JUDGEMENT DAY-1977- DMK Vs ADMK – அரசியல் கட்டுரை – பகுதி – 8

1971இல் திமுக மிகப்பெரிய வெற்றியை சாத்தியப்படுத்திய போது அண்ணாவை மிஞ்சிய கருணாநிதி என்ற கோஷம் விண்ணை பிளந்தது. அப்போது காஷ்மீரில் இருந்து ஒரு டெலிபோன் திரு. கருணாநிதிக்கு வர, மறுமுனையில் ஹலோ நான் எம்ஜிஆர் பேசுறேன். தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்றதும் கருணாநிதி நன்றி நண்பா என்று ஆனந்தமடைந்தார். அப்போது எம் ஜி ஆர் இதயவீணை படப்பிடிப்பில் காஷ்மீரில் இருந்தார்.
1971 சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் பம்பரமாய் சுழன்று திமுகவிற்காக உழைத்தார். பெட்டி பெட்டியாக பணத்தை வாரி இறைத்தார். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் திமுக வெற்றிக்கு பாடுபட்டார். அவருக்கும் மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. எம்ஜிஆர் தன்னை சுகாதார மந்திரி ஆக நியமிக்க வேண்டும் என்று நேரிடையாகவே திரு கருணாநிதியிடம் கேட்டார். நெடுஞ்செழியனும், மாதவனும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார் கருணாநிதி. அதற்கு அவர்கள் கூறிய காரணம், எம்ஜிஆர் முழு நேர நடிகனாக இருப்பதால் எப்படி அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது. அது சட்டத்தில் இடமில்லை என்று கூறியதாக எம்ஜிஆரிடம் பதில் அளித்தார் கருணாநிதி. நீங்கள் நடிப்பை விட்டு விட்டால் உங்களுக்கு பதவி தரப்படும் என்ற நிபந்தனை விதித்தார் கருணாநிதி. எம்ஜிஆர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

திரு. கருணாநிதி 15 மார்ச் 1971 இல் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார் . “குடிசை மாற்று வாரியத் திட்டம்”, “பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம்”, “ஊனமுற்றோர் நலவாழ்வு திட்டம்”, “விதவைகள் உதவித்திட்டம்” என்று அதிரடியாக பல திட்டங்களை கொண்டு வர துவங்கினார். ஜெட் வேகத்தில் புறப்பட்டார். அதே சமயத்தில் அவருக்கு பெரும் விமர்சனமாக அமைந்தது இரண்டு பிரச்சனைகள் ஒன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் கௌரவ டாக்டர் பட்டம் மற்றொன்று மதுவிலக்கு ஒத்திவைப்பு மசோதா.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டாக்டர் பட்டம் பெற்றார் முதல்வர் திரு கருணாநிதி. அதன்பிறகு போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் விடுதிக்குள் புகுந்து கடுமையாக தாக்கினர். இதில் பல மாணவர்கள் காயமுட்டனர். அந்த சமயத்தில் உதயகுமார் என்ற மாணவன் குளத்தில் பிணமாக மிதந்தான். அதற்கு நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டார் முதல்வர் கருணாநிதி. நிதிப் பற்றாக்குறைக்கு மதுவிலக்கை ஒத்தி வைக்க முடிவெடுத்தார் முதல்வர். மதுவை தீவிரமாக தன் திரைப்படங்களில் எதிர்த்த எம்ஜிஆர் அந்த திட்டத்தை ஆதரிப்பதில் சிக்கல் உண்டானது. குழப்பமான மனநிலையில் இருந்த எம்ஜிஆர் நிதி பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கள்ளுக்கடைகளும் சாராயக்கடைகளும் திறக்கப்பட்டன.

1971 இல் சரியாக ஆறு மாதம் கழித்து எம்ஜிஆர் மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அதை தொடங்கி வைத்தவர் முதல்வர் கருணாநிதி என்றாலும் அந்தப் பிரச்சாரத்தில் கூட்டம் இல்லை என்று பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதுதான் பிள்ளையும் கிள்ளி விடுவது, தொட்டிலையும் ஆட்டுவது என்று சொல்வார்களோ என்று பலர் பேசினர். மதுவுக்கு எதிராக தீவிரமாக களமாடத் துவங்கினார் எம் ஜி ஆர். இதில் திரு கருணாநிதிக்கும், எம்ஜிஆர்ருக்கும் விரிசல் தொடங்கியது. ஒரு பக்கம் எம்ஜிஆர் திமுகவுக்கு எதிராக போராட ஆயத்தமானார். மறுபக்கம் சிம்சன் தொழிற்சாலை பிரச்சனை காரணமாக கூட்டணி கட்சியான இந்திரா காந்திக்கும், கருணாநிதிக்கும் உரசல் உருவாக தொடங்கியது. மெல்ல மெல்ல கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் திமுகாவை விமர்சிக்க துவங்கியது. இதன் காரணமாக கூட்டணிக்குள் அதிருப்தி உருவாகியது.
இப்படிப்பட்ட சூழல் முற்றிக் கொண்டிருக்க திமுக ஆட்சியை கலைக்க போவதாக வதந்தி பரவியது. அதற்காக திமுகவில் மூன்று பேரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்ற செய்தி பரவத் தொடங்கியது. அந்த மூவரில் நெடுஞ்செழியன், எம்ஜிஆர், க அன்பழகன் போன்றோர் இருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொதுக்கூட்டம் ஒன்றில் எம்ஜிஆர் கட்சியில் ஏற்படும் சலசலப்பை சிலர் உருவாக்க நினைக்கிறார்கள். அது நிறைவேறாது என்று பேசினார். அந்த சமயத்தில் எம்ஜிஆருக்கு மத்திய அரசு ரிக்சாக்காரன் என்ற படத்தில் நடித்ததற்காக பாரத் பட்டத்தை அளித்தது. அதன் பிறகு திரு கருணாநிதி தலைமையில் திமுக எம் ஜி ஆருக்கு பாராட்டு விழா நடத்தியது. இது எல்லோருக்கும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
கருணாநிதி அவர்கள் தன் மகனான மு க முத்துவை திரையுலகில் களமிறக்கினார். எம்ஜிஆர் போல் புகழ் பெற முடியாவிட்டாலும் பல ரசிகர் மன்றங்களை அவருக்காக உருவாக்கத் தொடங்கினார்கள். கட்சி பொருளாளராக தனக்குத் தெரியாமல் தேர்தல் பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுகின்றன என்று ஆதங்கப்பட்டார் எம்ஜிஆர். திருக்கழுக்குன்றத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தன்னுடைய ரசிகர் மன்ற கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்ற தொடங்கினார் எம்ஜிஆர். அண்ணாவை சந்தித்து விட்டு வந்திருக்கிறேன். மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கணக்கு காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதை தமிழக முழுவதும் சென்று மக்களிடம் முறையிடுவேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். கட்சி நிர்வாகிகள் சொத்துக்கணக்கை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இது திமுக கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை உண்டாக்கியது. எம்ஜிஆர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர் 26 பேர் மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று நாஞ்சில் மனோகரன், நெடுஞ்செழியன், முரசொலி மாறன் வாதிட்டனர். இருப்பினும் எம்ஜிஆரை கட்சி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியது திமுக. எம் ஜி ஆர் கட்சிக்கு முக்கியமானவர் என்று முரசொலி மாறன் உறுதியாக நம்பினார். அவரை இழக்கக்கூடாது என்று கடுமையாக போராடினார். எம்ஜிஆரிடம் பல கட்டங்களில் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார் முரசொலி மாறன். அவரும் இறங்கி வந்து சமரசத்திற்கு தயாரானார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் ரசிகர்கள் தொடர்ந்து தாக்கப்படும் செய்திகள் அவருக்கு வர சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தது.
14 அக்டோபர் 1972 இல் முற்றிலுமாக எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்ஜிஆரிடமிருந்து உடனடியாக பதிலடி வந்தது. என்னுடைய ரசிகர்கள் தாக்கப்படுகிறார்கள். எனக்கு ஆதரவான திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள், தாய்மார்கள் தாக்கப்படுகிறார்கள். இதையெல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இரண்டொரு நாளில் புதிய இயக்கத்தை உருவாக்குவேன் என்று சபதம் ஏற்றார். அவரை ஆதரித்து எம்எல்ஏக்கள் பின் தொடர்வார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. வெறும் ஐந்து ஆறு எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவளித்தனர்.

இன்று விஜய் ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொன்னதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகள் விஜயோடு கூட்டணி சேருவார்கள் என்று எல்லோரும் நினைத்த வேலையில், யாரும் அவர் கூட்டணியில் சேர முன்வரவில்லை. அதற்கு காரணம் பல ஆண்டுகளாக கட்சி நடத்தும் நமக்கு தற்போது கட்சி ஆரம்பித்த ஒரு நடிகர் ஆட்சியில் பங்கு தருவேன் என்று சொல்வது தங்களுக்கு பெரிய கௌரவ குறைச்சல் என்று கருதி இருக்கலாம். விஜய்க்கு ரசிகர் பட்டாளம், பெண்கள் மத்தியில் செல்வாக்கு, இளைஞர் கூட்டம் நிறைய இருக்கலாம் ஆனால் அரசியல் அனுபவம் அவருக்கு துளிகூட இல்லை என்று எல்லோரும் கருதினார்கள். கட்சி தொடங்கி ஓராண்டுதான் பூர்த்தியாகியுள்ளதால், இன்னும் அவர் வாக்கு வங்கியை நிரூபிக்கவில்லை. அதனால் அவரோடு எப்படி கூட்டணிக்கு செல்வது என்று நினைத்திருக்கலாம்.
எம்ஜிஆர் 17 அக்டோபர் 1972ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். சென்னையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கே கிருஷ்ணசாமி எம்ஜிஆருக்கு துரோகிகள் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்கினார்கள். அது இனி அவருக்கு தேவையில்லை. இனிமேல் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்படுவார் என்றார். எம்ஜிஆர் 32 பக்கங்கள் கொண்ட ஊழல் பட்டியலை திமுகவுக்கு எதிராக தயார் செய்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம் 40 பக்கங்கள் கொண்ட புகார் பட்டியலை தயார் செய்தார். இவை இரண்டும் சேர்த்து குடியரசுத் தலைவர் வி வி கிரி இடம் ஒப்படைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தார். அதற்கு விளக்கம் கேட்டு கருணாநிதிக்கு கடிதம் எழுதினார் இந்திரா காந்தி. அதே சமயம் புகார்களுக்கு காரணம் என்ன என்று எம்ஜிஆருக்கும். கல்யாணசுந்தரத்திற்கும் விளக்கம் கேட்டார் இந்திரா.
13 நவம்பர் 1972 இல் திமுக மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு சபாநாயகர் மதியழகன் ஒப்புதல் தர, அவர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதனால் சட்டமன்றம் சலசலப்புக்கிடையே ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 டிசம்பர் 1972ல் சட்டமன்றம் கூடி திமுக அரசுக்கு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அதற்கு பேச முதலாவதாக எம்ஜிஆரை அனுமதித்தனர். அவர் பேசும்போது அவரது MIC அணைக்கப்பட்டது. ஆனாலும் எம்ஜிஆர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். திமுக அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் தோல்வியடைந்தது.
பொதுவாழ்வில் ஈடுபட்டோர் மீதான லஞ்ச ஊழல் குற்ற தடுப்பு மசோதா 5 ஏப்ரல் 1973 இல் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் முதலமைச்சர் கூட தண்டிக்கப்படலாம் என்ற நிலை உருவானது. இதை கருப்பு மசோதா என்று எம்ஜிஆர் விமர்சித்தார். அப்போது திண்டுக்கல் இடைத்தேர்தல் வர அதிமுக வேட்பாளராக மாயத்தேவரை களமிறக்கினார் எம் ஜி ஆர். திமுக பொன் முத்துராமலிங்கத்தை வேட்பாளராக நிறுத்தியது. இதுவரை எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்த ஸ்தாபன காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனியாக தங்கள் வேட்பாளரை நிறுத்தியது. எம்ஜிஆருக்கு இக்கட்டான நிலை. புதிய கட்சி, இந்திரா காந்தியோட ஆதரவு இல்லை, காமராஜர் எதிராக இருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் ஆதரவு தருகிறது என்றாலும் அதிமுக மீது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இல்லை. நடிகரை பார்க்க கூட்டம் வருகிறது. ஆனால் அது ஓட்டாக மாறுமா என்ற கவலை. அவர்களிடம் பெரிய கொள்கை எதுவுமில்லை என்ற அவநம்பிக்கையில் இருந்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

எம்ஜிஆருக்காக சங்கரய்யா தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். அந்த சமயத்தில் தான் “உலகம் சுற்றும் வாலிபன்” படம் வெளிவந்தது. வெளியீட்டுக்கு பல எதிர்ப்புகள் இருந்தாலும் படம் திரையிடப்பட்டு சூப்பர் ஹிட் ஆகியது. அதற்கு அடுத்த ஒன்பதாவது நாள் இடைத்தேர்தல் நடக்க அதில் மாயத்தேவர் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். திமுகவுக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் வரை திமுக Vs காங்கிரஸ் என்ற யுத்தம் திமுக Vs அதிமுக என்ற யுத்தமாக மாறியது. அதிமுகவின் எழுச்சி அப்போதைய இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரசை நீர்த்துப்போகச் செய்தது. இன்று இதுபோல் விஜய்யின் த வெ க வின் எழுச்சி தற்போதுள்ள அதிமுகவை நீர்த்துப்போக செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியைக் கண்டு கடும் கோபமடைந்தார் காமராஜர். ஆறாண்டுகளாக திமுகவை எதிர்த்து பேசி, உழைத்து, விதைத்து, நீர் பாய்ச்சி, தயார்படுத்தி வைத்தால் அறுவடைக்கு வேறொருவர் வந்துவிட்டார் என்று குற்றம் சாட்டினார். இது “திருட்டு புத்தி” என்று கொந்தளித்தார்.
அடுத்து மீண்டும் ஒரு தேர்தலுக்கு தயாரானார் எம் ஜி ஆர் இந்த முறை பாண்டிச்சேரியில் களம். அதிமுக, திமுக, இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் இந்த தேர்தலை ஒரு கௌரவ பிரச்சினையாக கருதினர். அதிமுக பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு முன்னேறியது. அந்த தேர்தலில் 12 இடங்களை பெற்று அதிமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எஸ். இராமசாமி தலைமையில் பாண்டிச்சேரியில் ஆட்சி அமைத்தது அதிமுக. ஆனால் அவர்களிடம் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் இந்திரா காந்தியிடம் நாஞ்சில் மனோகரனை வைத்து ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தார் எம் ஜி ஆர். இந்திராவும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கு பிரதிபலனாக அசோக் லேலாண்ட் அதிபர் ரங்கநாதனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதற்கு எம்ஜிஆர் ஒப்புக்கொண்டார். பாண்டிச்சேரியில் அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடக்க அதிமுக இரண்டு வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தது. மாநிலங்களவை பதவியைப் பெற்றுக் கொண்ட பிறகு எம்ஜிஆருக்கு முதுகில் குத்தினார் இந்திரா.

1973 டிசம்பர் 24 அன்று பெரியார் மரணம் அடைந்தார். பெரியாருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கருணாநிதி விரும்பினார். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர். இதற்கு சட்டப்படி சாத்தியமில்லை என்ற பதில் அளித்தனர். காந்திக்கு எப்படி சாத்தியப்பட்டது என்று எதிர் கேள்வி கேட்டார் கருணாநிதி. உடனே அரசு அதிகாரிகள் ஹீ இஸ் தி ஃபாதர் ஆஃப் அவர் நேசன் என்று பதில் அளித்தனர். கருணாநிதி கோபமாகி பெரியார் இஸ் தி ஃபாதர் ஆஃப் தமிழ்நாடு, ஃபாதர் ஆஃப் அவர் டிஎம்கே கவர்மெண்ட் என்று கொந்தளிக்க. பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட எனது ஆட்சி கலைக்கப்பட்டாலும் அதைவிட பெரிய பேரு என்ன இருக்க முடியும் என்றார் கருணாநிதி. அதன் பிறகு அரசு மரியாதையுடன் பெரியாரின் இறுதி காரியங்கள் நிறைவேறின. மும்முறை குண்டுகள் முழங்க தேக்கு மர பெட்டியில் வைத்து அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் அன்று சிறிமாவோ பண்டாரநாயக்கே அழைப்பின் பேரில் இலங்கை சென்ற இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தர ஒப்புக்கொண்டார். தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் தாண்டி கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதைப்பற்றி விரிவாக வேறு ஒரு கட்டுரையில் காண்போம். பெரியண்ணன் மனப்பான்மையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று 16 ஏப்ரல் 1974 இல் மாநில சுயாட்சி என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் திரு கருணாநிதி. தீர்மானத்திற்கு ஆதரவாக 161 பேரும் எதிராக 23 பேரும் வாக்களித்தனர். இந்த பிரச்சனையில் எம்ஜிஆரும், கருணாநிதி உக்கிரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் போக்கு சென்று கொண்டிருக்க கருணாநிதி எம்ஜிஆரை மலையாளி என்று விமர்சித்ததாகவும், கருணாநிதியை தாசி குளத்தில் பிறந்தவர் என்று எம்ஜிஆர் விமர்சித்ததாகவும் வதந்திகள் பரவத் தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
பீகாரிலிருந்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி மீது ஊழலுக்கு எதிராக பெரும் புரட்சியை துவக்கி இருந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வரும்போது அவரை சந்தித்து ஆதரிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் முடிவு செய்தார். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் திட்டமிடப்பட்டது. எம்ஜிஆர் ஜே பி யை சந்தித்து திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு கடிதத்தை சமர்ப்பித்தார். அதை பெரிது படுத்தாத ஜே பி குற்றம் சாட்டுவது சுலபம். நிரூபிப்பது கடினம் என்று நிராகரித்தார். இது எம்ஜிஆர்க்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. கருணாநிதியிடம் தமிழ்நாட்டில் லாட்டரியை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ஜே பி. அதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி உடனடியாக லாட்டரியை ஒழித்து சட்டம் இயற்றினார். இதனால் கருணாநிதி மீது ஜேபிக்கு ஒரு பாசம் அன்பு உருவானது. இதனால் தான் எம்ஜிஆரின் கோரிக்கையை நிராகரித்தார் என்று எம்ஜிஆர் புரிந்து கொண்டார்.
இந்திராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி பெரும் சவாலை கொடுத்துக் கொண்டிருந்தார் ஜே பி. நீதிமன்ற தீர்ப்பு இந்திராவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. அந்த சூழலில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க சஞ்சய் காந்தியின் ஆலோசனைப்படி இந்திய சட்டம் 352 வது பிரிவின்படி “நெருக்கடி நிலையை” நாடு முழுக்க அமல் படுத்தினார் இந்திரா காந்தி. ஒட்டு மொத்த இந்திய தேசமும் நெருக்கடிக்கு உள்ளானது. ஜேபி உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டார்கள். எமர்ஜென்சியை பற்றி விரிவாக வேறொரு கட்டுரையில் நாம் காண்போம்.

2 அக்டோபர் 1975 இல் காமராஜர் மரணமடைந்தார். இந்திரா காந்தி காமராஜருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். 25 டிசம்பர் 1975 இல் கோவையில் திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. பெருந்திரளான கூட்டம் கலந்து கொண்டது. அதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் இந்திரா காந்தியை எரிச்சல் படுத்தியது. அந்த மாநாடு தான் திமுகவிற்கு வினையாக முடிந்தது. தீர்மானங்களை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுத்தார் இந்திரா. இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். அதற்கு திரு கருணாநிதி பயப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற காரணம் காட்டி சட்டப்பிரிவு 356 வைத்து ஆட்சியை கலைத்தார் இந்திரா காந்தி. இதன் மூலம் 9 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு தற்காலிக முடிவுரை எழுதப்பட்டது.
தமிழ்நாட்டில் கெடுபிடிகள் அதிகமாகியது. பத்திரிகைகள் தணிக்கைகள் செய்யப்பட்டு வெளிவந்தன. போராட்டங்கள், கூட்டங்கள் தடை செய்யப்பட்டன. முரசொலி மாறன், வைகோ, ஸ்டாலின், டி ஆர் பாலு உள்ளிட்ட நிறைய திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். கி வீரமணி, எம்ஆர் ராதா உள்ளிட்ட திராவிடக் கழகத்தினர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். வெளியிலிருந்த திரு கருணாநிதியும் மற்றும் சக மந்திரிகளையும் கைது செய்ய திட்டம் தீட்டினார் இந்திரா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எம் ஜி ஆர், கல்யாணசுந்தரம் புகாரின் அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் தனி நபர் கமிஷன் அமைத்தார் இந்திரா. தில்லாக விசாரணை கமிஷனை வரவேற்கிறேன் என்றார் கருணாநிதி.
15 பிப்ரவரி 1976 இல் பிரிந்து இருந்த காங்கிரஸ் கட்சிகளை இணைத்து, தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சிக்கு ஜி கே மூப்பனாரை தலைவராக நியமித்தார் இந்திரா. கருணாநிதியை ஆதரிக்கும் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மிசா சட்டத்தில் அடைக்கப்பட்ட பலர் சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தனர். சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் அடி தாங்க முடியாமல் சிறையிலேயே மரணம் அடைந்தார்கள்.
அதிமுக வேறு ஒரு பெயருக்கு தன்னை மாற்றிக் கொண்டது. அனைத்திந்திய அண்ணா திமுக என்று அக்கட்சிக்கு பெயர் மாற்றப்பட்டது. அடுத்து ஒரு வினோதமான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜிஆர். அது கட்சிக் கொடியை ஒவ்வொரு தொண்டனும் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். இது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது, கட்சி பெயரை மாற்றுவது அண்ணாவின் கொள்கைக்கு முரணானது என்று ஒரு நீண்ட கடிதம் கோவை செழியன் விஸ்வநாதன் விருதுநகர் சீனிவாசன் மூலம் கொடுக்கப்பட்டது. எம்ஜிஆர் மூவரையும் கட்சியை விட்டு நீக்கினார்.

18 ஜனவரி 1977 அன்று வானொலியில் இந்திரா காந்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் எமர்ஜென்சி படிப்படியாக விளக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். எதிர்க்கட்சிகள் அதன் பிறகு ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதியில் 20 தொகுதிகளில் அஇஅதிமுகவும், 16 தொகுதியில் இந்திரா காங்கிரஸும், மீதி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மறுமுனையில் திமுக 19 தொகுதிகளிலும், ஸ்தாபன காங்கிரஸ் 18 தொகுதிகளையும், இரண்டு இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. எம்ஜிஆர் திமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தில் சுழன்று கொண்டிருக்க, சர்க்காரியா கமிஷன் இடைக்கால அறிக்கை வெளிவந்து திமுகவை தர்ம சங்கடத்தில் தள்ளியது. இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது மத்திய அரசு.
பலத்த பிரச்சாரத்திற்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன மிசாவால் பாதிக்கப்பட்ட திமுகவுக்கு பலத்த தோல்வி கிட்டியது. 18 இடங்களை அஇஅதிமுக கைப்பற்றியது. திமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் தேசிய அளவில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. திமுகவுக்கு இது சற்று ஆறுதலாக இருந்தது. காங்கிரஸ் கட்சி அகற்றப்பட்டு ஜனதா கட்சித் தலைமையில் புதிய ஆட்சி மத்தியில் அமைந்தது. எம்ஜிஆர் தமிழ்நாட்டில் பெற்ற வெற்றியைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்து வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக ஆவேன் என்று நம்பிக்கை கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது தோல்வியடைந்த இந்திரா காங்கிரசை சட்டமன்றத்தில் நாம் ஏன் தோளில் சுமக்க வேண்டும் என்று எம்ஜிஆர் கருதினார். திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட்டுகள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. காரணம் காற்றடிக்கும் பக்கத்தில் சாய்ந்து கொள்வது தானே அரசியல் சாதுரியம். அதிமுக தலைமையில் ஒரு அணி, இந்திரா காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி என்று நான்கு முனை போட்டியாக தமிழக அரசியல் களம் போட்டிக்கு தயாரானது. நான்கு முனையிலும் பிரச்சாரம் அனல் பறந்தது. 15 ஜூன் 1977 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன யாரும் எதிர்பாராத ஒரு முடிவுகள் அந்த தேர்தலில் வெளிப்பட்டது அதிமுக சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலில் 130 இடங்களைப் பெற்று பெருவாரியான வெற்றியை பெற்று அனைத்து கட்சியும் அடித்து தூக்கி தூர எறிந்தார்.

எம்ஜிஆருக்கு ஏன் இந்த மிகையான வர்ணனை என்றால். எம்ஜிஆர் தன்னுடைய கட்சியில் வேட்பாளராக அதிக அனுபவம் இல்லாத புது முகங்களை நிற்க வைத்தார். ஆனால் எதிர் அணியில் பலம் வாய்ந்த அரசியல் அனுபவம் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். எம்ஜிஆர் மட்டுமே அதிமுகவின் முக்கிய முகமாக கருதப்பட்டார். ஆதலால் அவர் மட்டுமே சூறாவளியாக சுற்றுப்பணம் செய்து பிரச்சாரம் செய்தார். மக்கள் அவரை ஒரு நடிகராக பார்க்காமல் தலைவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்தனர். இது எல்லோருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது. திமுக ஒன்பது ஆண்டுகளில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தது. அவர்கள் மேல் மிசா சட்டம் கொண்டுவரப்பட்டு கடுமையான சிறை தண்டனைகளை அனுபவித்தார்கள். அதன் மூலம் மக்களுக்கு ஒரு அனுதாபம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. அனுபவம் வாய்ந்த பல அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் போர்த் தளபதிகளாக இருந்தார்கள். கருணாநிதி அவர்கள் சிறந்த பேச்சாற்றல்மிக்க முதல்வராக இருந்தார். எத்தனை இருந்தும் ஒரு நடிகராக இருந்து முதல் தேர்தலில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று எம்ஜிஆர் முதலமைச்சராக பரிணமித்தார் என்றால் மக்களின் மனநிலையை நாம் எப்படி புரிந்து கொள்வது அவர்கள் என்ன மனதில் நினைக்கிறார்கள் என்பது அந்த சமயங்களில் தான் நமக்கு புலப்படும் அதை தெரிந்து கொண்ட தலைவர்களே களத்தில் வெற்றியை ருசிக்கிறார்கள்.
2026 இல் இதே போல் நான்கு முனை அல்ல ஐந்து முனை போட்டி ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தினகரன் ஓபிஎஸ் ஒரு கூட்டணி, நாம் தமிழர் தனித்து, விஜய் தன்னுடன் சிறிய கட்சிகளை கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் ஒரு களமாக அமையும் என்ற வாய்ப்பு இருக்கிறது. எம்ஜிஆருக்கு 1977 கிடைத்த வாய்ப்பு போல் விஜய்க்கும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? அப்படி இல்லை என்றால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருக்கிறதா? என்பதை அப்போதுள்ள சூழ்நிலையை வைத்து தான் புரிந்து கொள்ள முடியும். இன்னும் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கூட்டணி கணக்குகள் மாற வாய்ப்பு இருக்கிறது. அது தேர்தல் நடக்கும் 10 நாட்களுக்கு முன்பு வரை பரபரப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்தில் போராட்டக் களமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
எம்ஜிஆரின் ஆட்சியின் மதிப்பை பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்…
மீண்டும் பயணிப்போம்….
நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –





Prakash
September 24, 2025தமிழக வரலாறு தற்போது மக்களுக்கு கொண்டு சேர்த்த இந்த வரலாறு உங்களுக்கு மேலும் உங்கள் பயணத்தில் வெற்றியை சேர்க்கும் மிக்க மகிழ்ச்சி