அரசியல் ஆசிரியரின் பார்வை

செங்கோட்டையன் “தவெக”வில் இணைந்தது சரியா…? தவறா…?

50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பயணித்த திரு செங்கோட்டையன் இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெகவில் இணைந்திருப்பது எல்லோருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. காரணம் 55 வருடங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதாவை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டவர். அதுவும் ஒரே கட்சியில் தொடர்ந்து  நேற்று வரை பயணித்தவர். இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜய் என்ற நடிகரின் கட்சியில் இணைந்திருப்பது தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியக்குறியாக மாறியிருக்கிறது.

விஜய் காஞ்சிபுரம் மேடையில் சொன்னது போல் தவெக ஒரு ஆச்சரியக்குறியாக இருக்கும் என்பதன் நீட்சி தான் செங்கோட்டையயனின் இணைப்பு. முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மீது ஏதோ ஒரு வெறுப்பு அல்லது ஒவ்வாமை மக்களிடையே இருந்திருக்கிற வாய்ப்பு இருக்கலாம். காரணம் அதிகப்படியான ஊழல்களும், முறைகேடுகளும் செய்து இருப்பார்கள் அதனால் அவர்கள் மீது மக்களிடையே ஒரு அவர்ஷன் எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் 50 வருடங்களாக செங்கோட்டையன் அமைதியான முறையில்தான் அவருடைய அரசியல், நிர்வாக செயல்பாடுகள் இருந்து கொண்டிருக்கிறது.

அவர் தொண்டர்களிடம், நிர்வாகிகளிடம், பொதுமக்களிடம்  ஒரு இணக்கமான ஒரு மென்மையான அணுகு முறையை மட்டுமே கையாண்டு கொண்டிருப்பதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எதிர்ப்புகள் இதுவரை எழுந்ததில்லை. திரு செங்கோட்டையன் அதிமுக ஆட்சியில் பயணித்தபோது அவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருக்கலாம். அல்லது அது நிரூபிக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அரசியலில் ஒரு சிலர் மட்டுமே பெருவாரியான குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் செய்த சிறு சிறு தவறுகளை கூட “பரவாயில்லை” என்று ஒதுக்கித் தள்ளுமாறு தான் அமைந்திருக்கும் அப்படிப்பட்ட ஒருவித புரிதல் தான் செங்கோட்டையின் மீது மக்களிடம்  இருக்கிறது.

1972 க்கு முன் எம்ஜிஆரின் மன்ற செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் பிறகு எம்ஜிஆர்  கட்சி துவங்கிய பின் அவருடன் பயணித்து 1977 முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். ஒரு முறை மட்டும் தோல்வியடைந்தார். எம் ஜி ஆர்க்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்ட பின் (ஜெ) அணி, (ஜா) அணி என இரு கூறுகளாக பிரிந்த பின், தன்னுடைய தொலைநோக்கு  பார்வையின் மூலம் எந்த அணி காலத்தைக் கடந்து நிற்கும் என்பதை உணர்ந்து செல்வி  ஜெயலலிதாவின் அணியான (ஜெ) அணியில் இடம்பெற்று தன்னுடைய அரசியல் வெற்றிப் பயணத்தை  தொடர்ந்து கொண்டிருந்தார். இதுவே அவருடைய தெளிவான முடிவெடுக்கும் திறனை  காட்டுகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் எந்தக் கட்சியை தங்களுடன் கூட்டணியில் இணைப்பது அல்லது எந்த வெற்றி பெறும் கட்சிகளுடன் கூட்டணியாக இணைவது போன்ற தெளிவான முடிவுகளை சிந்தித்து எடுக்கக்கூடிய திறன் படைத்த கட்சிகள் தான் தேர்தலில் கூட்டணியாக வெற்றி பெறுகிறார்கள். அது போல் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் அவர்கள் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின் அல்லது தங்களை நீக்கிக் கொண்ட பிறகு வேறு எந்த கட்சியில் இணைந்து  தங்களின் அரசியல் வாழ்க்கையை வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடிய தெளிவான முடிவுகளை தேர்ந்தெடுத்து இணைகிறார்களோ அவர்கள்தான் சிறந்த வெற்றியாளர்களாக  அரசியல் களத்தில் கருதப்படுவார்கள்.

அந்த தெளிவான முடிவை எடுக்கக்கூடிய திறன் கொண்ட நபர்கள் தொடர்ந்து அரசியல் களத்தில் பிரகாசித்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு ஒரு  உதாரணமாக மறைந்த திரு மூப்பனார் அவர்களை கூறலாம். 1996 இல் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று காங்கிரஸிடம் எவ்வளவோ முறையிட்டும் காங்கிரஸ் மேலிடம் அவரின் ஆலோசனைகளை புறந்தள்ளிவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது அவர் ஏன்  அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முறையிட்டார் என்பதற்கான காரணம் மக்கள் மத்தியில் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் மீது மிகுந்த கோபமும், வெறுப்பும் இருந்ததை உணர்ந்து கொண்டதால் எதிர்க் கட்சியான திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று வலியுறுத்தினார். ஆனால் அவரின் வேண்டுகோளை நிராகரித்து தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் மேலிடம்.

அதனால் மூப்பனார் அவர்கள் “தமிழ் மாநில காங்கிரஸ்‘ என்ற புதிய கட்சியை தேர்தலுக்கு நெருக்கமாக ஒரு சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி அமைத்து 1996 தேர்தலில்  மெஜாரிட்டியான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார். அந்த தேர்தலில் அதிமுகவின் தலைவரான ஜெயலலிதா அவர்களே தோல்வி அடைந்தார். அந்த அளவுக்கு மக்கள் அதிமுகவை புறக்கணித்தனர். இந்த மக்களின் மனநிலையை சரியாக புரிந்து கொண்ட மூப்பனார் ஒரு தெளிவான முடிவை எடுத்து தனிக்கட்சியை துவங்கி  அதில் வெற்றியும் கண்டார். அதுபோல் மக்கள் யாரை விரும்புகிறார்கள், எந்த கூட்டணியை விரும்புகிறார்கள், யாரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அவர்களுடன் இணையும் போது தான் வெற்றி அவர்களுக்கு சுலபமாக கிட்டும்.

அதை விடுத்து மக்களின் சிந்தனைக்கு எதிராக ஒரு முடிவை எடுத்தால் அது அவர்களுக்கு பலனை தராது என்பதுதான் வரலாறு  கற்றுத் தந்த பாடம். முக்கியமானதாக நாம் இப்போது பார்ப்பது திரு செங்கோட்டையன் அரசியல் பயணம் மிகச் சரியாக தெளிவான பாதையில் சென்று கொண்டிருப்பதை நாம் கண்கூடாக  பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தலைவர்  சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கட்சியாக மாறி மாறி செல்வது அவருடைய நம்பகத்தன்மையை மக்களிடம் கேள்விக்குள்ளாக்கும். அப்படி நிறைய தலைவர்கள் கட்சி மாறி வெற்றி பெற்று இருந்தாலும் கூட அவர்கள் மக்கள் செல்வாக்கோடு இருப்பார்களா என்பது ஒரு கேள்விக்குறிதான். ஒரு சில நபர்கள் மட்டுமே கட்சி மாறினாலும் அவருக்கு எவ்வித  கெட்ட பேரும் ஏற்படாது அதற்கு காரணம் அவர்கள் கட்சிகளின் மாறும் கால  சூழலை பொறுத்து மக்களின் மனநிலையை பொறுத்துதான் அமைகிறது.

சில நேரங்களில் மக்கள் இந்த கட்சியுடன், இந்த நபர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவார்கள். இந்த கட்சிகள், இந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவார்கள். அப்படி ஒரு காலகட்டம் ஒவ்வொரு சமயங்களில் அமையும். அப்படி மக்கள் மனதில் எதிர்பார்ப்புகள் எப்போது ஏற்படுகிறதோ அப்போது அவர்கள் எந்த கட்சி மாறுனாலும், எந்த கூட்டணி மாறி இருந்தாலும் அவர்களுக்கு மக்களிடம் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மாறாக செல்வாக்கு மட்டுமே கூடும். ஆகவே திரு செங்கோட்டையன் அவர்கள் தவெகவில் இணைந்தது மிகச்சரியான முடிவாகவே வரும் காலங்களில் கருதப்படும்.

இன்னொரு விடயம் நிறைய அரசியல் புள்ளிகளும், நிறைய தொழிலதிபர்களும்,  மெத்த படித்தவர்களும் தவெகவில் இணைவதற்கு தொடர்ந்து பல மாதங்களாக முயற்சி செய்து கொண்டு இருந்தும்  பல கட்சிகள் தவெகவில் கூட்டணியில் இணைவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தும் செங்கோட்டையன் அவர்களை மட்டும் விஜய் ஏன் தன் கட்சியில்  இணைத்துக் கொண்டார்  என்பதை பற்றி வேறொரு கட்டுரையில் நாம் காண்போம்.

நன்றி வணக்கம்
ஆசிரியர்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – T.V.K Vs D.M.K- அரசியல் கட்டுரை – பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 சட்டமன்றத் தேர்தல்  T.V.K Vs D.M.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது