அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1971 – DMK Vs INC – அரசியல் கட்டுரை – பகுதி – 7

1967 ல்  திமுக கூட்டனி  தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவின் சட்டமன்ற குழு தலைவராக அண்ணா தேர்ந்தெடுக்க பட்டார்.  அமைச்சர் பதவி வேண்டாம் என்று திரு நெடுஞ்செழியனும் திரு கருணாநிதி அவர்களும் மறுத்துவிட்டனர். அதற்கு காரணம் கட்சியில் எல்லோரும் பதவி கேட்பார்கள். அதற்காக நாமே வேண்டாம் என்று சொன்னால் எல்லோருக்கும்  முன்னுதாரணமாக இருக்கலாம் என்று முடிவெடுத்ததாக அப்போது கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் எல்லோரும் இதை நம்பி இருப்பார்கள் ஆனால் இன்றைய சோசியல் மீடியா காலகட்டத்தில் இப்படி சொல்லி இருந்தால் எல்லோரும்  சிரித்து இருப்பார்கள். தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் விடுவானா? பிறகு அண்ணாவின் வற்புறுத்தலில் அமைச்சரவையில் இருவரும் சேர்க்கப்பட்டார்கள் என்று சொல்லப்பட்டது.

1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணா உள்பட எல்லா அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டது. இதனால் வரை கடவுள் பெயரால் பதவி ஏற்றுக் கொண்டவர்கள் முதல் முறையாக உளமாற உறுதி ஏற்கிறேன் என்று பதவியேற்றுக் கொண்டார்கள். ஒன்பது பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வித்துறை திரு. நெடுஞ்செழியனுக்கும், காவல்துறை திரு. கருணாநிதிக்கும் கொடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறையை அண்ணா அவர்களே வைத்துக் கொண்டார். சி பா ஆதித்தனாருக்கு அமைச்சர் பதவி கொடுக்க இருந்த நிலையில் எம்ஜிஆரின் எதிர்ப்பால் அவருக்கு பதவி தரப்படவில்லை. ஆனால் அண்ணா சபாநாயகராக ஆதித்தனாரை அமர வைத்தார். ம பொ சி, திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராக அடம்பிடித்து அமர்ந்தார் . தன்னை சபாநாயகராக்காத கோபத்தில் இந்த முடிவுக்கு வந்தார். 

அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் கட்சியில் பெரும் தொல்லையாக மாறினார்கள். இதனால் மனமுடைந்த அண்ணா இவ்வளவு சீக்கிரம் பதவியில் அமர்ந்திருக்க தேவையில்லை. சிறிது காலதாமதத்திற்கு பிறகு இந்தப் பதவி கிடைத்திருக்கலாம் என்று தம்பிக்கு எழுதும் கடிதத்தில் குறிப்பிட்டார். புதிதாக ஆட்சி அமைத்த திமுக நிர்வாக அனுபவம் இல்லாத தலைவர்களை கொண்டிருந்தது. காங்கிரஸ் திமுகவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ய ஆவலோடு காத்திருந்தது. ஆறு மாதம் கடந்த பிறகு ராஜாஜி எங்களுக்கும் திமுகவிற்கும் தேனிலவு காலம் முடிந்துவிட்டது என்று விமர்சனம் செய்தார். அதை பத்திரிகைகள் கேள்வியாக அண்ணாவிடம் கேட்க, உண்மைதான் தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கையை தொடர இருப்பதாக பதில் அளித்தார் அண்ணா. முதலமைச்சராக சட்டமன்றத்திற்கு அண்ணா தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாக 1967 ஏப்ரல் 22 இல் நடந்த மேலவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். தென் சென்னை மக்களவைத் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். அண்ணா ராஜினாமா செய்த பிறகு தென்சென்னை மக்களவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுமுக வேட்பாளராக முரசொலி மாறனை அறிவித்தார் அண்ணா. அவர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லிக்கு புதிய தொடர்பு பாலமாக திகழ ஆரம்பித்தார். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பெரியார் முதல்முறையாக திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்தது தான்.

முதல் திட்டமாக ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை மே 1 1967 ல் சென்னையிலும், கோவையிலும் தொடங்கினார். இது தோல்வி திட்டம் என்று பெரியார் விமர்சித்தார். அவர் கூறியது போலவே அத்திட்டம் பெரும் தோல்வியில் முடிந்தது.
அண்ணா அடுத்த இரண்டு அதிரடிக்கு தயாரானார். தமிழக வரலாற்றிலேயே நடந்திடாத தரமான சம்பவங்கள் இரண்டு நடந்தேறியது.  18 ஜூலை 1967 இல் மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி சட்ட தீர்மானமாக கொண்டு வந்து வெற்றி கண்டார் அண்ணா. மக்கள் அச்சட்டத்தை கொண்டாடி தீர்த்தார்கள். அடுத்து சுயமரியாதை திருமண சட்டம் 27 நவம்பர் 1967 இல் சட்டமாக நிறைவேறியது.

இந்திரா காந்தியை முதல்முறையாக  பிரதமராக முன்னிறுத்தியவர் காமராஜர் ஆனால் காமராஜரை ஓரங்கட்ட நினைத்தார் இந்திரா காந்தி. பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்து பெரும் பின்னடைவை சந்தித்த நேரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்த நிஜலிங்கப்பாவை முன்னிறுத்தினார் காமராஜர். இந்த விஷயத்தில் மட்டும் இந்திரா காந்தி மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டில் சி சுப்பிரமணியத்தை தலைவர் ஆக்கினார். பத்திரிக்கை என்பது ஒரு ஆட்சிக்கு எப்படி பலமாக அமைந்தது என்று நிரூபித்த தேர்தல் 1967. இந்த தேர்தலில் “திராவிட நாடு”,”காஞ்சி”, “நம்நாடு”, “முரசொலி”, “தினத்தந்தி”  போன்ற பத்திரிகைகள் திமுகவின் வெற்றிக்கு  முக்கிய பங்காற்றின. இதை உணர்ந்த காமராஜர் காங்கிரஸிற்கும் பத்திரிக்கை பலத்தை அதிகரிக்க விரும்பினார். ஆகையால் அவர் கையில் எடுத்த துருப்புச் சீட்டு ஈ வி கே சம்பத் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

திமுகவிலிருந்து வெளியேறிய சம்பத் முழு முதல் எதிரியாக திமுகவை முன்னிறுத்தினார். கம்யூனிச இயக்கத்தின் ஈர்ப்பில் கட்டுண்ட ஜெயகாந்தன் திமுகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் நமது கலாச்சாரத்திற்கு எதிரான  பேரழிவான கட்சி என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தார். அது அவரின் கடைசி காலம் வரை அந்த வன்மம் தொடர்ந்து பயணித்தது. அது ஏனென்று புரியவில்லை. காமராஜரின் புதிய முயற்சியால் சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்ட் 1967 ல் ஜெயகாந்தனை ஆசிரியராக கொண்டு ஜெயபேரிகை என்ற பத்திரிகை அறிமுகமானது அதன் பிறகு  ஜெயபேரிகைக்கும், முரசொலிக்கும் இடையே யுத்தம் வெடிக்கத் தொடங்கியது.

அடுத்த அதிரடிக்கு தயாரானார் அண்ணா தமிழ்நாடு என்று பெயர் வைத்தால் போதுமா உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டாமா என்ற விருப்பத்தோடு சென்னையில் வெகு விமரிசையாக கட்சி பாகுபாடு இன்றி 4 ஜனவரி 1968 இல் நடத்த உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. 11 சிலைகள் திறக்கப்பட்டன. எல்லா கட்சியினரும் எல்லா அரசியல்வாதிகளும் கொண்டாடிய சமயத்தில்  பெரியார் மட்டும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.

சூத்திரத் தன்மையை நடத்த விழாவா?

மடமை இலக்கியங்களுக்கெல்லாம் விழா வா?

மூடநம்பிக்கை கதாபாத்திரங்களுக்கு சிலையா?

என்று கடும் விமர்சனம் செய்தார். கம்பராமாயணத்தை கம்பரசம் என்று எழுதிய அண்ணா கம்பருக்கு எப்படி விழா எடுக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.  உலகத் தமிழ் மாநாடு நடக்கும் சமயத்தில் மத்திய அரசு ஒரு புதுப் பிரச்சனையை உருவாக்கி திமுக அரசுக்கு நெருக்கடியை தர முடிவெடுத்தது. கல்வியில் மும்மொழித்திட்டத்தை கொண்டு வர திட்டமிட இதைக் கண்ட மாணவர்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தை முன்னெடுக்க தொடங்கினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. திமுக அரசு என்ன செய்கிறது என்று புன்னகையோடு வேடிக்கை பார்த்தது காங்கிரஸ் மத்திய அரசு. அண்ணா அச்சட்டத்தை எதிர்த்து கடுமையான கண்டனத்தை சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றி மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். இதனால் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.  23 ஆகஸ்ட் 1968 ல் காங்கிரஸ் சட்டமன்றத்தில் திமுக மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாக 37 வாக்குகளும். எதிர்த்து 156 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸின் முயற்சி தோல்வி அடைந்தது.

திமுகவை அடுத்து ஒரு பேரிடி தாக்கியது. அண்ணா புற்றுநோயால்  மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சை முடித்து நவம்பர் மாதம் சென்னை திரும்பினார். அடுத்த  மாதம் நடந்த சம்பவம் அண்ணா ஆட்சிக்கு பெரும் கரும்புள்ளியாய் அமைந்தது. அந்த சம்பவம் கீழவெண்மணியில்  நடந்த படுகொலை சம்பவம். அச்சம்பவம் தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்த  துயர சம்பவத்தை பின்னொரு நாளில் கட்டுரையாக நாம் எழுதுவோம். காரணம் அதன் துயரம் ஒரு சில வரிகளில் அடங்கிவிடாது. 44 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சோக வரலாறு சொல்லி மாழாது. அத்துணை துயரம் கொண்டது கீழவெண்மணி படுகொலை.

நாகர்கோவில் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாரானது. மூன்று முறையாக வெற்றி பெற்று தென் எல்லை காப்பாளர் என்று பெயரெடுத்த நேசமணி மரணத்தால் காலியான தொகுதியில் காமராஜர் வேட்பாளராக களத்தில் குதித்தார். அண்ணா அவருக்கு எதிராக களமாட விரும்பவில்லை. ஆனால் திரு கருணாநிதி அவர்களோ பிடிவாதமாக இருந்து தேர்தலில் சுதந்திரா கட்சிக்காக பணியாற்றினார். இறுதியில் சுதந்திரா கட்சியை தோற்கடித்து இரண்டரை லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் காமராஜர். அந்த தோல்வி திமுகவின் தோல்வியாக கருதப்பட்டது.

அடுத்த வரலாறு காணாத தோல்வி திமுகவுக்கு காத்திருந்தது. அது தேர்தல் தோல்வி அல்ல? தமிழர்களின், குறிப்பாக திமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரத்தின் தோல்வி. ஆம்  3 பிப்ரவரி 1969ல் அண்ணா இந்த உலகை விட்டு மறைந்தார். அண்ணாவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி போட்டது. பல லட்சம் மக்கள் சென்னை நோக்கி படையெடுத்தனர். ரயிலின் மேற்கூறையில் பயணித்த 32 பேர் விபத்தில் மரணமடைந்தனர். சென்னை அல்லோகலப்பட்டது. சென்னை ரோடுகளில் கண்ணீர் துளிகள் பெருகி ஆறாக ஓடியது. எல்லோரும் கட்சி பாகுபாடின்றி இரங்கல் கூட்டம் நடத்தினர். காங்கிரஸ் சார்பாக கண்ணதாசன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஜெயகாந்தன் மீண்டும் தன் வன்மத்தை கக்கினார். இரங்கல் கூட்டத்தில் இப்படி ஒரு வன்ம விமர்சனமா என்று எல்லோரும் விக்கித்து நின்றனர். சிலர் நல்ல படைப்பாளியாக இருப்பர் ஆனால் சிறந்த மனித நேயராக இருப்பதில்லை. இளையராஜா என்ற இசைஞானியை இன்றளவும் சிலர் அப்படித்தான் விமர்சிக்கின்றனர்.நெய்வேலியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் கிருபானந்த வாரியார் அண்ணா மரணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமெரிக்கா போய் சிகிச்சை பெற்றாலும் டாக்டர் மில்லரே வந்து சிகிச்சை அளித்தாலும் கடவுளை தூசிப்பவர்கள் மரணத்தை எய்துவார்கள் என்று  பேச, திமுகவினர் கொதித்துப் போயினர். ஒரு சில திமுகவினர் அவர் மீது தாக்குதல் நடத்த அது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தினார். பிறகு எம்ஜிஆர் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கிருபானந்த வாரியார் எம்ஜிஆருக்கு “பொன்மனச் செம்மல்” என்ற பட்டத்தை வழங்கினார்.

அண்ணாவுக்குப் பிறகு முதல்வர் பொறுப்பில் அமர நாவலரநெடுஞ்செழியனுக்கும், மு கருணாநிதிக்கும் போட்டி உருவானது. நெடுஞ்செழியன் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள திரு. மு. கருணாநிதி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த பிரச்சினை அமைச்சரவையில் யார் இடம் பிடிப்பது என்ற சிக்கல் உருவானது. நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அப்படி இருந்தும் திமுகவின் செங்குத்தான பிளவு ஏற்பட அங்கு தான் விதை விதைக்கப்பட்டது. மு. கருணாநிதியிடம் ஆதித்தனாரை அமைச்சராக்க கூடாது என்ற எம்ஜிஆர் வைத்த கோரிக்கையை நிராகரித்தார் கருணாநிதி. ஆதித்தனாரை அமைச்சராக்கியது எம்ஜிஆரை சங்கடத்தில் ஆழ்த்தியது. தீராத அதிருப்தியை அவருக்குள்  உருவாக்கியது. ஆரம்பத்தில் எடுக்கும் ஒரு சில முடிவுகள் எப்படி வரலாற்றுப் பிழையாக மாறுகிறது என்பதை காலம் நமக்கு கற்றுத் தருகிறது. அன்று கருணாநிதி எம் ஜி ஆர் காக உடன்பட்டு இருந்தால் இன்று ஒரு அதிமுக உருவாக வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். அப்படித்தான் இன்றைய காலகட்டத்தில் திமுக அரசு நடிகர் விஜய் அவர்களை கையாண்டு கொண்டிருக்கிறது. எல்லா நடிகர்களும் அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மாட்டார்கள். ஒரு சில நடிகர்கள் மட்டுமே அந்த தாக்கத்தை உருவாக்குகிறார்கள் அப்படி எந்த நடிகர் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணித்து அவர்களை இலகுவாக அணுகினாலே அவரவர் கட்சிக்கு எதிர்காலத்தில் வரும் பின்னடைவை சரி செய்யலாம்.

1969 குடியரசுத் தலைவர்  தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக பிரிந்து இருந்தது. காமராஜர் நிஜலிங்கப்பா உள்ளிட்டோர் ஸ்தாபன காங்கிரஸ் என்ற ஒரு பிரிவு. இந்திரா காந்தி அவர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் இந்திரா காங்கிரஸ் என்ற மற்றொரு பிரிவு. காமராஜரின் பிரிவு நீலம் சஞ்சீவ ரெட்டியை ஆதரித்தது. இந்திரா காந்தி வி. வி. கிரியை ஆதரித்தார். ஓட்டு சதவீத அடிப்படையில் முக்கிய பலமாக திமுக இருந்த காரணத்தால் தன்னை ஆதரிக்கும்படி இந்திரா கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் வி வி கிரியை ஆதரித்தார் கருணாநிதி. அதன் பிறகு இந்திரா காந்தி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த போது இந்திராவை மீண்டும் ஆதரித்தார் கருணாநிதி. மீண்டும் பிரதமர் ஆனார் இந்திரா காந்தி.

திமுகவில் உட்கட்சி பூசல் துவங்கியது. நெடுஞ்செழியன் தானே பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆட்சியை கருணாநிதியும், கட்சியை நானும் வழிநடத்துவோம் என்று போர்கொடி தூக்கினார். சரி இருவருக்கும் போட்டி வைத்துவிடலாம் என்று எண்ணும்போது எம்ஜிஆர் அந்தப் போட்டியை விரும்பாததால் கட்சியில் புதிய சட்ட  திருத்தத்தை  செய்தனர்.  அவைத்தலைவர் என்ற பதவியை எடுத்துவிட்டு கழகத் தலைவர் என்று மாற்றி அமைத்தனர். கட்சியில் திமுகவின் முதல் தலைவரானார் திரு. மு. கருணாநிதி. பொதுச் செயலாளரானார் நெடுஞ்செழியன். பொருளாளரானார் எம்ஜிஆர்.

இந்திரா காந்தி அதிரடியாக அடுத்து தனது மைனாரிட்டி கவர்மெண்ட் அரசை 28 டிசம்பர் 1970 இல் கலைக்க முடிவு செய்தார்.  மக்களவைத் தேர்தல் விரைவில் வரும் என்பதால் தமிழ்நாட்டில் திரு கருணாநிதியும் சட்டமன்றத்தை கலைத்து இரண்டு தேர்தலையும் ஒன்றாக நடத்தலாம் என்று முடிவு செய்தார். பெரியாருக்கு இந்த ஆட்சி காணிக்கை என்று சொன்னதால் அண்ணாவின் மேல் கோபமாக இருந்தார் ராஜாஜி. இந்திரா காந்தி மீது கடும் கோபத்தில் இருந்ததார் காமராஜர். இந்த இருவரும் 1971 சட்டமன்ற மக்களவைத் தேர்தலில் இணைந்த போட்டியிட புதுக் கூட்டணி உருவானது. காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும் காமராஜர் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் ராஜாஜி சுதந்திர கட்சி என்றும் மூன்றாக பிரிந்து இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் கருணாநிதி.

1971 ல் காங்கிரஸ் இரு பிரிவாக பிரிந்து இருந்தது போல், 2025 ல் அதிமுக 3 பிரிவாக பிரிந்து நிற்கிறது. அன்று அது திமுகவுக்கு சாதகமாக இருந்தது. இன்றும் இது திமுகவிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசுக்கு சீட்  ஒதுக்காமல் மக்களவைக்கு மட்டும் சீட் ஒதுக்கிவிட்டு தன் காரியத்தை சாதித்துக் கொண்டார் கருணாநிதி. இந்திராவும் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டார். திமுகவும் இந்திரா காங்கிரஸும் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றனர். 1971 இல் மக்கள் திமுகவிற்கு பெரும் ஆதரவை கொடுத்தனர். 205 இடங்கள் வென்று அண்ணாவை காட்டிலும் அதிக இடங்களை வென்றார் என்ற சாதனையை படைத்தார் கருணாநிதி. மத்தியில் 350 இடங்களை பெற்று தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார் இந்திரா காந்தி.

1977 லிருந்து எம்ஜிஆர், தான்  இறக்கும் வரை தமிழகத்தை எப்படி தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
மீண்டும் பயணிப்போம்…..
நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K – அரசியல் கட்டுரை- பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 தேர்தல்  D.M.K Vs T.V.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது என்பது