ஹாப்பி பர்த்டே காந்தி மஹான்- 02-10-2025

ராஜ்கோட்டின் திவான் கரம்சந்த் காந்தி, புத்திலிபாய் குடும்பத்தில் நான்கு பிள்ளைகளில், காந்தி இளையவர். அவர் சிறுவயதிலேயே ஜைன மதம், இந்து புராணக் கதைகள், புனித நூல்கள் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டார். ராஜ்கோட் உயர்நிலைப் பள்ளியில் படித்து, 1887-இல் மேட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கணிதம், நல்லெண்ணம், நேர்மை ஆகிய பாடங்களில் சற்று ஆர்வம் இருந்தாலும், மற்ற பாடங்களில் சாதாரண நிலைதான். பாவ்நகர் சமால்தாஸ் கல்லூரியில் படிக்கத் தொடங்கினார், தனது சுயசரிதையிலேயே, “நான் மிகச் சிறந்த மாணவரல்ல, என்று குறிப்பிடுகிறார்
1883 ல் 13 வயதில் கஸ்தூரிபா காந்தியை குழந்தை திருமணம் செய்து கொண்டார். அந்த காலத்தில் குழந்தை திருமணம் சாதாரணம். வெட்கம், நேர்மை, ஒழுக்கம் ஆரம்பத்தில் திருமண வாழ்க்கையை சிக்கலாகச் செய்தன. கஸ்தூரிபா அவரை புரிந்துகொண்டு, வாழ்க்கையின் கடுமைகளை சமாளிக்க உதவினர். அவர்களுக்கு ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ் நான்கு மகன்கள் பிறந்தனர். திருமண வாழ்க்கையில் ஆரம்பத்தில் சண்டைகள், மாறுபட்ட பழக்க வழக்கங்கள் இருந்தும், காந்தியின் சமூக, அரசியல், ஆன்மீகச் செயல்களில் கஸ்தூரிபாவின் ஆதரவு மிக முக்கியமானது. 1942ல் கஸ்தூரிபா காந்தி உயிரிழந்தார்.

1888-ல் (வயது 18) லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டம் படிக்கச் சென்றார். 1891-இல் சட்டம் முடித்து வழக்கறிஞராக தகுதி பெற்றார். 1891-ல் இந்தியா திரும்பி பம்பாயில் வழக்கறிஞராக பணியாற்றினார். ஒரு வழக்கிற்காக தாதா அப்துல்லா, காந்தியை வழக்கறிஞராக தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்தார். அவர் தென்னாப்பிரிக்கா சென்றது திருப்பமாக அமைந்தது. அங்கு சென்றதும் இனவெறிப் பாகுபாட்டை அனுபவித்தார். பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரயிலில் முதல் வகுப்பு டிக்கெட் இருந்தும், தோல் நிறம் காரணமாக வெளியே தள்ளப்பட்டார். ஹோட்டல், நீதிமன்றம், பேருந்து போன்ற இடங்களில் பல்வேறு அவமதிப்புகளுக்கு ஆளானார்.
1893–1914 தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களை நடத்தும்போது அவருடன் இணைந்த முக்கிய தலைவர் முகம்மது அலி ஜின்னா அப்போது ஜின்னா தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக இருந்தார், காந்தியின் மகன் மனிலால், பணி செய்தார். காந்தியின் நெருங்கிய நண்பர் ஹெர்மன் கல்லென்பேக், ஹாஜி ஹபீபுல்லா, ஹாஜி கஸீம் போன்ற இந்திய வியாபாரிகள் காந்தியின் போராட்டங்களை நிதியாகவும் சமூக ரீதியிலும் ஆதரித்தனர்.
1894 – நேட்டல் இந்திய காங்கிரஸ் அமைத்தார். 1906 – பாஸ் சட்டத்திற்கு எதிரான முதல் பெரிய சத்யாகிரகம். காந்தி பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார், அதனால் மக்கள் ஆதரவு அதிகரித்தது. காந்தியின் போராட்டங்கள் பிரித்தானிய அரசைச் சலனமடைய செய்தது. 1893 முதல் 1914 வரை காந்தி தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தினார். அதில் பல முக்கியமான வெற்றிகள் கிடைத்தன. அந்நேரத்தில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வேகமெடுத்துக் கொண்டிருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ், பால்கங்காதர் திலக், கோபாலகிருஷ்ண கோகலே போன்ற தலைவர்கள், காந்தியை இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்க அழைத்தனர்.

1914-இல் காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பின், காந்தியுடன் பலர் தேசிய இயக்கத்தில் பங்கு பெற்றனர். கோபாலகிருஷ்ண கோகலே காந்தியின் அரசியல் ஆசான் ஆனார். பால கங்காதர திலக். அன்னி பிசண்ட் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத், வினோபா பாவே காந்தியுடன் பணியாற்றினர். சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பத்தில் காந்தியுடன் இருந்தார். பெரியார், காமராஜர், ராஜாஜி போன்ற பல தமிழ்நாட்டு தலைவர்களும் காந்தியுடன் இணைந்து செயல்பட்டனர்.
இந்தியாவில் நடந்த முதல் சத்யாகிரகம் சாம்பரான் சத்யாகிரகம் (1917, பீஹார்) நிலக்காரர்களால் சுரண்டப்பட்ட நீலப்பயிர் விவசாயிகளை காப்பாற்ற காந்தி போராட்டம் நடத்தினார். இது வெற்றி பெற்றதால், காந்திக்கு தேசிய அளவிலான மக்களின் நம்பிக்கை கிடைத்தது. 1919 ல் பிரித்தானிய அரசு “ரௌலட் சட்டம்” மூலம் பேசுவதற்கான, கூடுவதற்கான சுதந்திரத்தை பறித்தது. இதனால் 1919 அமிர்தசரஸில் “ஜாலியன் வாலாபாக் படுகொலை” நடந்தது, காந்தி மக்கள் அனைவரையும் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைத்தார்.
பிரித்தானிய அரசு உப்பிற்கு கூட வரி விதித்ததால் 1930 ல் உப்பு சத்யாகிரகம் காந்தி தண்டி ஊருக்கு 240 மைல் நடைபயணம் மேற்கொண்டார். இது உலகம் முழுவதும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கச் செய்தது. 1942) ல் “க்விட் இந்தியா இயக்கம்” ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்ற கோஷத்துடன் பெரிய இயக்கம் நடத்தினார். இதனால் காந்தி, நேரு உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

1921-இல் மதுரையில் வந்தபோது, காந்தி தனது ஆடையை மாற்றிய திருப்பம் நிகழ்ந்தது. அவர் அப்போது “இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதி ஆடையுடன் வாழ்கின்றனர், எனவே நான் எளிமையான கைத்தறி வேட்டி மட்டும் அணிவேன்” என்று முடிவு செய்தார். அதன்பின் வாழ்நாள் முழுவதும் வேட்டி கைத்தறி துணி மட்டுமே அணிந்தார்.
1921 ல் ஈரோடு பயணத்தின் போது பெரியார் ஈ.வி.ராமசாமியையும் சந்தித்தார். இருவரும் சமூக நீதி குறித்த நோக்கில் ஒரே பக்கம் இருந்தனர். காந்தி சாதியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை; ஆனால் அதில் உள்ள அநியாயங்களை நீக்க வேண்டும் என்றார். பெரியார் சாதி என்பது அடிமைத்தனத்தின் வேரே; அதை முற்றிலும் அழிக்காமல் சமத்துவம் வராது என்றார். இதுவே இருவருக்கும் மிகப் பெரிய முரண்பாடு. வர காரணமானது. காந்தி தாழ்த்தப்பட்டவர்களை “ஹரிஜன்கள்” என்று அழைத்தார். பெரியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். “ஹரிஜன் என்ற பெயர் கூட மேலோங்கிய பார்வையிலிருந்து வந்தது, உண்மையான சமத்துவம் தரவில்லை” என்றார். காந்தி இந்து மதத்தின் அடிப்படை மதிப்புகளை காக்க விரும்பினார் ஆனால் சீர்திருத்தங்கள் அவசியம் என்றார் பெரியார். இந்து மதமே சாதியினை நிலைநிறுத்துகிறது எனவே அதை விட்டு வெளிவர வேண்டும் என்றார் பெரியார். சாதி ஒழிப்பு மற்றும் சமூக சீர்திருத்தத்தில் காந்தி போதுமான தீவிரம் காட்டவில்லை என்று விமர்சித்தார், பெரியார் தனி பாதையைத் தேர்ந்தெடுத்தார். இதனால் காங்கிரஸிலிருந்து விலகி, பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்

காந்தியும், அம்பேத்கரும் முதன் முதலில் 1931, லண்டன் Round Table Conference-ல் சந்தித்தனர். காந்தியும், அம்பேத்கரும் “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்க வேண்டும்” என்பதில் ஒரே கருத்தில் இருந்தனர். காந்தி “தாழ்த்தப்பட்டவர்கள் ஹரிஜன்கள் (இறைவனின் மக்கள்)” என்று அழைத்தார். கோவில்களில் நுழைவு, கல்வி, குடிநீர் உரிமை போன்றவற்றில் அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பணிபுரிந்தார். அம்பேத்கரும் இதை வரவேற்றார், ஆனால் “சாதி வேரோடு அழிய வேண்டும்” என்ற தீவிர நிலைப்பாட்டில் இருந்தார் அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி தேர்தல் தொகுதிகள் (Separate Electorates) வேண்டும் என்றார். காந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காரணம்: “இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்; பிரிவினை ஏற்படுத்தக் கூடாது” என்றார். (1932) பிரிட்டிஷ் அரசு அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி தொகுதி அளிக்க முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க காந்தி யெரவடா சிறையில் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். அம்பேத்கர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முடிவாக பூனா உடன்படிக்கைகையெழுத்திடப்பட்டது. தனித் தொகுதி இல்லாமல், பொது தொகுதிகளில் ஒதுக்கீடு (Reservation) வழங்கப்பட்டது.
காந்தி, அம்பேத்கர், பெரியார் – மூவரின் சிந்தனைகளும் வேறுபட்ட பாதையில் சென்றாலும், இந்திய சமூக நீதி மற்றும் சமத்துவப் போராட்டத்தில் மூவரும் முக்கிய பங்காற்றியவர்கள் இவர்கள் மூவரின் சிந்தனைகள் இன்று வரை இந்திய அரசியல், சமூக வாழ்க்கை, மத சிந்தனைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

சுதந்திரம் அடைவது அஹிம்சை மற்றும் சத்யாகிரக வழியில் மட்டுமே சாத்தியமானது என்று காந்தி நம்பினார். ஆனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் (armed struggle) செய்ய வேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸ் நம்பினார். இந்தியாவின் சுதந்திரம் மிக விரைவில் வேண்டுமென்பதால், போஸ், காந்தியின் வழியை ஏற்க மறுத்து தனியாக இந்திய தேசிய படை (INA – Indian National Army) அமைத்தார்.
1910–20 களில் ஜின்னா காங்கிரசிலும் முஸ்லிம் லீகிலும் செயல்பட்டு, இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சுதந்திரம் அடைய வேண்டும் என்றார். காந்தி அரசியலில் நுழைந்த போது, ஜின்னா அவரை “இந்திய சுதந்திரத்தின் தூய்மையான குரல்” என்று வர்ணித்தார். காந்தியும் ஜின்னாவும் இருவரும் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்று ஒரே குறிக்கோள் கொண்டிருந்தனர். காந்தி “இந்தியா ஒரு நாடு, இதில் இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ வேண்டும்” என்றார். ஜின்னா ஆரம்பத்தில் இதை ஏற்றார், ஆனால் பின்னர் “முஸ்லிம்கள் தனி தேசம்” (Two Nation Theory) என்ற நிலைக்கு மாறினார். “முஸ்லிம்கள் தனி கலாசாரம், மதம், அரசியல் அடையாளம் கொண்டவர்கள்; எனவே பாகிஸ்தான் தேவை” என்றார். இதுவே இருவருக்குமான மிகப் பெரிய முரண்பாட்டை உருவாக்கியது.
1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆனால் அதே நேரத்தில் நாடு இரண்டாகப் பிளவுபட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவை உருவானது. இந்த பிரிவினை காரணமாகப் பெரிய அளவில் இந்து–முஸ்லிம் கலவரங்கள், கொலைகள், அகதிகள் பிரச்சினை ஏற்பட்டது காந்தி அடிப்படையில் இந்தியா ஒன்றுபட்ட நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார். “இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாக வாழ வேண்டும்; மதம் நாட்டை பிளக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார். எனவே பாகிஸ்தான் பிரிவை அவர் ஏற்கவில்லை. பிரிவினை நேரத்தில் பரவலான வன்முறைகள் நடந்தன. கல்கத்தாவில் நடைபெற்ற அவரது நோன்புப் போராட்டம் (fast unto death) காரணமாக கலவரங்கள் நிறுத்தப்பட்டன. இந்திய அரசு பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய நிதி (55 கோடி ரூபாய்) ஒதுக்க விரும்பவில்லை. ஆனால் காந்தி: “ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு அந்த நிதி வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் அது அநியாயம்” என்று வலியுறுத்தினார். இந்த நிலைப்பாட்டே சில தீவிரவாத இந்துத்துவக் குழுக்களின் கோபத்துக்கு காரணமானது. பிரிவினை எப்படியும் நடந்துவிட்டது என்பதை கண்டு அவர் மிகுந்த துயருற்றார். “பாகிஸ்தான் உருவானது ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை போல — உடலைக் காப்பாற்றினாலும், அதனால் பெரும் வலி ஏற்பட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

30 ஜனவரி 1948 புதியதில்லி, பீர்லா ஹவுஸ் (Birla House) தோட்டம் மாலை 5.15 மணியளவில், காந்தி தனது வழக்கமான பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றார். கூட்டம் நடக்கும்முன், கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாதுராம் வினாயக் கோட்சே என்பவர் காந்தியை திடீரென துப்பாக்கியால் மூன்று முறை சுட்டார். காந்தி அப்போது “ஹே ராம்” என்று சொல்லியவாறு மண்ணில் சரிந்தார். என்று சிலர் கூறுகின்றனர். கோட்சே உடனடியாக பிடிபட்டார். கோட்சே ஒரு தீவிர இந்துத்துவவாதி. அவர் காந்தியை இந்துக்களின் நலனுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு அதிக ஆதரவு அளித்தார் என்று குற்றம் சாட்டினார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க காந்தி வலியுறுத்தியது அவருக்கு மிகவும் கோபம் ஏற்படுத்தியது.. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, நாதுராம் கோட்சே 1949 நவம்பர் 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.

காந்தியின் மரணம் இந்தியாவையே, உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பண்டிட் ஜவஹர்லால் நேரு அப்போது நாடு முழுவதும் உரையாற்றி, “ஒளி மறைந்துவிட்டது; ஆனால் அந்த ஒளி என்றென்றும் நம்மை வழிநடத்தும்” என்றார். “மக்கள் எதிர்காலத்தில் கூறுவார்கள்: ஒருவன் ஒருகாலத்தில் வாழ்ந்தான், அஹிம்சையாலும் உண்மையாலும் மக்களை வழிநடத்தினான்; அவனே காந்தி” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதினார். “காந்தி தான் அஹிம்சையின் தந்தை; என் வாழ்நாள் முழுவதும் அவர் எனக்கு ஊக்கமாக இருக்கிறார்” என்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா) கூறினார். ஜார்ஜ் மார்ஷல் (அமெரிக்க வெளியுறவு செயலர்) “காந்தியின் மரணம் உலகத்திற்கே மிகப் பெரிய இழப்பு” என்றார். கிங் ஜார்ஜ் VI (இங்கிலாந்து மன்னர்) “அமைதிக்கான குரல் உலகத்திலிருந்து மறைந்துவிட்டது” என்று வருந்தினார். யு.என்.ஓ (United Nations Organization) காந்தி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், அவரது நினைவாக ஜனவரி 30-ஐ “மார்ட்டியர்ஸ் டே” என்று கடைப்பிடிக்க அறிவுறுத்தியது.
இன்று உலகம் முழுவதும் போர், பயங்கரவாதம், மத கலவரங்கள் அதிகம். காந்தியின் அஹிம்சை கொள்கை சமாதானத்திற்கான மிகச் சிறந்த வழி. சமத்துவம் & சகோதரத்துவம் சாதி, மதம், மொழி, சமூக பாகுபாடு இன்னும் இந்தியாவில் உள்ளது. காந்தியின் “அனைவரும் சகோதரர்கள்” என்ற எண்ணம் சமூக ஒற்றுமைக்கு அவசியம். கைத்தறி, சுய தொழில், கிராம வளர்ச்சி – இன்றைய ஸ்டார்ட்அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களுடன் தொடர்புடையது. கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு காந்தி கூறிய சுயநிறைவு கொள்கை இன்னும் பொருந்தும். சுற்றுச்சூழல் & எளிமை காந்தி “பூமியில் எல்லோருக்கும் தேவைக்குரிய வளங்கள் இருக்கின்றன; ஆனால் பேராசைக்கு அல்ல” என்று கூறினார்.
அக்டோபர் “2” ஐக்கிய நாடுகள் சபையால் “உலக அஹிம்சை தினம்” என அறிவிக்கப்பட்டது. அதற்க்கு காரணம். காந்தி மகான்.
2025-இல் இந்தியாவிற்கு காந்தியின் கொள்கைகள் தேவைப்படுகிறதா? என்ற கேள்விக்குப் பதில் ஆம் – மிகவும் அவசியம் என்பதே பெரும்பாலான சிந்தனையாளர்களின் கருத்து.
நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்




