அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1980 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –9

PLEASE CLICK THE AUDIO FORMAT

நடிகராக இருந்த எம்ஜிஆர் 30 ஜூன்  1977 ல் ராஜாஜி மண்டபத்தில் முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்று கொண்டார். எம்ஜிஆர் ஒரு கூத்தாடி, நடிகர், திறமை இல்லாதவர் என்ற கட்டமைப்புகளையெல்லாம் தகர்த்தெறிந்தார். ஒரு இந்திய குடிமகனாக உள்ள எவரும் இந்நாட்டில் தலைமை பொறுப்புக்கு வர முடியும் என்று நிரூபணம் ஆன நாள்தான் எம்ஜியார் முதல்வராக பதவியேற்ற நாள். திரு.கருணாநிதியிடம் அவர் விரும்பி கேட்ட சுகாதாரத் துறை கிடைக்காமல் போனதால் வைராக்கியமாக எடுத்துக் கொண்டு, அதே துறையை தான் முதல்வராக ஆன பின்பு எம்ஜிஆர் தன் வசமே வைத்துக் கொண்டார். அமைச்சரவையில் எம்ஜியாரின் மூளையாக செயல்பட்ட நாஞ்சில் மனோகரனுக்கு நிதித்துறையை ஒதுக்கினார்.  ஆர் எம் வீரப்பனுக்கு செய்தித் துறையை ஒதுக்கித் தந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன், காளிமுத்து, பொன்னையன், அரங்கநாயகம் போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. இளைஞரான திருநாவுக்கரசு அவர்களை துணை சபாநாயகர் ஆக்கினார். ஜேப்பியார் சிறப்பாக தேர்தல் பணிகளை செய்ததால் அவரை தனக்கான சிறப்பு பிரதிநிதியாக நியமித்துக்கொண்டார்.

காலம் உருண்டோட அந்த ஜேப்பியாரின் மருமகன் மற்றும் ஜேபிஆர் கல்வி குழுமத்தின் தலைவரான மரிய வில்சன் தற்போது விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிகளை செய்ய உறுதுணையாக களமாடிக் கொண்டிருக்கிறார். 1977 இல் ஜேப்பியார் எம்ஜிஆருக்கு உறுதுணையாக களமாடியது போல் 2026 இல் ஜேப்பியாரின் மருமகன் மரிய வில்சன் விஜய்காக களமாடிக் கொண்டிருக்கிறார். மரிய வில்சன் விஜய்க்கு வெற்றியை ஈட்டி தருவாரா? இல்லையா? என்பது தேர்தல் முடிவுகளை காணும் போது தான் தெரிய வரும்.

விகடன் நாளிதழ் எம்ஜிஆரின் வெற்றியை கொண்டாடியது. ஜூன் 30 அவரின் பதவி ஏற்பு நிகழ்வை, ஏழை மக்களுக்கு நம்பிக்கையையும், ஒளியையும் தந்த நாள் என்று வர்ணித்தது. திரு கருணாநிதி அவர்கள் நாங்கள் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார். மொழிக் கொள்கையில் திமுகவும், அதிமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழ்நாட்டில் செயல்படுவோம் என்றார் எம்ஜிஆர். ஊழலுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படும் என்று சொன்ன பிறகு சட்டமன்றத்தில் முதல் மசோதாவாக கருணாநிதி கொண்டு வந்த ஊழலுக்கு எதிரான மசோதாவை ரத்து செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார் எம்ஜிஆர். ஊழலுக்கு எதிராக இருந்த மசோதாவை எம்ஜிஆர் ஏன் அந்த ரத்து செய்தார் என்பது அப்போது சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

இந்த சமயத்தில் இன்னொரு இடத்தில் யுத்தக் களம் தீவிரமடைய தொடங்கியது. அந்த இடம் இலங்கை எனும் நாடு. தமிழர்களின் தொப்புள் கொடி உறவான இலங்கையில் தமிழர்கள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டு கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் இச்செய்தி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது அதனை கண்டிக்கும் விதமாக திமுக 23 ஆகஸ்ட் 1977 அன்று பேரணி மற்றும் கடையடைப்பு செய்யப்படும் என்று அறிவித்தது. அதற்கு ஆதரவாக திராவிடர் கழகம் கலந்து கொள்ளும் என்று ஈ.வே.ரா மணியம்மை அறிவித்தார். எம்ஜிஆர் 24 ஆகஸ்ட் 1977-ல் மிகுந்த யோசனைக்கு பிறகு சட்டமன்றத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தார். ‘மக்கள் திமுக” என்ற இயக்கத்தை நடத்தி வந்த நெடுஞ்செழியன் அதிமுகவுடன் இணைய விரும்பினார். அந்த விருப்பத்தை ஏற்ற எம்ஜிஆர் அவரையும், அவருடைய ஆதரவாளர்களான க.ராசாராம் போன்றோர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டார். கோரிக்கைக்காக தன்னை யாரும் தனியாக சந்திக்க கூடாது என்று  உத்தரவுகளை போட்டார் எம்ஜிஆர். இதனால் சிபாரிசுகள் தவிர்க்கப்படும் என்று அவர் நம்பினார்.

மூப்பனாரும், பழ நெடுமாறனும் இந்திரா காந்தியை தமிழகத்திற்கு வரவேற்க பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, எமர்ஜென்சியினால் பாதிக்கப்பட்ட திமுக, இந்திரா காந்திக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட தயாராக காத்துக் கொண்டிருந்தது. மணியம்மையும், கம்யூனிஸ்ட் கட்சியும் அந்த கருப்புக்கொடி போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்திரா காந்தி மதுரையில் வந்து இறங்கினார். அப்போது தயாராக இருந்த திமுகவினர் போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ்காரர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் இடையே சண்டையாக உருமாறி அந்த இடமே கலவரக் காடாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்திரா காந்தி மீது கற்கள் வீசப்பட்டன. பழ நெடுமாறன் இந்திரா காந்தியை கீழே இழுத்து தள்ளி அவர் மீது தலையணை, துணிகளை மூடி காப்பாற்றினார். இதனால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டதாக காங்கிரஸ் சார் பொது வெளியில் குறிப்பிட்டிருந்தனர். அதன்பின் தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் இந்திரா காந்தி.. திமுகவை பற்றி இந்திரா காந்தியும், இந்திய நாடும் புரிந்து கொண்ட நாள் தான் இந்த சம்பவம் நடைபெற்ற நாள் ஆகையால் திமுகவினர் எப்படிப்பட்டவர்கள் என்று உலகத்திற்கு உணர்த்திக் காட்டியுள்ளார்கள் எங்கள் வாரிசுகள் என்றார். இந்த சம்பவங்களை பற்றி எழுதினார் கருணாநிதி.

எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு அவருக்கு பணப்பற்றாக்குறை இருப்பதாக அவரே வெளிப்படையாக பேசினார். அதனால் தான் ஒரு முடிவு எடுத்துள்ளதாக அறிவித்தார். அந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது அதாவது தான் முதல்வராக இருந்து கொண்டே திரைப்படத்தில் நடிக்கப் போவதாக ஒரு அறிவிப்பை செய்தார் எம்ஜிஆர். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கல்யாணசுந்தரம் கடுமையாக எதிர்த்தார். அதற்கு பதிலடியாக பி. சி. ராய் மருத்துவராக இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டார் என்று விளக்கம் சொன்னார் எம்ஜிஆர். பிரதமர் மொரார்ஜி தேசாய் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று எதிர்க்கட்சிகளால் கூறப்பட்டது. உடனே மொரார்ஜி தேசாய்க்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதினார் எம்ஜிஆர். அதற்கு மொரார்ஜி தேசாய் நீங்கள் திரைப்படத்தில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை நீங்கள் தமிழக அரசியலுக்கு எந்தவித பாதகமும் இல்லாமல் நடித்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கினார். அப்போது விவசாயிகளின் போராட்டம் தமிழகத்தில் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எம்ஜிஆர் நடிக்கப் போவதை எல்லோரும் ஆட்சேபித்தனர். இதனால் வாலியின் கதை வசனத்தில் இளையராஜாவின் இசை அமைப்பில் நடிக்க இருந்த உன்னை விடமாட்டேன் என்ற படம் கைவிடப்பட்டது.

தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி மீண்டும்  மக்களவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார். அவருக்காக கர்நாடகா சிக்மகளூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சந்திரே கவுடா தனது பதவியை ராஜினாமா செய்தார். தமிழ்நாட்டின் அண்டை மாநிலமாக கர்நாடகா இருப்பதால் எம்ஜிஆரின் ஆதரவை இந்திரா காந்தி பெற விரும்பினார். அதற்கு எம்ஜிஆர் சம்மதித்தார். இந்திரா காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஜனதா வேட்பாளரான வீரேந்திர பாட்டிலுக்கு கருணாநிதி ஆதரவு கரம் நீட்டினார். 50 சதவீதம் பெண் வாக்காளர் நிறைந்த பகுதி சிக்மகளூர் தொகுதி. அங்கு போட்டி கடுமையாக இருந்தது. தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஜனதா அரசு இந்திராவின் எம்பி பதவியை பறிக்க முயற்சி செய்ய துவங்கியது. இதற்கு முன் இந்திரா பிரதமராக இருந்தபோது சஞ்சய் காந்தியின் மாருதி தொழிற்சாலை வழக்கு மறுபடியும் தூசி தட்டி எழுப்பப்பட்டது, அந்த வழக்கை விசாரணை நடத்தி அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் இந்திரா காந்தியின் MP பதவி பறிக்கப்பட்டது. இந்திராவின் கனவை தகர்த்தெறிந்தது அந்த தீர்ப்பு. அவரை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதிர்ச்சியான சூழலிலும் இந்திரா காந்தி கொஞ்சமும் கலங்காமல் “நான் மீண்டும் வருவேன்” என்று ஆளுங்கட்சியை பார்த்து சவால் விட்டு சென்றார்.

தஞ்சாவூருக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூரில் இந்திரா காந்தி போட்டியிட தீர்மானித்தார். இந்திரா காந்தி எம்ஜியாரின் ஆதரவை பெற விரும்பினார். எம்ஜிஆர் இந்திரா காந்தியை ஜெயிக்க வைப்பேன் என்று மூப்பனாரிடம் உறுதி அளித்தார். அப்படி உறுதி அளித்த சில மணி நேரங்களுக்கு பிறகு மொரார்ஜி தேசாயை எம்ஜிஆர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்கு பின் இந்திரா காந்தி தஞ்சாவூரில் போட்டியிட வேண்டாம் காரணம் அது கருணாநிதியின் சொந்த ஊர் என்பதால் பாதுகாப்பாக  இருக்காது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும் என்று காரணம் சொன்னார். அதைக் கேட்ட காங்கிரசாருக்கு எம்ஜிஆர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இந்திரா காந்தி தஞ்சாவூரில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். காங்கிரஸ் சார்பாக சிங்காரவேலு போட்டியிட்டார் இருந்தாலும் தேர்தலில் இந்திரா காந்தியை போட்டியிட செய்யாமல் எம்ஜிஆர் தடுத்துவிட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் மன வருத்தத்தில் இருந்தனர். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் மத்தியில் மொரார்ஜி தேசாயின் தலை மேலான ஜனதா அரசு ஆட்டம் காண தொடங்கியது ஆகையால் மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார். அதன் பிறகு இந்திரா காந்தியின் ஆதரவுடன் சரண்சிங் பிரதமராக பதவி ஏற்றார். அந்த அமைச்சரவையில் காங்கிரஸ் ஜனதா அல்லாத வேறொரு கட்சியான அஇஅதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றது. இதுவரை மாற்றுக் கட்சி மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது இதுவே முதல் முறை. அந்த துவக்கத்தை அஇஅதிமுக தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திராவின் வழக்கை சரண்சிங் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்த அதை சரண்சிங் மறுத்துவிட்டார். இதனால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. மக்களவைக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்திரா காங்கிரஸோடு எம்ஜிஆர் கூட்டணி வைக்க முயற்சி செய்தார் அமைச்சரவையில் இருந்து கொண்டே இந்திராவுடன் எப்படி கூட்டணி பேசலாம் என்று இடைக்கால சரண்சிங் ஜனதா கட்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. நான் கருணாநிதியுடனே கூட்டணி வைப்பேன் என்று எம்ஜிஆர் பேச, அது பெரும் பரபரப்பாக அரசியல் களத்தில் மாறியது. இந்திரா காந்தியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக பேசி முடித்து விட்டதாக கருணாநிதி செய்தியை கசிய விட, தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த பரபரப்புக்கு மத்தியில் ஜனதா கட்சி ஒரு முடிவு செய்தது தமிழ்நாட்டிற்கு பிஜு  பட்னாயக்கை அனுப்பி வைத்து திமுகவையும், அஇஅதிமுகவையும் இணைக்க முயற்சி செய்தது. அதனடிப்படையில் எம்ஜிஆரும் கருணாநிதியும் தனியாக சந்தித்து பேசினர். அவர்களுக்குள் சில உடன்பாடுகள் ஏற்பட்டது. இதை கவனித்த இந்திரா காந்தி இவர்கள் இருவரும் இணைந்து விட்டால் தமிழ்நாட்டில் இந்திரா காங்கிரஸிற்கு இடம் இல்லாமல் போய்விடும் என்று உணர்ந்தார். அதனால் மூப்பனாரை அழைத்து எம்ஜிஆர் திமுகாவோடு இணைந்த பிறகு கருணாநிதி அவரை அப்படியே தின்று விளங்கி விடுவார். அதனால் அவருடைய எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகு எம்ஜிஆர் தன் முடிவை மாற்றிக் கொண்டார். அப்போது அந்த இணைப்பு சாத்தியமில்லாமல் போனது.

பெரியாருக்கு காஞ்சியில் சிலை வைக்க அனுமதி வேண்டும் என்று குரல் எழுப்பினார் கருணாநிதி. சங்கர மடத்திற்கு எதிரே அந்த இடம் இருப்பதால் அனுமதி தர முடியாது என்று எம்ஜிஆர் திட்டவட்டமாக மறுத்தார். இதை கையில் எடுத்த திமுக சங்கராச்சாரியாருக்காக பெரியாருக்கு சிலை வைப்பதை  எம்ஜிஆர் தடுக்கிறார் என்று காட்டமாக விமர்சித்தார் கருணாநிதி. இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு செல்ல அதே இடத்தில் சிலை வைக்கலாம் என்று தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில் காஞ்சியில்  அதே இடத்தில் பெரியாரின் சிலை அமைக்கப்பட்டது.

இந்திரா காங்கிரஸும், திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அஇஅதிமுக, இடதுசாரிகள், ஜனதா கட்சி மூன்றும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தது. சென்னை கடற்கரையில் திமுக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அதில் பங்கேற்க  இந்திரா காந்தியை அழைத்தார் கருணாநிதி. இதற்கு முன் இந்திராவுக்கு கருப்புக்கொடி காட்டிய திமுக தற்போது கட்சி கொடி காட்டி வரவேற்றது. நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என வரவேற்றார் கருணாநிதி. தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியது. இந்திரா காந்தியும் கருணாநிதியும் எம்ஜிஆரை கடுமையாக தாக்கி பேசினர். காங்கிரஸ் திமுக கூட்டணியை விமர்சித்த பழ நெடுமாறனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தார் இந்திரா காந்தி. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டணி. தேசிய அளவில் 351 இடங்களை பெற்றது இந்திரா காங்கிரஸ். இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

தேர்தல் தோல்வி பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டார் முதல்வர் எம்ஜிஆர். திமுக, இந்திரா காங்கிரஸ் இடையே  பலமான கூட்டணி ஏற்பட்டதால்தான் தேர்தலில் வென்றது என்று சொல்வதற்கில்லை. நமது அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தான் தோல்வி ஏற்பட்டது என்று எல்லோரும்  ஒவ்வொருவராக காரணங்களை அடுக்கினர். அது என்னென்ன பிரச்சனை என்று கேட்டறிந்தார் முதல்வர் எம்ஜிஆர். விவசாய பிரச்சனை அதனால ஏற்பட்ட துப்பாக்கி சூடு, மதுவிலக்கு அமல்படுத்தியதில் உள்ள குளறுபடிகள், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்றார் எம்ஜிஆர்.

ஆனால் மத்தியில் இந்திரா காந்தியின் அரசு வேறொரு திட்டத்தை தீட்டி கொண்டிருந்தது. மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி செய்யும் மாநிலங்களை கலைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும்  பரவியது. தமிழக அரசு கலைக்கப்படும் என்று எம்ஜிஆர் உணர்ந்து கொண்டார். உடனே நாஞ்சில் மனோகரன், பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்துக் கொண்டு இந்திராவை சந்திக்க டெல்லி விரைந்தார். அவர் எவ்வளவு முயற்சி செய்தும் இந்திராவை சந்திக்க முடியாமல் போனது. ஆட்சி கலைப்புக்கான மேகங்கள் இந்தியா முழுவதும் சூழ ஆரம்பித்தன. 17 பிப்ரவரி 1980 அன்று தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் என்ன நடந்தது. அடுத்து எம்ஜிஆர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாரா என்பது பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்…..

மீண்டும் பயணிப்போம்…….

நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – T.V.K Vs D.M.K- அரசியல் கட்டுரை – பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 சட்டமன்றத் தேர்தல்  T.V.K Vs D.M.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது