அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K – அரசியல் கட்டுரை

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம்

2026 தேர்தல்  D.M.K Vs T.V.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது என்பது பலருக்கும் வியப்பான செய்தியாக இருக்கும். அதிமுகவை தவிர்த்து விட்டு விஜய் எப்படி முந்திச் செல்வார் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக கடந்த பல தேர்தல்கள் மூலம் தேய்ந்து கொண்டிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிமுகவில் ஒரு கரிஷ்மாடிக் லீடர் என்ற ஆளுமை இல்லாதது பெரும் குறையாகத் தான் இருக்கின்றது.

முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தலைமையில்  கடந்த சில தேர்தல்களின் முடிவுகளை பார்க்கையில் கொங்கு பகுதியின் தலைவராக மட்டுமே அவர் சுருங்கிப் போய்விட்டார் என்பது கண்கூடாக தெரிகிறது.  அவருடைய சமூக மக்களின் ஆதரவு அவருக்கு பெருமளவில் இருப்பதை நாம் மறுத்து விட முடியாது.  ஆனால் அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகள்  மட்டுமே தமிழகத்தின் முதல்வராகும் தகுதியை நிர்ணயித்து விட முடியாது. எந்த ஒரு  தலைவருக்கு தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பரவலான ஆதரவும், செல்வாக்கும் உள்ளதோ அவர்தான் முதல்வர் ரேசில் பங்கெடுக்க முடியும்.   கரிஷ்மாடிக் தலைவர்கள் தான் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று முதல்வராக முடிசூட்டிக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் அப்படி உருவான கரிஷ்மாடிக் தலைவர்கள் யார் யார் என்பதைப் பற்றி விரிவாக காண்போம்.

திமுகவை எதிர்த்து களம் இறங்கிய முதல் நபர் எம் ஜி ஆர் அவர்கள். அவருக்கு சினிமா மூலம் ஏற்கனவே ஒரு கவர்ச்சி மக்களிடம் இருந்தது. அவரின் ரசிகர் கூட்டத்தை தான் திமுகவில் தொண்டர்களாக இணைத்தார். அண்ணாவால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அண்ணா மறைவுக்குப் பிறகு திமுகவிலிருந்து வெளியேறினார். அரசியல் களத்தை  தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற  எண்ணம் அவருக்கு எதனால் ஏற்பட்டது என்றால் சினிமா என்ற புகழின் மூலம் கிடைத்த செல்வாக்கு நமக்கு வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கையினால் தான். அதனால் தைரியமாக களத்தில்  இறங்கினார். அதில் அவர் வெற்றியும் கண்டார். எம்ஜிஆர் ஒரு கரிஷ்மாட்டிக் லீடராக அறியப்பட்டார்.

எம்ஜிஆரை தொடர்ந்து அதிமுகவில் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஒரு கரிஸ்மாட்டிக் லீடர் என்ற இடத்திற்கு தன்னை தகவமைத்தார். அவருக்கும் சினிமா என்ற துறையே புகழடைய காரணமாக அமைந்தது. எம்ஜிஆரின் மனைவி திருமதி ஜானகி அம்மையார் அவர்களும் சினிமா வெளிச்சத்தில் இருந்து வந்தவர் தான் என்றாலும் எம்ஜிஆரின் மனைவி என்ற அறிமுகம் கிடைத்தாலும் செல்வி. ஜெ. ஜெயலலிதா போல் புகழ் பெற்ற நடிகையாக இல்லாததே மக்களின் செல்வாக்கை பெற முடியாமல் போனதற்கான காரணமாக அமைந்தது. ஆகையால் ஜானகி அம்மையாரை செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் எளிதாக வீழ்த்த முடிந்தது. அவருக்குப் பிறகு சினிமாவிலிருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்தார்கள். அவர்களால் ஏன் சோபிக்க முடியவில்லை என்று வரிசையாக பார்ப்போம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏன் மக்களால் புறக்கணிக்கப்பட்டார் என்றால் அவரை சிறந்த நடிகராகத்தான் மக்கள் பார்த்தார்கள். மக்களின் தோழனாக, பெண்களை கவர்ந்தவராக, இளைஞர்களை ஈர்த்தவராக அவரை பார்க்கவில்லை. அதனால் தான் அரசியலில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அது போல எஸ். எஸ். ராஜேந்திரன்,  கே. பாக்கியராஜ், டி. ராஜேந்தர், ராதாரவி, கார்த்திக், சரத்குமார் இன்றைய மக்கள் நீதி மையத் தலைவர் கமலஹாசன் வரை மக்களிடம் பெரிதாக ஈர்க்கப்படாமல்  போனதற்குக் காரணம் திரைப்படத்தைத் தாண்டி மக்களுடன் நேரடியாக கனெக்ட் ஆகக்கூடிய விடயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அவர்களுடைய திரைக் கதாபாத்திரங்களாகட்டும்,அவர்களால்  மக்களுக்கு நேரடியாக எந்தவொரு நலத்திட்ட உதவிகளாகட்டும், இளைஞர்கள் பெண்கள் ஆகியோரை ஒன்றாக ஈர்க்கக்கூடிய எந்தவித செயல்களிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளாததால் அரசியல் அவர்களுக்கு கைகூடாமல் போனது.

இதில் மாறுபட்ட ஒரு திரை கலைஞர் இருந்தார் என்றால் அவர் திரு விஜயகாந்த் அவர்கள் தான். நாம் மேற்கூறிய அனைத்து விடயங்களிலும் தன்னை தொடர்பு படுத்திக் கொண்டவர். உதாரணமாக தன்னுடைய திரைப்படங்களில் புரட்சிகரமான வசனங்களை வைத்தார். மக்களுக்கு தொண்டு செய்வது போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். நேரடியாக பல நலத்திட்டங்களை மக்களுக்கு தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் செய்தார். அதனால் தான் அவர் ஒரு கரிஷ்மாடிக் லீடராக அவர் கட்சியினரால் கருதப்பட்டார். அதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக வேகமாக உருவெடுத்தார். அதன் பிறகு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவறான முடிவுகளை எடுத்ததால் அரசியலில் அவர் வீழ்ச்சி கண்டார். இருப்பினும் அவர் இன்று நல்ல ஆரோக்கியத்துடனும், உயிரோடும் இருந்திருந்தால் தமிழக அரசியலில்  அவரும் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளம் வந்திருப்பார் என்பது திண்ணம்.

கரிஷ்மாடிக் லீடர் அல்லாத திரைப்பட பின்புலம் இல்லாத தலைவர்கள் யார்? அவர்கள் மக்களின் ஏகோபித்த செல்வாக்கை பெற முடியாது போனது எப்படி! என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
பயணம் தொடரும்…….

– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் கட்டுரைகள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K- அரசியல் கட்டுரை – பகுதி.2

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் திரைப்படத்துறையில் இல்லாமல் அரசியல் களத்தில் மட்டுமே களமாடிக் கொண்டிருந்த அரசியல் ஆளுமைகளில் கரிஷ்மாடிக் லீடர் அல்லாத