அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1967 – INC Vs DMK -அரசியல் கட்டுரை – பகுதி-6

1962 இல் 50 தொகுதிகளை திமுக வெற்றி பெற்றாலும் தொண்டர்கள் சோர்வாக இருந்ததற்கு காரணம் அண்ணாவின் தோல்வி. அண்ணாவின் தோல்வியை ஜீரணிக்க முடியாத திமுக தொண்டர்கள் வேதனையில் இருக்க, அதற்கு காமராஜர் தான் காரணம் என்று ஒரு அறிக்கை மூலம் குண்டைத் தூக்கிப் போட்டார் அண்ணா. ஐந்தரை லட்சம் செலவு செய்து காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடித்தார் என்ற குற்றச்சாட்டு வைத்தபிறகு அதைப்பற்றி காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. காரணம் காங்கிரஸில் ஏற்பட்ட ஓட்டை அவர்களுக்கு பெரியதாய் தோன்றியது. அந்த ஓட்டையை எப்படி சரி செய்ய வேண்டும் என்ற கவனத்தில் காமராஜர் ஈடுபடத் தொடங்கினார். அதே மனநிலையில் இருந்த நேரு திமுகவின் வளர்ச்சியை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாவை டெல்லிக்கு தேர்வு செய்து அனுப்பி வைத்தது திமுக. நாடாளுமன்ற கூட்டத்தில் திராவிட நாடு என்ற தனிநாடு கோரிக்கையை அண்ணா முதல் பிரிவினைக் கொள்கையை பேச நாடே பத்திக் கொண்டது. திமுகவை வீழ்த்துவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் நேரு,

இந்திய-சீன போர் துவங்கிய பிறகு எல்லா கட்சிகளும் இந்தியாவிற்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க அண்ணா தன்னுடைய தனி நாடு கோரிக்கையை ஒத்தி வைத்து விட்டு இந்தியாவுக்காக உண்டியல் குலுக்கி பணம் சேர்த்து நாட்டுக்கு அனுப்பினார். இந்திய சீனப் போர் சாதகபாதகம் இல்லாமல் முடிவடைந்த நிலையில் இந்தியாவுக்கு குறிப்பாக நேருவுக்கு அது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அந்த பின்னடைவை சரி செய்யும் விதமாக நேரு ஒரு புதிய சட்ட மசோதாவை உருவாக்கினார். திமுகவை எதிர் கொள்ள மட்டுமே அந்த மசோதா பயன்பட்டது. தனிநாடு கோரிக்கை வைத்தால் கட்சி பதவிகள், கட்சியின் அங்கீகாரம் தடை செய்யப்படும். தேர்தலில் நிற்பதற்கு தடை செய்யப்படும் போன்ற அம்சங்கள் புதிய மசோதாவில் இடம் பெற்றது. திமுக தன் கொள்கைகளில் சிறிதளவு மாற்றத்தை மட்டும் செய்துவிட்டு காங்கிரசுக்கு எதிராக களமாட வீரியமாக கிளம்பியது.

1963ல் திருவண்ணாமலையில் நடந்த இடைத்தேர்தலிலும், திருச்செங்கோடு மக்களவை இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று காங்கிரசுக்கு பெரிய ஷாக்கை கொடுத்தது. காங்கிரஸ் படிப்படியாக கரைந்து கொண்டிருப்பதை உணரத் தொடங்கினார் காமராஜர். காங்கிரசை மீட்டெடுக்க புதிய யுக்தியை கையில் எடுத்தார் காமராஜர். அதுதான் கே-பிளான். அந்த பிளான் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த பிளானின் படி மூத்த அரசியல்வாதிகள் பதவியை விட்டு கட்சி பணிக்கு செல்ல வேண்டும் என்ற கண்டிஷனை போட்டார்.  தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் காமராஜர். இந்த செயலை தற்கொலைக்கு சமம் என்று பெரியார் கடுமையாக விமர்சித்தார்.

1964இல் நேருவின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மேலும் பெரும் பின்னடைவை கொடுத்தது. இனி யார் பிரதமராக பொறுப்பு ஏற்பது என்ற கடுமையான குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கையில் லால் பகதூர் சாஸ்திரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இரண்டாவது பிரதமராக பதவி ஏற்று கொண்டார். காங்கிரஸை எதிர்த்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இந்திய சீன போரின் விளைவாக கடும் விமர்சனத்தையும் வீழ்ச்சியையும் சந்தித்தது. சோவியத்தை ஆதரிப்பவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் சீனாவை ஆதரிப்பவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலும் செயல்பட ஆரம்பித்தனர்.

1965 ஜனவரி 25ல் ஹிந்தி மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க திட்டம் தீட்டிய மத்திய அரசாங்கம் அதற்கான முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்க, இந்தி எதிர்ப்பு என்ற பெரும் கனலை முதன் முதலில் திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி ரயில் நிலையத்தில் தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். அவருடைய முதல் தியாகம் தமிழகத்தில் பற்றி எரியத் தொடங்கியது. எல்லா மாவட்டத்திலும் தமிழ் மொழிக்கான ஆதரவு பெருக ஆரம்பித்தது. திமுக மறியல், உண்ணாவிரதம், கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இப்படி பல வழிகளில் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்தது. பக்தவச்சலம் அரசு திமுகவின் புயல்வேக பாய்ச்சலில் செய்வதறியாது திகைத்து நின்றது. இந்தப் போராட்டத்திற்காக பல திமுக தொண்டர்களும், முன்னணித் தலைவர்களும் 6 மாதம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை பெற்றனர்.

ஜனவரி 26 இல் குடியரசு தின நாளில் ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்படும் என்ற செய்தி சொல்லப்பட்டதும். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞன் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மறுநாளே விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அரங்கநாதன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக இந்தி திணிப்பை எதிர்த்து அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி போன்ற எண்ணற்றோர் தங்களை பலி கொடுத்து இந்திக்கு எதிராக தியாகச் செம்மலாக மக்கள் மனதில் நீங்க இடம்பெற்றனர். தயவு செய்து தீக்குளிப்பை தவிர்த்து விடுங்கள் என்று திமுக மன்றாடி கேட்டுக்கொண்டது. நரபலி என்றும் வயிற்று வலி காரணமாக இருந்தார்கள் என்றும் கிண்டல் செய்தார் முதலமைச்சர் பக்தவச்சலம். அதன்பிறகு போராட்டம் வீரியமடைய தொடங்கியது.

மாணவர்கள் வீதியில் இறங்கி போராட தமிழ்நாடு ஸ்தம்பித்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் ராஜேந்திரன் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். இந்த விஷயத்தில் காமராஜர் மத்திய அரசை ஆதரிப்பதா தமிழக மக்களை ஆதரிப்பதா என்ற குழப்பத்தில் தவித்துக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டிற்கான நியாயமான கோரிக்கையை காங்கிரஸ் தலைமைக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் அதை காதில் வாங்குவதாக தெரியவில்லை. ஹிந்தியை கட்டாயமாக கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டே இருந்தார்கள். தமிழகத்தில் நடந்த போராட்டத்தை மழுங்கடிக்க செய்ய பல யுக்திகளை கையாண்டார்கள். கல்லூரிகள் தொழிற்கல்விக் கூடங்கள் போன்ற மாணவர்கள் பயிலும் அனைத்து நிறுவனங்களையும் காலவரையின்றி மூடுவதற்கு முடிவு செய்தார்கள்.

அடுத்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். “தமிழுக்கு கண்ணை தருவோம், இந்திக்கு மண்ணைத் தருவோம்”, “தாய் தமிழ் இருக்க, நாய் ஹிந்தி எதற்கு” என்ற கோஷங்கள் அதிரி புதிரியாக வெடித்து சிதறின. கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. மாணவர்கள் ரகசியமாக மாணவர் கூட்டமைப்பை உருவாக்கி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டனர். மாணவர்களின் போராட்டத்தை கெடுக்க இந்திய அரசு ராணுவத்தை அனுப்பியது. அண்ணா மிகவும் கவலை அடைந்தார். மாணவர்களின் உயிர் பலியை தடுப்பதற்காக போராட்டத்தை கைவிடும்படி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் கட்டுப்படாமல் போராட்டத்தை தீவிர படுத்தினர். இதில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 25 மாணவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அதற்கு மேலும் மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவல்கள் மாணவர்களிடையே வெளிவந்தது. பல மாணவ செல்வங்களின் உயிர்கள் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலியாகின. மாணவரின் போராட்டங்களை ஊடகங்கள் ஆதரித்து வந்த நிலையில் படிப்படியாக ஆதரவு நிலையில் இருந்து விலகி எதிர் நிலைக்கு மாறி நின்றது. இதை எதிர்பார்த்து தான் அண்ணா போராட்டத்தை கைவிடும்படி மாணவர்களிடம் கேட்டுக் கொண்டார். இப்படி ஒரு சூழலை பக்தவச்சலம் அரசு உருவாக்கும் என்று அவர் முன்பே கணித்திருந்தார்.

காங்கிரஸ் அரசு திமுகவை இதன் மூலம் ஒடுக்குவதையே முதன்மை காட்டியது. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மாணவர்கள் உண்மை நிலையை உணர்ந்து தங்களுக்கு எதிராக சூழ்நிலை மாற்றப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு தற்காலிகமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனால் அந்த மொழிப்போர் தியாகமும், இந்தி எதிர்ப்பு மக்கள் மத்தியில் நெருப்பாய் கனன்று கொண்டே இருந்தது. இந்த இடத்தில் இருந்து தான் காங்கிரஸ் கட்சி மக்களிடையே தனிமைப்பட்டு சென்று கொண்டே இருந்தது. தேசிய கட்சிகள் எப்போது மாநில நலன் சார்ந்து சிந்திக்கிறார்களோ அப்போதுதான் தமிழக மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும். இந்த சமயத்தில்  இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்றதால் இந்தியாவிற்கு சார்பாக எல்லா கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அண்ணாவும் அதை புரிந்து கொண்டு இந்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா முன்னிலைப்படுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் உடன்பாட்டிற்கு வந்தது. கையெழுத்தான நாளில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நள்ளிரவில் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைமை அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.

துடிப்புடன் பணியாற்றி கொண்டிருந்த இளம் பிரதமரை இந்தியா கண்டது. அவர்தான் இந்திரா காந்தி. காமராஜரின் நன்மதிப்பை பெற்ற இந்திரா காந்தி பிரதமர் ஆன பிறகு தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைக்கப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியது போல் ஒரு பிம்பத்தை கட்டமைத்தார் காமராஜர். இதை சரியாக புரிந்து கொண்ட அண்ணா தேர்தலுக்கு எட்டு மாதத்திற்கு முன்பே நாமும் தேர்தல் வேலையை துரித படுத்த வேண்டும் என்று சுதாரித்துக் கொண்டார். தர்மபுரி இடைத்தேர்தல் ஒரு புதிய பரீட்சையை திமுகவிற்கும் காங்கிரஸ்க்கும் வைத்தது. கடந்த இரண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவை பின்னுக்குத் தள்ளி தருமபுரியில் வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்த வெற்றி திமுகவிற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியதாக கருதப்பட்டது.

1967 சட்டமன்ற தேர்லுக்கான பிரச்சாரம் சூடுபிடிக்கத் துவங்கியது. பக்தவச்சலம் முதல்வராக மக்களிடம் பெரிய ஈர்ப்பை பெற முடியவில்லை. அரிசி பஞ்சம், விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் தமிழகத்தை ஆட்டிப் படைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழகத் தேர்தல் களம் இருந்ததை உணர்ந்து கொண்ட காமராஜர் துளியும் நம்பிக்கை இழக்கவில்லை. காங்கிரஸ்க்கு ஆதரவாக பிரச்சார பீரங்கியாக சிவாஜியை காமராஜர் நிறுத்தினார். காமராஜர் விருதுநகர் தொகுதியில் களம் கண்டார். நான் எட்டு நொண்டிகளை கொண்ட கூட்டணியை படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று வீர வசனம் பேசினார். அண்ணா தேர்தல் பிரச்சாரத்தை பலமுனை தாக்குதலாக்க முடிவெடுத்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சார களத்தில் ஈடுபட தொடங்கினர். ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக் கட்சி, மூக்கையா தேவரின் ஃபார்வர்ட் பிளாக் கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சி பா ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மா பொ  சிவஞானத்தின் தமிழரசு கழகத்தையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

மற்றொரு வியூகமாக நடிகர்களை பிரச்சாரத்திற்கு ஈடுபடுத்த தொடங்கினார். எஸ் எஸ் ஆர் இணைந்து கொண்டார். பெரும் தலைவராக பின்னாளில் உருவான திரு எம்ஜிஆர் அவர்களும் பிரச்சார பீரங்கியாக உருமாறினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்க்கின்ற நெல்லிக்கனி தான் எம்ஜிஆர். அந்தக் கனி யார் மடியில் விழும் என்று எல்லா அரசியல்வாதிகளும் காத்திருந்தபோது அது என் மடியில் விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் என்று எம்ஜிஆரை தன் இதயக்கனியாக தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்தார் அண்ணா. பல லட்ச ரூபாய் தருவதாக சொன்ன எம்ஜிஆர் இடமிருந்து பணம் முக்கியமல்ல உங்கள் முகத்தை காட்டினாலே போதும் முப்பதாயிரம் ஓட்டு கிடைக்கும் என்று உற்சாகமூட்டினார். உங்களுடைய பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியை தவிடு பொடி ஆக்கிவிடும் என்று நம்பிக்கை கொடுத்தார்.

நடிகர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவது மக்களை கவரக்கூடிய ஒரு யுக்தியாக இன்றுவரை கருதப்படுகிறது. அப்படித்தான் அந்த காலகட்டத்தில் நடிகர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இப்போதும் அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் நடிகர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். நடிகர்களின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எந்த கட்சிக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாலே அந்த கட்சியின் வெற்றி உறுதியாகி விடும் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம்.

2026 இல் தேர்தலில் போட்டியிடும் வெகுஜன மக்களின் விருப்பமான நடிகர் விஜய் எப்படி வெற்றி பெறுவார் என்பது 2026 தேர்தலுக்குப் பிறகுதான் தெரிய வரும். இருந்தாலும் மக்களின் ஆதரவு பெருமளவில் உள்ள நடிகர்களை தன் பக்கத்தில் வைத்துக் கொண்ட அண்ணா வெற்றியை உறுதி செய்து கொண்டார். திமுகவிற்கு எதிராக காமராஜர் சிவாஜி அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டாலும், மக்கள் எம்ஜிஆரையும் சிவாஜி அவர்களையும் எப்படி பார்க்கிறார்கள் என்பதை கொண்டு வெற்றி அந்தக் கட்சியை நோக்கி சென்றடைகிறது. இருவரும் மிகப்பெரிய நடிகர்கள் தான் ஆனால் நம்பிக்கைகுறிய நடிகர்களா என்ற கேள்வி தான் மக்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு கொண்ட நடிகர் அரசியலில் ஈடுபட்டால் அதுவும் இளைஞர்கள் பெண்கள் ஒரு சேர ஈர்க்கக்கூடிய தன்மை கொண்ட நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம். அதை விஜய் அவர்கள் உறுதி செய்வாரா என்பது காலம்தான் தீர்மானிக்கும். தமிழக வெற்றி கழகம் தமிழகத்தை தங்களுடைய வெற்றிகளமாக மாற்றி அமைக்குமா என்பதை அரசியல் ஆய்வாளர்களும், மக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்ட நிலையில் இருந்தது. ஏற்கனவே காங்கிரசிற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் எம் ஆர் ராதா அதற்கு பிரதிபலனாக பத்தாயிரம் ரூபாயை காமராஜர் ராதா அவர்களுக்கு சம்பளமாக கொடுத்தார். அதை ஏற்க மறுத்த எம் ஆர் ராதா பணம் கொடுக்க வந்த தயாரிப்பாளர் வாசுவை கடிந்து கொண்டு காமராஜரிடம் கொடுத்து விடு என்று திருப்பி அனுப்பினார். தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளியாக சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருந்த எம்ஜிஆர் சற்று ஓய்வுக்காக 1967 ஜனவரி 12 மாலை 5 மணிக்கு ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். அந்த நேரத்தில் அவரை சந்திக்க நடிகர் எம் ஆர் ராதா வந்திருந்தார். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்க, எம்ஜிஆர் குண்டடிபட்டு ரத்தத்தோடு வந்து நிற்க எம் ஆர் ராதாவும் ரத்தக்கறையோடு வெளியேறினார். இருவரும் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இந்த சம்பவத்தை பற்றி பல ஊகங்கள் சுழன்று அடித்தன. வன்முறைகள் நடக்க ஆரம்பித்தது. பரங்கிமலையில் எம் ஜி ஆர் படுத்துக்கொண்டு மனுதாக்கல் செய்தார். காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்னார் ஆனால் உண்மையில் படுத்துக்கொண்டு ஜெயித்தது எம்ஜிஆர் தான்.

234 தொகுதிகளில் 174 இடங்களில் போட்டியிட்டது திமுக. தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. முதல் அறிவிப்பே காங்கிரஸ் கட்சியின் அனந்த நாயகி என்பவர் தோல்வி என்ற துவக்கத்துடன் ஆரம்பித்தது. அடுத்த நொடியில் இருந்து காங்கிரஸின் பெரும் தலைவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள். முதலமைச்சர் பக்தவச்சலம், அமைச்சர் கக்கன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடு, சுப்பிரமணியம், ஆர் வெங்கட்ராமன் இப்படி அத்தனை பேரும் தோல்வி அடைந்தார்கள். அதையெல்லாம் தாண்டி சாதாரண மாணவர் அணித் தலைவர் பெ சீனிவாசன் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் விருதுநகரில் காமராஜரை வீழ்த்தினார். விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட பூவராகவனைத் தவிர அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் தோல்வி அடைந்தார்கள். அண்ணா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சைதாப்பேட்டையில் கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றார். பரங்கி மலையில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். 137 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கதி கலங்கி நின்றது.

கட்சித் தொடங்கி 18 வருடம் திமுகவிற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தார் பெரியாரை தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு தன் சகாக்களோடு சந்திக்க புறப்பட்டுச் சென்றார் அண்ணா. இந்த வெற்றியும், ஆட்சியும் உங்களுக்கு சமர்ப்பணம் என்று பெரியாரை வணங்கினார். உங்கள் வழிகாட்டுதல் ஆட்சிக்கு அவசியம் என்று அண்ணா வலியுறுத்தினார். இப்பேற்பட்ட நல் உள்ளம் கொண்ட தலைவனா என்று அதிசயத்துப் போனார் பெரியார். அண்ணாவை வாழ்த்தி அனுப்பினார்.

போராடி பெற்ற தமிழக வெற்றியை ஐந்தாண்டுகள் கூட பூர்த்தி செய்யாமல் மறைந்து விட்டார் அண்ணா. அதன் பிறகு அந்த தலைமை இடத்திற்கு திரு கருணாநிதி அவர்கள் எப்படி வந்தார் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

மீண்டும் பயணிப்போம்

நன்றி வணக்கம்

– ஃப்ரெடி டிக்ரூஸ்-

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K – அரசியல் கட்டுரை- பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 தேர்தல்  D.M.K Vs T.V.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது என்பது