுத்துக் கொண்டிருக்கும். மீறிப் போனால் தமிழ்நாட்டில் தரமான சம்பவங்கள் நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.
சம்பத் அவர்களும், கவிஞர் கண்ணதாசன் அவர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு பல இடையூறுகளை செய்யத் தொடங்கினர். ஆனால் அவர்களால் அண்ணாவுக்கு எதிராக ஒன்றையும் நிகழ்த்தி காட்ட முடியவில்லை. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அத்தனை பேரும் போர்வாள்களாக திகழ்ந்திருந்தனர். திரு. கருணாநிதி, திரு. அன்பழகன், திரு. ஆசைத்தம்பி, திரு. நாவலர் நெடுஞ்செழியன், திரு. மதியழகன் போன்ற திறமையானவர்களை கொண்ட கட்சியாக திமுக இருந்தது. அவர்கள் அத்தனை பேரையும் தன் ஆளுமையால் பிணைத்து வைத்திருந்தார் பேரறிஞர் அண்ணா. ஆளுமை மிக்க தலைவர் முன்னிலையில் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் அது அத்தனையும் ஊதி தள்ளப்படும். சம்பத் மற்றும் கண்ணதாசனின் ஆட்டங்களுக்கு துணை போனவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்று நினைக்கும் போது வரலாறு எப்படிப்பட்ட காயங்களை கடந்து வந்திருக்கிறது என்று வியப்பாக இருக்கிறது. தமிழ் தேசியம் என்ற சிந்தனை அப்போது இருந்துதான் வீரியமாக துவங்க ஆரம்பித்தது. தமிழ் தேசத்திற்கு எதிரானவர் பெரியார் என்று கட்டமைக்கப்படும் பிம்பம் போலியானது என்பதற்கான வரலாற்றுச் சான்று சம்பத் துவக்கிய கட்சிக்கு பெரியாரின் ஆதரவு தந்ததை வைத்து நிரூபிக்கப்படுகிறது.
பல பிரச்சனைகளுக்கு நடுவே 1962 தேர்தலை நோக்கி எல்லா கட்சிகளும் வியூகம் வகுக்க தொடங்கின. பல ஆண்டுகளாக ஓய்வில் இருந்த ராஜாஜி சுதந்திரா கட்சி என்ற புதிய கட்சியுடன் களத்திற்கு வந்தார். யார் யாருடன் கூட்டணி என்ற முஸ்தீபுகள் தொடங்கிய ஆண்டு 1962 தேர்தல் முதல் 2021 தேர்தல் வரை அப்படித்தான் கட்சிகளின் முஸ்தீபுகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் 2026 தேர்தலுக்கான கூட்டணிகள் மட்டும் எட்டு மாதங்களுக்கு முன்பே அவசர அவசரமாக உறுதி செய்யப்பட்டு விட்டன. சில கட்சிகளின் நிலைப்பாடு மட்டும்தான் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அறிய முற்பட்டால் புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
காமராஜர் மக்களிடம் நலத்திட்டங்களுக்காக இந்த முறை வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு போட்டியாக வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது! என்ற கோஷத்தை அண்ணா மக்களிடையே பிரச்சாரமாக முன்னெடுத்தார். இந்தியா சீனா போரால் கொள்கை முடிவில் தடுமாறிக் கொண்டிருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. 1962 தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது 1957 இல் நடந்த தேர்தலில் 15 இடங்கள் பெற்ற திமுக 1962 தேர்தலில் 50 இடங்கள் பெற்று பிரதான எதிர்கட்சியாக முன்னேறி வந்து நின்றது. இந்த வெற்றி திமுகவிற்கு மகிழ்ச்சியை தரவில்லை. காரணம் அண்ணா அவர்கள் தோல்வியை தழுவியது தான். திரு. கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் காமராஜரின் வீயூகம் ஓரளவு தேர்தலில் அவருக்கு கை கொடுத்தது. அதன் பிறகு 1967 தேர்தலில் அண்ணாவின் வியூகமே வெற்றி கண்டது. அந்த வீயூகத்தின் முதன்மையான வியூகமாக எம் ஜி ஆர் என்ற அண்ணாவின் இதயக்கனி முக்கிய காரணமாக இருந்தார்.
மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்க காலம் தயாராகிக் கொண்டிருந்தது.
1967- இல் அண்ணா கண்ட வெற்றி துவக்கம் பற்றி அடுத்த தொடரில் காண்போம். . . .
மீண்டும் பயணிப்போம். . . .
அன்புள்ளம் கொண்ட அறிவார்ந்த வாசகர்களாகிய உங்கள் பேராதரவுக்கு நன்றிகள். ஒரு சிறிய வேண்டுகோள் இந்த கட்டுரையை பற்றி தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு எங்களின் பயணத்திற்கு ஒரு ஏணிப்படியாக அமையட்டும்.
நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
August 20, 2025eppadi ungalal mattum ella subject patri eluthamudikiradu,, good job,