கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 6

பெட்ரோல் பங்கில் கூட்டம் கூடி நிற்கிறது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கேசன் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி நிற்கின்றான். சும்மா வீட்ல இருந்தவன பெங்களூருக்கு வா என்று சொல்லி கூட்டிட்டு வந்து இப்படி சாக விட்டுட்டோமே என்ற மன வேதனை அவனை அழுத்தியது. ரவிக்குமாரின் கையில் இருந்த போன் தொடர்ந்து ரிங் வந்து வந்து கட் ஆகிறது.
ஃபோனின் டிஸ்ப்ளே உடைந்து இருப்பதால் போனை ஆன் பண்ண முடியாமல் கேசன் தவிக்கிறான். டிஸ்ப்ளே உடைந்ததால் யார் போன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சின்ன மாற்றம் செய்யலாம் போனில் உள்ள சிம்கார்டை கழட்டி வேறு போனில் போட்டு அவனால் பேச முடியும். அந்த சமயத்தில் அந்த சிந்தனை கூட அவனுக்கு எழவில்லை. பதற்றத்தில் சில நேரங்களில் நம்மில் பலருக்கு சுலபமான விடயங்கள் கூட நினைவுக்கு வராமல் தடுமாறிக் கொண்டிருப்போம். அதுபோலத்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவரமான கேசன் கூட செய்வதறியாது திகைத்து இருந்தான்.

லட்சுமி கேசனிடம் இப்ப என்னங்க பண்றது என்று கேட்கும் பொழுது ஆம்புலன்ஸ் சைரன் சத்தத்தோடு வந்து நிற்கிறது. சரி நீ ஒன்னு பண்ணு காரை எடுத்துட்டு பெங்களூருக்கு போ நான் ரவி பாடியோட ஆம்புலன்ஸ்ல ஏத்துக்கிட்டு வீட்டுக்கு போறேன். எனக்கு பதிலா தம்பி காரியத்துக்கு நீ போனினா இங்கு இருக்கிற நெலமைய எடுத்து சொல்லலாம் நான் ரவிக்கு செய்ய வேண்டிய வேலைல்லாம் செஞ்சு முடிச்ட்டு ஒனக்கு நான் கால் பண்றேன் என்றதும் சரிங்க நீங்க சொல்றது தான் கரெக்ட் நான் கெளம்புறேன். நீங்க பத்திரமா கெளம்புங்க என்று அவனுக்கு ஒத்துழைக்கிறாள். சரி நீ சேஃபா கார ட்ரைவ் பண்ணு. போனதும் எனக்கு உடனே கால் பண்ணு. மனச போட்டு கொழப்பிக்காத நான் பாத்துக்குறேன். நீ பெங்களூரிலேயே இரு நான் காரியத்தை முடிச்சிட்டு பெங்களூர் வந்துர்றேன் என்று சொல்லும் போது ஆம்புலன்ஸ் டிரைவர் சார் யாராச்சும் பாடி கூட வரீங்களா சீக்கிரம் வந்து ஏறுங்க என்று அவசரப்படுத்துகிறான். ஏன்பா கத்துற வரமாட்டோமா என்று டிரைவரை கடிந்து கொள்கிறான். டிரைவர் முனகியபடி வண்டியில் ஏறுகிறான். ஆம்புலன்ஸின் முன் சீட்டில் கேசன் ஏறி அமர்ந்து கொள்ள ஆம்புலன்ஸ் புறப்படுகிறது.

லட்சுமி கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கேசனுக்கு லட்சுமி பத்திரமாக பெங்களூர் சென்று விடுவாளா என்ற பெரும் கவலை அவனை ஆட்கொள்கிறது. இன்னொரு பக்கம் ரவியோட விபத்து அதைவிட பேனா பற்றிய குழப்பம் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின்  ஒயிங் ஒயிங் என்ற சத்தம் அவன் காதுகளுக்குக்  கூட கேட்காமல் நினைவுகள் செயலிழந்த மாதிரி வண்டியில் பயணிக்கிறான்.

ஹவுஸ் ஓனர் வீட்டில் வேலை செய்யும் பார்வதியம்மாள் வீடு தேனாம்பேட்டை சிக்னலில் ஆனந்தா ஹோட்டல் எதிர்புறம் உள்ள ரோட்டில் இடதுபுறத்தில் இருக்கிறது. அதிக வாகனங்கள் காலை முதல் இரவு வரை ஓயாது பயணிக்கும் சாலை. அந்த பரபரப்பான சாலையில் ஒரு பந்து உருண்டு ஓடி வருகிறது. அதை வேகமாக எடுக்க ஓடி வருகிறான் பார்வதியம்மாளின் 8 வயது பேரன் கார்த்திக். அப்போது நந்தனத்திலிருந்து வந்த பஸ் ஒன்று வேகமாக தேனாம்பேட்டை சிக்னலில் இடதுபுறம் திரும்ப, பந்தை எடுக்க சந்தில் இருந்து ஓடிவரும் கார்த்திக்கை  அங்கிருந்த காதர்பாய் என்பவர் கையை பிடித்து இழுத்து நிப்பாட்டுகிறார். அவர் மட்டும் பிடிக்காவிட்டால் கார்த்திக் பஸ்ஸின் முன் சக்கரத்தில் அடிபட்டிருப்பான். ஏன்டா பந்து வெளையாடறதக்கு வேற எடம் இல்லையா? ரோட்ல தான் இப்புடி வெளையாடுவீங்களா? செத்த நேரத்துல அடிபட்டு இருப்பல்ல  என்று கோபத்தில் திட்டுகிறார் காதர் பாய். அங்கே அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தவர்கள். அவன் தலையில ரெண்டு போடு போடுங்க அப்பதான் ரோட்ல வந்து வெளையாட மாட்டானுங்க  என்று காதர் பாய்க்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருந்தார்கள். 

தப்பு செய்யும் குழந்தைகளை அடித்து திருத்துவது தான் தங்களுடைய முதன்மையான நோக்கம் என்பதை எல்லோரும் தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதுதான் அவர்களுக்கான வழிமுறை என்று  அறியாமையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் அடியாத மாடு படியாது என்ற பழமொழியை வேறு உதிர்ப்பார்கள். அடித்து வளர்த்தால் மட்டுமே ஒரு குழந்தை சரியாக வளர்ந்து விடும் என்ற அறியாமை இன்னும் மக்கள் மத்தியில் மாறாமல் இருந்து கொண்டுதானிருக்கிறது.

அந்த கிரிக்கெட் பந்து வேகமாக சென்று ரோட்டின் நடுவில் உள்ள  சென்டர் மீடியனில் பட்டு திரும்ப அவனை நோக்கியே உருண்டு வருகிறது. அந்த பந்தை கையில் எடுத்த காதர் பாய் இரு உங்க ஆயாகிட்ட சொல்றேன் ரோட்லையா விளையாடுற உனக்கு பந்த தரமாட்டேன். போய் எல்லாம் வீட்டுக்குள்ள விளையாடுங்க இல்ல கிரவுண்ட்ல போய் விளையாடுங்க என்று சத்தம் போடுகிறார். காதர் பாய் அந்த தெருமுனையில் பஞ்சர் கடை வைத்திருப்பவர். அவன் ஓடி வருவதை முன்னமே பார்த்ததால் டக்கென்று எட்டிப் பிடித்து விட்டார். இல்லையென்றால் கார்த்திக் பஸ்ஸில் அடிபட்டு அந்த இடமே களேபரமாக மாறியிருக்கும்.

முன்னே எப்போதும் அதிகமான வண்டிகள் அந்த வளைவில் திரும்பாது. தற்போது அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் நடப்பதால் நந்தனத்திலிருந்து வரும் வாகனங்கள் நேராக செல்லாமல்  இடது புறம் திருப்பி விடப்படுவதால் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது. நாளுக்கு நாள் சென்னை நகரம் வாகனங்களால் பிதுங்கி வழிகிறது. எத்தனை மெட்ரோ, எத்தனை பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. பல மாநில மக்கள் சென்னையை நோக்கி படையெடுப்பதால் பூர்வீக சென்னை வாசிகள் பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு புறநகர் நோக்கி தங்கள் ஜாகையை மாற்றத் துவங்கி விட்டார்கள். தனி வீடுகள் இடிக்கப்பட்டு கட்டுமான  நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு நிறைய வீடுகள் அப்பார்ட்மெண்ட்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.

பார்வதி அம்மாளுக்கு செய்தி சொல்லப்பட கார்த்திக்கை முடியை பிடித்து தரதரவென்று வீட்டிற்கு இழுத்து செல்கிறாள். அவன் பஸ்ஸில் அடிபட்டிருந்தால் வேலைக்கு போன அம்மாவிற்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும் என்ற கவலை அவளுக்கு இருந்தது. வீட்டிற்கு அவனை இழுத்து வந்ததும். இரு  அம்மா வரட்டும் ஒனக்கு கால்ல சூடு வெக்க சொல்றேன் ரோட்ல போயா வெளயாடுற இந்நேரம் அடிபட்ருந்தா ஒங்க அம்மாவுக்கு யார்டா பதில் சொல்றது என்று முதுகில் இரண்டு சாத்து சாத்துகிறாள். அம்மா கஸ்தூரி, பாண்டி பஜாரில் பிளாட்பார்மில்  கிளிப்பு, வளையல் போன்ற ஃபேன்சி பொருட்களை  வைத்து கடை நடத்தி வருகிறாள். அவளுடைய கணவன் சங்கர் மகா குடிகாரன். எப்போதும் டாஸ்மார்க்கே கெதியாக கிடப்பான். அவளால் பிள்ளையைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அவன் ரொம்ப சுட்டித்தனம் செய்பவன். குறுக்க மறுக்க ஓடுவான் என்பதால் அவனை கடைக்கு அழைத்து செல்ல விரும்ப மாட்டாள்.

கார்த்திக் அழுது கொண்டே உடைந்திருந்த திண்ணையில் சென்று அமர்கிறான்.  அம்மா வரவரைக்கும் வெளியே வரக்கூடாது உள்ள போய் ஏதாவது விளையாடு என்று அதட்டி வீட்டுக்குள்ளே அனுப்பி வைக்கிறாள் பார்வதி அம்மாள். சின்னப் பையன் விளையாட ஆள் இல்லாமல் ரோட்டில் தன் வயது பிள்ளைகளுடன் விளையாடுகிறான். ஓடி ஆடி விளையாடும் பிள்ளைகளை தற்போதுள்ள பெற்றோர்கள் கையில் செல்போனை கொடுத்து வீட்டிலேயே முடக்கி வைக்கிறார்கள். ஒரு வயது குழந்தைக்கு கூட தட்டில் சாப்பாடு போட்டு டிவியில் கார்ட்டூன் சேனலை போட்டுவிட்டு அமர்த்தி விடுவார்கள். அந்த குழந்தை தட்டில் என்ன கிடக்கிறதோ அதை அள்ளி வாயில் போட்டு மென்று கொண்டே டிவியில் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடி சாப்பிட்டு முடித்து விடுகிறது. இதுதான் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை. ஆனால் தற்போது டிவி போய் செல்போன் வந்துவிட்டது அதே தட்டில் சாப்பாடு கையில் யூட்யூபில் கார்ட்டூன் படங்கள் ஓடிக்கொண்டிருக்க கன்னிமைக்காமல் பிள்ளைகள் கார்டுன் கேரக்டர்களாகவே வளர்கிறார்கள்.

இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு பள்ளியில் விளையாட கூட விளையாட்டு பீரியட் ஒதுக்கப்படுவதில்லை. எப்போதும் படிப்பு மட்டும்தான்.  இப்போது புதிதாக யோகா பீரியட் என்ற ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு எதுக்கு யோகா என்ற கேள்வி யாரும் கேட்பதில்லை. அதற்காக நான் யோகாவிற்கு எதிரானவன் என்ற அர்த்தமில்லை.  அந்த யோகா யாருக்கு தேவைப்படுகிறது என்பது தான் இங்கே முக்கியமான விடயம். கடுமையான வேலைப்பளு இல்லாத நபர்களுக்கும், வயதானவர்களுக்கும், முதியோர்களுக்கும் தான் யோகா பயிற்சி. ஓடி விளையாடும் வயதில் உள்ளவர்களுக்கு எதற்கு யோகா வகுப்பு அவர்களை விளையாட விட்டாலே அவர்கள் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் இப்போது விளையாட்டு வகுப்பை நிறுத்திவிட்டு யோகா வகுப்பிற்கு  முக்கியத்துவம் தருவது என்ன விதமான யோசனை என்று தெரியவில்லை.

சரி அது போனது போகட்டும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த  கார்த்திக் வீட்டுக்குள் வந்து முடங்கி கிடக்கிறான். எப்போதும் அவனுக்கு கை பரபரவென்றே இருக்கும். எதையாவது உருட்டிக் கொண்டே இருப்பான். இப்போதும் அவன் கைகளும் கண்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க அங்குமிங்கும் நோட்டமிடுகிறான் புதிதாக விளையாட எந்த ஒரு பொருளும் கண்ணில் சிக்கவில்லை. அவன் சட்டை ஒரு ஆங்கரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சட்டையில் ரவிக்குமாரின் பேனா சொருகி இருக்க அவன் கண்ணில் அந்த பேனா  தட்டுப்படுகிறது. அதை பார்த்தவுடன் அவன் கண்கள் அகலமாக பரவசத்துடன் விரிய, அழுத கண்கள் சிறு புன்னகையாக மாறுகிறது. தொங்கி கொண்டிருக்கும் சட்டையிலிருந்து பேனாவை தாவி எடுக்கிறான். சட்டை மாட்டி இருந்த மர சட்டம் அறுந்து கீழே விழுகிறது. பேனாவை எடுத்தவன் மூடியை கழற்றி சுற்று முற்றும் எழுதுவதற்கு பேப்பரை தேடுகிறான். அதன் பிறகு அவன் பேப்பரில் என்ன எழுதினான் என்பதை அடுத்த தொடரில் காண்போம்.
மீண்டும் பயணிப்போம்….

நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

1 Comment

  1. Chandran t

    September 1, 2025

    Pena than hero va?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கதைகள் சிறுகதை

குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச
கதைகள் சிறுகதை

கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து