ஆங்கிலேயரை அலற வைத்த சம்பவக்காரி


சுதந்திர தின சிறப்புக் கட்டுரை – அஞ்சலை அம்மாள்
கடலூருக்கு நிறைய சிறப்புகள் உண்டு. சமணர்களின் தலைமையிடமாக ஐந்தாம் நூற்றாண்டில் கடலூர் பாடலிபுத்திரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கடலூரை சென்னை மாகாணத்தின் தலைமை இடமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர்.
கடலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்த முத்துமணி அம்மாகண்ணுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர்தான் அஞ்சலை அம்மாள். குதிரைகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்து வரும் முத்துமணி பிரிட்டிஷாரின் குதிரைகளுக்கு லாடம் கட்டுவதால் அவருக்கு ஆங்கிலம் பேசக்கூடிய அளவுக்கு பழக்கம் இருந்தது. அஞ்சலை அம்மாளுக்கு தனியாக ஆசிரியரை அமர்த்தி தமிழும் ஆங்கிலமும் சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுத்தார். அஞ்சலை அம்மாள் படிப்பில் படுச்சுட்டி. பல புத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கினார்.
ஒரு நாள் வழக்கம்போல் லாடம் கட்ட வந்த வெள்ளைக்கார போலீஸ் டபிள்யூ ஜார்ஜ் என்பவன் வேகமாக வந்து ஒரு முதியவர் மீது மோதிவிட்டான். மோதியவன் வீழ்ந்து கிடந்த கிழவனை தோலூரியும் அளவுக்கு சாட்டையால் விலாசித் தள்ளினான். இந்த மிருகத்தனமான செயலை தட்டிக் கேட்க யாரும் முன் வராமல் பயந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கை சாட்டையை தடுத்து நிறுத்தியது. வெள்ளைக்காரன் கடும் கோபத்துடன் யாருடா என்னை தடுப்பது என்று திரும்பிப் பார்க்க யாரடா இல்லை யாரடி என்று சாட்டையை பற்றி நின்றார் 18 வயது அஞ்சலை அம்மாள். வீரம் கொப்பளிக்க சினிமாவில் அநீதிக்கு எதிராக ஹீரோ திடீரென தோன்றுவது போன்ற காட்சி அந்த புழுதி பறக்கும் மண்ணில் நடந்தேறியது. இந்த காட்சியில் ஹீரோ இல்ல ஹீரோயின்.ஆமாம் ஆக்சன் ஹீரோயின்.

வீரம் விளைந்த மண்ணில் ஆணுக்கு நிகராக வீராங்கனைகளாக தோன்றிய வேலுநாச்சியார், குயிலி, ராணி மங்கம்மாள், ஜான்சி ராணி லட்சுமி பாய், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய சாவித்திரிபாய் பூலே போன்ற வரலாற்று சம்பவக்காரிகள் இருந்தனர் அவர்களின் வரிசையில் வந்து நின்றவர் தான் தென்னாட்டு சிங்கம் அஞ்சலை அம்மாள். அவரை நான் மயில் என்றோ, மான் என்றோ, அன்னம் என்றோ குறிப்பிடாமல் ஏன் சிங்கம் என்று குறிப்பிடுகிறேன் என்றால் சிங்கத்தில் பெண் சிங்கம் தான் வேட்டையாடும் தன்மை கொண்டது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து நம்முடைய தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகம் தான். அதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன. அதனால் தான் நாட்டை குறிப்பிடும்போது தாய்நாடு என்று அழைக்கிறோம் நாட்டை காப்பவள் பெண் அந்த பெண் சமூகம் தான் நம் முன்னோர்களின் தலைவியாக இருந்தவள்.

சவுக்கடிப்பட்ட கிழவனுக்கு ஆதரவாக ஆங்கிலேயனை, ஆங்கிலத்தாலே விலாசி தள்ளினார் ஆண் பிள்ளைகள் வாயாடினால் அறிவாளி என்றும் பெண் பிள்ளைகள் வாயாடினால் பெரிய வாயாடி பொம்பளை என்று பலிக்கும் இந்த சமூகத்தில் முத்துமணி அஞ்சலை அம்மாளின் பேச்சை மெய் மறந்து ரசித்தார். இத்தனை ஆண்கள் எதிர்த்து கேட்க துணிவில்லாமல் இருந்த இடத்தில் துணிச்சலுடன் தன் மகள் பேசியதை பார்த்து புல்லரித்து போய் நின்றார். அன்று தொடங்கிய போராட்ட குணம் அவர் வாழ்நாளில் காந்தி, பெரியார், பாரதியார், காமராஜர் போன்ற தலைவர்களை அஞ்சலையம்மாளின் வீடு தேடி வந்து பார்க்கும் இடத்திற்கு உயர்த்திக் கொண்டு சென்றது.

மூன்றாண்டுகள் உருண்டோடின
ஒரு நாள் மீன் சந்தையில் மீன் வாங்குவதற்காக அஞ்சலை அம்மாள் தன் கணவருடன் வந்திருந்தார். அங்கு மீன் வியாபாரி ஒருவனை கட்டையால் தாக்கிக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளைக்கார போலீஸ். அவனை தடுத்து நிறுத்தி அவனிடமிருந்து கட்டையை பிடுங்கி தூர எரிந்து அவனை கயிற்றால் கட்டி கட்டிப்போட்டார். அப்படி கட்டி போடப்பட்டவன் தான் மூன்றாண்டுகளுக்கு முன் அஞ்சலை அம்மாவுடன் வாக்குவாதம் செய்த வெள்ளைக்கார இளைஞன் டபிள்யூ ஜார்ஜ். இரண்டு முறை அவமானப்பட அஞ்சலை அம்மாளை பழி தீர்க்க வேண்டும் என்று வஞ்சினம் கொண்டான். அஞ்சலை அம்மாள் செய்த இந்த தரமான சம்பவம் காட்டுத்தீவு போல் பரவியது.
1914 நள்ளிரவில் அஞ்சலை அம்மாளின் வீட்டு வாசலில் மாட்டு வண்டியில் இருந்து இரண்டு கால்கள் வந்து இறங்கின. அந்த கால்களின் சொந்தக்காரர் மகாகவி பாரதியார். அவரின் கவிதைகளையும் புத்தகங்களையும் படித்து அரசியல் தெளிவை பெற்றவர். இன்று தன் வீட்டிற்க்கே அவர் நேரில் வந்ததை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி கடலில் திளைத்தார். பாரதியாரை நான்காண்டுகளாக வலைவீசி தேடிக் கொண்டிருந்த போலீஸ் கண்ணில் மண்ணை தூவி அவருக்கு சாப்பாடு சமைத்து போட்டு பாதுகாப்போடு வழி அனுப்பி வைத்தார் அஞ்சலை அம்மாள்.
அஞ்சலையம்மாளின் அரசியல் ஆர்வத்தைக் கண்ட கணவன் முருகப்பனும் வீட்டாரும் அவருக்கு ஆதரவாக துணை நின்றனர். இன்னொரு நாளில் பாரதியை கைது செய்த போலீஸ் சிறையில் அடைத்தது. அவருக்காக தினமும் உணவு மற்றும் பழங்களை கொண்டு செல்ல தவற மாட்டார் அஞ்சலை அம்மாள். பாரதியாரின் மனைவி செல்லம்மாளை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். கடலூரில் உள்ள காங்கிரஸ்காரர்களை வரவழைத்து நாட்டு நடப்பு பற்றி பேசிப் பேசி சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக உருமாறி இருந்தார். அவரின் செல்வாக்கு கடலூர் முழுக்க பரவி இருந்தது. காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முதல்முறையாக ஜாலியன் வாலாபாக் படுகொலையை பற்றி வீர உரை நிகழ்த்தினார். கூடியிருந்த அத்தனை ஆண்களும் பிரமிப்பால் வாயை பிளந்து நின்றனர்.
1921 ஆம் ஆண்டு 17ஆம் தேதி காந்தி கடலூரில் எந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு அவரின் செல்வாக்கு உயர்ந்து நின்றது. கள்ளுக்கடைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய முதல் பெண் இவர்தான் என்று நினைக்கிறேன் கடலூரில் கள்ளுக்கடைஓனர்கள் அஞ்சலை அம்மாளை கண்டால் வடிவேலு படத்தில் ஒருவன் கடையின் சட்டரை சாத்திவிட்டு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓடுவானே அதுபோல பல இவரைக்கண்டு தெரித்து ஓடினார்கள். இன்று இது போல யாராவது ஒரு பெண் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட முடியுமா? அப்படி யாராவது ஒரு பெண் துணிந்து நின்றால் அவ்வளவுதான் சமூக வலைதளங்கள் அவள் பெண்மையை அவதூறுகளால் நார் நாராய் குதறி போட்டு விடும். அந்த அளவு சீர்கெட்டு போய்விட்டது இன்றைய சமூக வலைதளங்களில் உலவும் கூலிப்படை கும்பல்களின் அட்டூழியம்.

கள்ளுக்கடை மறியலில் விடுதலையான பெரியார் கதர் துணிகளை எல்லோரும் அணிய வேண்டும் என்று பரப்புரை செய்யத் தொடங்கினார். பெரியாருக்கு தன்னுடைய வீட்டில் விருந்து வைத்து கவனித்தார். அவரைப் பின்பற்றி ஒவ்வொரு ஊராக கதர் துணிக்கு ஆதரவாக பரப்பரை செய்யத் தொடங்கினார். தொழுநோயால் பாதிக்கப்பட்டு சிறையில் இருந்த சுப்பிரமணிய சிவாவை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தன் வீட்டில் வைத்து குணமாகும் வரை பாதுகாத்து வந்தார். அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற தாய். வள்ளி என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு பெண்ணை அவள் கணவரின் கொடுமையில் இருந்து காப்பாற்றி தன் வீட்டில் பல நாட்கள் வைத்து பாதுகாத்து அந்த குடிகார கணவனுக்கு பாடத்தை புகட்டினார்.
மதராசில் 1861 சென்னை ஸ்பென்சர் சந்திப்பில் நீல் என்ற கொடுங்கோலனுக்கு சிலை வைத்தார்கள். அந்த சிலையை 66 வருடங்களுக்குப் பிறகு தகர்த்தெறிய பெண்கள் படையுடன் ரயிலில் புறப்பட்டார். அவருடன் 11 வயது நிரம்பிய மகள் அம்மாபொன்னையும் அழைத்து வந்தார். பலகட்ட எதிர்ப்புகளைக் கடந்து சிலையை பெண்கள் கூட்டத்தினர் முற்றுகையிட்டனர். தன் தோளில் மகளை தூக்கி நிறுத்தி கையில் ஒரு சுத்தியலை கொடுத்து ஓங்கி ஒரே அடி அடிக்கச் செய்தார். அம்மாபொண்ணு அடிக்க நீலின் சிலையில் கைவிரல் உடைக்கப்பட்டது. இதைக் கண்ட போலீசார் தடியடி நடத்தினர். அந்த இடமே அலோகலப்பட்டது. பலரின் மண்டைகள், கைகள் உடைக்கப்பட்டன. அத்தனை பேரையும் அள்ளிச்சென்று கூண்டில் நிறுத்தியது போலீஸ். இரண்டு பேரை தவிர 257 பெண்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அந்த இரண்டு பேர் அஞ்சலை அம்மாள் மற்றும் 11 வயது சிறுமி அம்மாபொண்ணு. அஞ்சலை அம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனை அம்மாபொண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகமே கதறி அழுதது.
அஞ்சலை அம்மாளை பார்க்க சிறைக்கே வந்தார் காந்தி. தண்டனை முடிந்து அம்மாபொண்ணு என் ஆசிரமத்தில் தங்கிக் கொள்ளட்டும் என்று கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார் அஞ்சலை அம்மாள்.
உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் போலீஸ் முழுவதும் சென்னை கடற்கரையில் குவிந்திருக்க அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து சோளிங்கநல்லூரிலிருந்து ஊர்வலமாக சென்று கோவளத்தில் உப்பை எடுத்து போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். மற்ற காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் போராட்டம் நடத்துவதற்கு முன்பே கைது செய்யப்பட்டார்கள் அஞ்சலை அம்மாள் மாத்திரம் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடித்தார். இது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதில் அஞ்சலை அம்மாள் கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் அவர் தனது கடைசி பையனை வயிற்றில் சுமந்திருந்தார். பிறகு பரோலில் வெளியே வந்து தன் மகனை பெற்றெடுத்தார். உடனே 16 நாட்களுக்குள் சிறைக்கு சென்று மூன்று மாதமாக சிறையிலேயே குழந்தையை வளர்த்தெடுத்தார். அந்த மகனுக்கு ஜெயில்வீரன் என்று பெயர் வைத்தார். சிறையை விட்டு வந்த சிறிது நாளில் கல்லு கடை மறியலில் ஈடுபட்டார் அதில் அவர் மண்டை உடைக்கப்பட்டு மீண்டும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளே சென்றார்.27 ஆண்டுகளுக்குப் பிறகு துறைமுகத்தில் புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் டபுள்யூ ஜார்ஜ் தன் பழியை இதன் மூலம் தீர்த்துக் கொண்டான்.

பாம்பும் பள்ளியும் ஓணானும் வாசம் செய்வது போன்ற இடம் இந்த பெல்லாரி கொடுஞ்சிறை ஆறு மாத சிறை தண்டனையை முடித்து வெளிவரும் போது 50 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர். கட்ட மறுத்தால் மீண்டும் மூன்று மாதம் சிறை தண்டனை என்றனர். இதைக் கேட்ட அஞ்சலை அம்மாள் சற்றும் யோசிக்காமல் கட்ட முடியாது என்றார். மறுபடியும் மூன்று மாத சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டது. அவரின் சுதந்திர வேட்கை நெஞ்சுறுதியை நினைத்தால் நமக்கு கண்கள் பணிக்கிறது இப்படி ஒரு பெண் இருந்தாரா என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது.
சென்னை குடோன் தெருவில் அந்நிய துணி விற்கக் கூடாது என்று போராடி தன் கணவருடன் ஆறு மாதம் சிறைக்கு சென்றார். போராட்டம், சிறை இப்படி காலம் முழுவதும் கணவனும் மனைவியும் சிறையிலேயே நாட்களை கழிப்பதால் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. வீடு ஏலத்திற்கு வந்தது. தங்க இடம் இல்லாமல் வாடகை வீட்டில் குடியேற வீடு தேடி அலைந்தார். போலீசாரின் அச்சுறுத்தலால் யாரும் வீடு தர முன்வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தன் குடும்பத்தினருடன் நடுத்தெருவில் நின்றார் அஞ்சலை அம்மாள். இதை பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அங்கிருந்த நல்ல மனிதர்கள் வீட்டை மீண்டும் அவருக்கே கிடைக்க செய்யுமாறு உதவி புரிந்தனர்.
1937 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது தென்னார்க்காடு மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளரும் ஒரு ஆண் வேட்பாளரும் போட்டி போட வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் ஏற்பட்டது. பெண் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அஞ்சலை அம்மாள் தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். வெற்றி பெற்று முதலில் நீல் சிலையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று 76 ஆண்டுகள் கழித்து 1937 நவம்பர் 21 ஆம் தேதி சென்னை அண்ணா சாலையிலிருந்து நீல் சிலை அகற்றப்பட்டது.
1940களில் சட்டமன்றத்தில் ராஜாஜியும், அவருக்கு எதிரான நிலை கொண்ட சத்தியமூர்த்தி ஐயரும் தங்களுக்கு வேண்டியவர்களை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்புக்கு அமர வைக்க போட்டி போட்டதை கண்டு அஞ்சலையம்மாள் சிரித்துக் கொண்டார்.
காந்தியின் சத்தியாகிரக போராட்டம் துவங்கியது அஞ்சலை அம்மாள் எம்எல்ஏ ஆறு மாதம் கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார். வெளியில் வந்த 39 நாட்களுக்குள் தறி நெசவு சங்கம் வைப்பதை தடுத்த போலீசை கண்டித்து போராட்டம் நடத்தினார். மீண்டும் அவரை 18 மாதம் வேலு சிறையில் அடைத்தனர்.
1943இல் போலீஸ் மீண்டும் பரபரப்பாக அஞ்சலை அம்மாளை தேடியது. கள்ளுக்கடையை மூடச்சொல்லி மீண்டும் போராட துவங்கி விடுவார் ஆகையால் அவரை கைது செய்து அடைக்க வேண்டும் என்று ஊர் முழுக்க வலைவீசி தேடியது. அந்தத் தேர்தல் வேட்டையிலிருந்து தப்பிக்க இந்த முறை மட்டும் அஞ்சலை அம்மாள் தலைமறைவானார். அவருக்கு நிறைய பேர் அடைக்கலம் கொடுத்தனர். அவர்களை போலீசார் அடித்து துன்புறுத்தியது. இதைக் கண்டு மனம் வெதும்பி தானாக சரணடைந்தார். இந்த முறை அவரை போலீஸ் அழைத்துச் செல்லும் போது வழிமறித்து மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து நின்றது. ஆனால் நான் விரும்பியே சிறைக்கு செல்கிறேன் வழி விடுங்கள் என்று கேட்டுக்கொள்ள மக்கள் மனம் இல்லாமல் வழிவிட்டனர். எட்டரை மாதம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1946 சட்டமன்றத் தேர்தலில் அஞ்சலை அம்மாள் மீண்டும் நிற்க மாட்டேன் என்று காமராஜரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார். ஆனால் அவரின் கோர்க்கையை ஏற்காமல் காங்கிரஸ் கமிட்டி அவரையே வேட்பாளராக அறிவித்தது. சட்டமன்றத்திற்கு தேர்வாகி மீண்டும் சென்றார்.
1947 சுதந்திரம் கிடைத்து மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சி ஆறு மாதங்கள் கூட நீடிக்கவில்லை.

1948 ஜனவரி 30 ஆம் தேதி கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தலைசுற்றி கீழே சரிந்து விழுந்தார். மயக்கம் தெளிந்து எழுந்தவர் இனி நான் அரசியல் ஈடுபட மாட்டேன் என்று கணவரிடம் சொல்லிவிட்டு அதன்படியே வாழ ஆரம்பித்தார். அதன்பிறகு கிராமத்திற்கு சென்று கிராம சேவையில் ஈடுபடத் தொடங்கினார்.
1961 பிப்ரவரி 20 அவர் மரணத்தை தழுவிக் கொண்டார். இப்படிப்பட்ட வீராங்கனையை இந்த நாடு இன்று பெயரளவில் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழக காங்கிரஸ் அவரின் புகழை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்தப் பணியை இப்பொழுது த.வெ.க கட்சியின் தலைவர் விஜய் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அன்புள்ளம் கொண்ட அறிவார்ந்த வாசகர்களாகிய உங்கள் பேராதரவுக்கு நன்றிகள். ஒரு சிறிய வேண்டுகோள் இந்த சுதந்திர தின சிறப்புக் கட்டுரையை பற்றி தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கட்டுரை தங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு எங்களின் பயணத்திற்கு ஒரு ஏணிப்படியாக அமையட்டும்.
நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Rajesh
August 15, 2025அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்