அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY-1980 – (After the dissolution of the MGR Regime) ADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –10

This article is available in audio format here :

1980 இல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர்க்கு மிகவும் மூளையாகவும் அனுசரணையாகவும் இருந்த தளபதிகளில் ஒருவரான நாஞ்சில் மனோகரன் கட்சியில் இருந்து விலகும் முடிவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசியல் கட்சியில் முக்கியமான பிரச்சனையே நம்பகத்தன்மை இல்லாதது தான். எந்த நேரத்தில் யார் நம்மை கைவிடுவார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது. அரசியல் கட்சியை வழி நடத்துவது ஒரு தலைவருக்கு மிகவும் சிக்கலான விடயம். அப்படி ஒரு தலைவர் எந்த இடையூறுகளும், துரோகங்களும் சந்திக்காமல் கட்சி நடத்துவது இயலாத காரியம். எவ்வித இடையூறுகளையும், கருத்து வேறுபாடுகளையும் கலைந்து யார் வெற்றி வாகை சூடுபவரோ அவரே  நல்ல தலைவராக, அரசியல்வாதியாக  ஜொலிக்க முடியும்.

துரோகங்கள், புறக்கணிப்புகள் எல்லாம் எம் ஜி ஆர்க்கு ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய வாழ்நாளில் கடும் போராட்டத்திற்கு மத்தியில்  போராடி மக்கள் செல்வாக்கை பெற்று திமுகவில் ஒரு தொண்டனாக அண்ணாவுக்கு வெற்றியை தேடி தந்தவர் எம்ஜிஆர். பின்னர் அண்ணா மறைவிற்குப் பிறகு  அதே தீரத்துடனும், ஆர்வத்துடனும் திரு கருணாநிதியின் வெற்றிக்கு பெரும் பாடுபட்டவர்தான் எம்ஜிஆர். அதை யாரும் வரலாற்றில் மறைத்து விட முடியாது. அண்ணாவை இதய தெய்வமாக அனுதினமும் நெஞ்சில் நிறுத்தி களமாடிய பொழுதும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அண்ணாவின் வெற்றி ஒன்றே குறிக்கோளாக பயணித்தவர் எம்ஜிஆர். அதன் பிறகு அதே உத்வேகத்துடன் மனமாச்சரியம் இன்றி திரு  கருணாநிதியின் வெற்றிக்கும் உறுதுணையாக பயணித்த எம்ஜிஆர் அண்ணா இல்லாத காலத்திலும் திரு  கருணாநிதிக்கு வெற்றியை  ஈட்டி தந்தார். அப்படி தந்தவருக்கு,  தான் விரும்பி கேட்ட சுகாதாரத்துறை அமைச்சர் பதவி தரப்படாமல் நடிகர் என்ற ஒரே காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டார். அந்த ஏமாற்றத்தையும் கடந்து தொடர்ந்து கட்சி பணியாற்றினார்.

அதிமுகவில் வெற்றியில் மட்டும் பங்கெடுத்துக் கொண்டு தோல்வி ஏற்பட்டவுடன் விலகிச் செல்வது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி எழுப்பப்பட்டது நாஞ்சில் மனோகரிடம். அதற்கு அவர் எம்ஜிஆரிடம் அரசியல் புரிதலோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. ஆகவே நான் கண்ணீரோடு விடைபெறுகிறேன் என்று அறிக்கை கொடுத்துவிட்டு அந்த ஈரம் காய்வதற்குள் திரு கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.  நாஞ்சிலரின் விலகளைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை எம்ஜிஆர். வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் கூட்டணியை அமைத்து வலுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உறுதியோடு காய்களை நகர்த்த தொடங்கினார்.

இரண்டு கம்யூனிஸ்டுகள், குமரி அனந்தனின் காமராஜ் தேசிய காங்கிரஸ், பழ நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், தேவராஜ் அர்ஸ் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் லீக் மற்றும் சில உதிரி கட்சிகளை அதிமுகவோடு கூட்டணியில் இணைத்துக் கொண்டார். ஜனதா கட்சி மட்டும் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது. 50 சீட்டுகளுக்கு மேல் வேண்டுமென்று கராராக இருக்க, 25 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று மறுத்துவிட்டார் எம்ஜிஆர். எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. ஆகவே இந்த தேர்தலில் நாங்கள் தனியாக போட்டியிட்டு கொள்கிறோம் என்று அறிவித்துக் கொண்டது ஜனதா கட்சி. அதிமுகவில் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சி கூட்டணியில் இல்லாததால் 128 தொகுதிகளை தங்களுக்கு வைத்துக்கொண்டு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 16 தொகுதிகள் வீதம் 32 தொகுதிகளை ஒதுக்கினார் எம்ஜிஆர். குமரி அனந்தன் கட்சிக்கு 12 தொகுதிகளையும், பழ நெடுமாறன் கட்சிக்கு ஏழு தொகுதிகளையும், மீதி இருந்த தொகுதிகளை உதிரி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு சிக்கல் இல்லாமல் கூட்டணிகளை முடித்துக் கொண்டார். அதிமுகவில் உள்ள உதிரி கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டது. 

மறுமுனையில் திமுக கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் ஏற்கனவே வெற்றி கூட்டணியாக தொடர்ந்தாலும் அவ்வப்போது இரண்டு கட்சிகளுக்குள்ளும் குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தன. தேர்தல் நெருங்க நெருங்க குழப்பங்கள் மேலும்  அதிகரித்தன. இந்திரா காங்கிரஸ் மேலிடத்தில் இதைப் பற்றி எடுத்துக் கூறினார் கருணாநிதி. காங்கிரஸ் தலைமை தற்போதைய தலைவர் இளையபெருமாளை நீக்கிவிட்டு எம் பி சுப்பிரமணியத்தை தமிழ்நாட்டு இந்திரா காங்கிரஸ் தலைவராக்கியது. இந்த நியமனம்  திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சுப்பிரமணியம் திமுகவுக்கு நேர் எதிராக சிந்திக்க கூடியவர் என்று கருணாநிதி கருதினார். காரணம் அவர் ஈ வி கெ சம்பத்துடன் திமுகவிலிருந்து விலகி பின்னர் தமிழ் தேசியக் கட்சியில் பயணித்து பிறகு காங்கிரஸில் இணைந்தவர். ஆகவே அவர் திமுகவிற்கு எதிராக செயல்படுவார் என்று திமுக கருதியது. திமுக நினைத்தது போல் தொகுதி உடன்படிக்கையில் சிக்கல் உருவானது. தங்களுக்கு சமமான தொகுதிகளை தருமாறு இந்திரா காங்கிரஸ் கேட்டது. எம்ஜிஆரை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குதான் அப்போது திமுகவிற்கு பிரதானமாக இருந்தது. ஆகையால் எல்லா பிரச்சனைகளையும் பொறுத்துக் கொண்டு இந்திரா காங்கிரஸிற்கு 109 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.

அன்று இருந்த நிலை போல தற்போது 2026 இல் திமுக கூட்டணியில் உருவாகி இருப்பது தற்போது கண்கூடாக தெரிகிறது. காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறது மறுபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறது. அதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜயின் த வெ க என்ற புதிய கட்சி உருவாகி தமிழகத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்து இருப்பதே தன்னுடைய பேர வலிமைக்கு வலு சேர்ப்பதாக காங்கிரஸ் நினைக்கிறது என்று  பெரும்பாலான செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரே வித்தியாசம் அன்று இந்திரா காங்கிரஸ், மத்தியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்தது. இன்று திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறது. அன்று எம்ஜிஆரை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு பிரதானமாக இருந்தது.  இக்காலகட்டத்தில்  புதிய சக்தியாக உருவாகிய விஜயின் த வெ க வை தோற்கடிக்க வேண்டும் என்று பிரதானமாக இருக்கிறது. திமுகவின் எண்ணம் எதுவாக இருந்தாலும் இறுதியில் அன்று எம்ஜிஆர் வென்றார் அதேபோல் 2026 இல் விஜய் வெல்வாரா என்பது காலம்தான் பதில் சொல்லும்.

28 மே 1980 இல் தொடங்கி 31 மே 1980 வரை நடைபெற்ற தேர்தலில் 129 இடங்களை வென்று அதிமுக  அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பெரும் நம்பிக்கையில் இருந்த திமுக கூட்டணி தோல்வியை தழுவியது. அந்தத் தேர்தலில் திமுக 37 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்று சரிவை சந்தித்தது. இந்த தேர்தல் முடிவு திரு கருணாநிதி அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது அதனால் அவர் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.  “மக்கள்  இன்னும் பக்குவப்படவில்லை” இன்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார். ஒரு படி மேலே சென்று தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன். நீங்கள் அதில் சவாரி செய்யலாம் என்று தன் அறிக்கை வாயிலாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சிறிய கூட்டனியை அமைத்துக் கொண்டு. பிரச்சாரங்களில் நான் என்ன தவறு செய்தேன் என்னுடைய ஆட்சியை ஏன் கலைத்தார்கள் என்று மக்களிடம் சென்று முறையிட்டு அனுதாப ஓட்டுக்களை அள்ளிச் சென்றார் எம்ஜிஆர். மக்கள் அவரை 1980 மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து முதலமைச்சராக பதவியில் அமர்த்தினார்கள்.

எம்ஜிஆர் எப்படி ஆட்சி செய்தார். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

மீண்டும் பயணிப்போம்…….

நன்றி வணக்கம். ஃப்ரெடி டிக்ரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – T.V.K Vs D.M.K- அரசியல் கட்டுரை – பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 சட்டமன்றத் தேர்தல்  T.V.K Vs D.M.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது