JUDGEMENT DAY-1984 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை–பகுதி –11

புதிய ஆட்சி
1980 ல் 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்து ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் வெற்றி வெற்றிப்பூரிப்புடன் அரசை நிர்வகிக்க துவங்கினார். அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்க முடியாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறியிருந்தது.

சட்டம் – ஒழுங்கு
நக்சல்பாரிகளின் வன்முறைகளால் தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் தொடர்கதையானது. திருப்பத்தூரில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் போலீஸ் ஜீப்பில் பயணித்த காவல்துறையினர் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களை கேட்டறிந்த எம்ஜிஆர் கடும் கோபமடைந்தார். வன்முறையில் ஈடுபடுவோரை ஒடுக்க IPS மோகன்தாஸ் மற்றும் தேவாரம் இருவரையும் நியமித்தார். இருவரின் தலைமையின் கீழ் உள்ள அதிரடி தேடுதல் வேட்டையில் பல கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். சில கம்யூனிஸ்ட் கட்சியினரும் பாதிக்கப்பட்டனர். பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டன.
நக்சல்பாரிகளின் வழிமுறைகள் தவறானதாக இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொள்வது தவறானது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் குற்றச்சாட்டினார். மனித உரிமை அமைப்புகள் இதனை கண்டித்தது. துக்ளக் ஆசிரியர் சோ உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் “மக்கள் பாதுகாப்பு இயக்கம்” ஒன்றை ஆரம்பித்தனர் அந்தக் குழு திருப்பத்தூர் சென்று விசாரணை நடத்தியது. சேலம் சிறையில் அடைக்கப்பட்ட நக்சல்பாரிகளை பழ.நெடுமாறன் சென்று சந்தித்துப் பேசினார். இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்த எம்ஜிஆர் பாதிக்கப்பட்ட இடங்களில் “அமைதி யாத்திரை” நடத்தப் போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை கண்டு இது வெத்து நாடகம் என்று திண்டிவனம் ராமமூர்த்தி அறிக்கை விட்டார். மேலும் அவர் சிறையில் நக்சலைட்களை சந்தித்த பழ. நெடுமாறனை கண்டித்து அறிக்கையும் வெளியிட்டார். இதுபோன்ற நெருக்கடிகளின் காரணமாக காவல்துறையின் நடவடிக்கை சற்று குறைய ஆரம்பித்தது.

3வது உலகத் தமிழ் மாநாடு
4 ஜனவரி 1981 தொடங்கி 10 ஜனவரி 1981 வரை மதுரையில் “3வது உலகத் தமிழ் மாநாடு” நடத்தப்படும் என்று அறிவித்தார் எம்ஜிஆர். அதற்கு ஆர்.எம். வீரப்பனை பொறுப்பாளராக நியமித்தார். அவருக்கு உதவியாக அவ்வை நடராஜன், சிலம்பொலி செல்லப்பன், நெடுஞ்செழியன், கா.காளிமுத்து போன்றோரையும் நியமித்தார். பிரதமர் இந்திரா காந்திக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதிக்கு நேரில் சென்று அழைக்காமல் தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அப்படி அழைப்பு அனுப்பிய பிறகு திமுக தலைவரான திரு.கருணாநிதியைப் பற்றி அதிமுக அமைச்சர்கள் கிண்டலாக விமர்சிக்கத் தொடங்கியதால். தன்மானம் கருதி உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார் மு. கருணாநிதி.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டில் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அந்த மாநாட்டில் முத்தாய்ப்பாக தமிழ்நாட்டில் “இந்தி” திணிக்கப்படாது என்றும் உறுதியளித்தார். இதனால் காங்கிரஸ் அதிமுக இடையே கூட்டணி ஏற்படப் போகிறது என்ற பேச்சு அடிபடத் தொடங்கியது. உலகத் தமிழ் மாநாடு வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டின் மூலம் 2 கோடி அளவில் ஊழல் நடைபெற்றது என்று குற்றம் சாட்டினார் எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.கருணாநிதி.

“காவிரி தந்த கலைச்செல்வி”
இந்த மாநாடு தமிழ்நாட்டிற்கு மற்றுமொரு முதலமைச்சரை உருவாக்கக்கூடிய இடமாக அமைந்தது. அவர் யார் என்று உங்களால் யூகித்திருக்க முடியும் அவர்தான் செல்வி.ஜெ.ஜெயலலிதா. இவருக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த காலம் அது. சினிமாவில் சற்று இடைவெளியில் இருந்த அவர் ஓய்வான நேரங்களில் துக்ளக்கில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ராணி சீதை ஹாலில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனும் கலந்து கொண்டார். அவர் விழாவில் நடனமாடியவர்களை பாராட்டி பேசும்போது, செல்வி.ஜெயலலிதா அவர்கள் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். அவர் அந்த கலையை விட்டு விடாமல் பாதுகாக்க துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான் எம்ஜிஆர் செல்வி.ஜெயலலிதாவை உலகத் தமிழ் மாநாட்டில் நடனமாட அழைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா “காவிரி தந்த கலைச்செல்வி” என்ற பெயரில் நடனமாடி மாநாட்டில் சிறப்பித்தார். அந்த தொடக்கப்புள்ளி தான் அவர் பிற்காலத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் மாறக் காரணமாக இருந்தது.
ஊழல்
தமிழகத்தில் அடுத்த ஒரு பிரச்சனை பூதாகரமாக மாறத்துவங்கியது. தமிழகத்தில் “எரி சாராயம் ஊழல்” நடந்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. கேரளாவுக்கு எரி சாராயம் விற்றதாக எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரன் மூலம் இந்த ஊழல் நடைபெற்றது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்க, எம்ஜிஆரின் நெருக்கமான IPS அதிகாரி மோகன்தாஸ் தமிழ்நாட்டில் ஊழல் பெருகிவிட்டதாகவும் இரண்டாவது முறை ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்றும் மக்கள் பேசிக்கொள்வதாக எம்ஜியாரிடமே சொல்ல, அதைக் கேட்ட எம்ஜிஆர் மிகவும் வருத்தப்பட்டார். அதன் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி கைலாசம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் எம்ஜிஆர் அவருக்கு எதிர்ப்பு வர நீதிபதி சதாசிவம் மாற்றாக நியமிக்கப்பட்டார்.
இது மூன்று மாநிலங்களில் அடங்கிய ஊழல் பிரச்சனை என்பதால் ஒரிசா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.ரே என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார் இந்திரா காந்தி. எம்ஜிஆர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று அறிக்கை சமர்ப்பித்தார் எஸ்.கே.ரே. இந்த அறிக்கை திமுகவை உற்சாகமடையச் செய்தது. இதற்கிடையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி ஆட்சியில் அமைக்கப்பட்ட “சர்க்காரியா கமிஷன்’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கருணாநிதிக்கு எதிரான இந்த கமிஷன் இந்திராவால் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே இந்திரா, கருணாநிதி இடையே ஏற்பட்ட கூட்டணி தொடர்பாக 16 மே 1981 அன்று கருணாநிதி மீது மத்திய புலனாய்வு தொடுத்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. திருப்பத்தூர் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்க கடுப்பான திமுக காங்கிரசுக்கு ஆதரவு தராமல் ஒதுங்கிக் கொண்டது. எம்ஜியார் வேட்பாளரை அறிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டார். காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு யாரையும் அழைக்காமல் இருந்தபோதிலும் காங்கிரஸ்காக வேனிலேயே பிரச்சாரம் செய்தார் எம்ஜிஆர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தலைநகரம்
சென்னையில் இருந்த தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் விரும்பினார். அதன்படி திட்டங்கள் வகுக்கப்பட்டன. திருச்சி தஞ்சை இடையில் தலைநகர் உருவாக்கப்படுகிறது. என்று எஸ்.டி.எஸ் தெரிவித்தார் பிறகு நவல்பட்டில் கட்டப்படும் என்று செய்திகள் வெளியாகின. எம்ஜிஆர் தங்குவதற்கு உறையூரில் ஒரு பங்களா கட்டப்பட்டது. இப்படி பல முயற்சிகள் தொடங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அதன்பிறகு இத்திட்டத்தை எம்ஜிஆர் ஏன் கைவிட்டார் என்பது புதிராகவே அமைந்து போனது.
கொலைச் சம்பவம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரி “சுப்பிரமணிய பிள்ளை” கொல்லப்பட்டது தமிழகத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. கருணாநிதியின் தொடர் போராட்டத்தால் முதல்வர் எம்ஜிஆர் நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். விசாரணை முடிந்து 288 பக்க அறிக்கையை பால் அவர்களால் கொடுக்கப்பட்டது. எம்ஜிஆர் அதை சட்டமன்றத்தில் வெளியிடாமல் காலம் தாழ்த்த, கருணாநிதி அவர்கள் அதை பொதுவெளியில் வெளியிட்டார். இந்த விசாரணை நகல்கள் கருணாநிதிக்கு எப்படி கிடைத்தது என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த அளவுக்கு கருணாநிதியின் செல்வாக்கு நிர்வாகத்தில் இருக்கிறது என்பதே இந்த நிகழ்வால் உணர முடிகிறது. அதன் பிறகு திருச்செந்தூர் அறங்காவலர் குழு ராஜினாமா செய்தது. புலன் விசாரணைக்கு பிறகு மேல்விசாரணை நடைபெறும் என்று எம்ஜிஆர் அறிவிக்க, அதை எதிர்த்து திரு.கருணாநிதி அவர்கள் மதுரையில் இருந்து தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபயணம் போகப் போறதாக அறிவித்தார். அதன்படி ஒரு நெடும் பயணத்தையும் செய்து காட்டினார்.

சத்துணவுத் திட்டம் வரலாறு
எம்ஜியாரின் கனவு திட்டமான “சத்துணவு திட்டத்தை” 1982 ல் தொடங்கி வைத்தார். இத்திட்டம் காமராஜரின் “மதிய உணவுத் திட்டம்” என்று சிலர் இன்றும் வாதிடுவர். அது உண்மைதான். ஆனால் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தவர் நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி.தியாகராயர் அவர்கள். 1920 இல் “Midday meals scheme” என்ற பெயரில் சென்னை ஆயிரம் விளக்கு பள்ளியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. திட்டம் படிப்படியாக எல்லா மாநகராட்சி பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட்டது. 1925 இல் போதிய நிதி இல்லை என்ற காரணத்தால் பிரிட்டிஷாரால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் நீதி கட்சியின் தொடர் முயற்சியால் மீண்டும் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மறுபடிவமே 1956 இல் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம். அதன் நீட்சிதான் எம்ஜியாரின் சத்துணவுத் திட்டம். இத்திட்டத்தால் தமிழ்நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பட்டனர். இதன் மூலம் ஏற்படும் நிதிச் சுமையை போக்க கலைத்துறையினரிடம் நன்கொடை கேட்டார் முதல்வர் எம்ஜிஆர். அப்போது ஜெயலலிதா அவர்கள் 40 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிவெடுத்தார் எம்ஜிஆர். இதை பிரபலப்படுத்த சரியான நபர் செல்வி.ஜெயலலிதா தான் என்று எம்ஜிஆர் நம்பினார்.
அதிமுகவில் 4 ஜூன் 1982 ல் தான் உறுப்பினராக சேர்ந்தார் செல்வி.ஜெ.ஜெயலலிதா. மயிலாப்பூரில் உள்ள லாலா தோட்டம் என்ற இடத்தில் சத்துணவு கூடம் ஒன்று கட்டப்பட்டது. கட்டிடம் அந்தப் பகுதியில் உள்ள 3000 பேர் செல்லக்கூடிய பாதையை மறைத்தபடி அந்த கட்டிடம் இருந்தது. அதை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர். அவர் உடனே அதிகாரிகளிடம் கூறி அந்த கட்டிடத்தை பிரச்சனை இல்லாமல் அகற்றி கொடுத்தார். அதற்காக அந்த மக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர் இதை தெரிந்து கொண்ட திரு கருணாநிதி தமிழகத்திற்கு முதல்வர் எம்ஜியாரா? இல்லை ஜெயலலிதாவா? என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதாவை சத்துணவு உயர் மட்ட குழு உறுப்பினராக பதவியில் அமர்த்தினார் எம்ஜிஆர்.
இடைத்தேர்தல்கள்
பெரியகுளம் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் சத்துணவு திட்டம் தான் பிரதானமாக இருக்கும் என்று கருணாநிதி புரிந்து கொண்டார். அதற்கு காரணம் அத்திட்டம் மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றிருந்தது. அதன் பலனாக அதிமுகவின் ஜக்கையன் 2,52,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சத்துணவு திட்டத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க ஜெயலலிதா ஒரு பிரதான சக்தியாக விளங்கினார். அவரைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதை புரிந்து கொண்ட எம்ஜிஆர் 1983 ஜனவரி மாதம் அஇஅதிமுகவின் “கொள்கை பரப்புச் செயலாளராக” அவரை நியமித்தார். அதற்கு திமுகவிடமிருந்து பலத்த கிண்டலும், கேலியும் எழுந்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஜெயலலிதா பல கூட்டங்களை நடத்தத் துவங்கினார். தமிழகம் முழுக்க பம்பரமாக சுற்றி மேடையில் முழங்க ஆரம்பித்தார். கூட்டத்தினிடமிருந்து கேள்வியை கேட்டு பதிலை பெறக்கூடிய வகையில் தன் உரையாடல்களை அமைத்துக் கொண்டார். இந்த அணுகுமுறை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திருச்செந்தூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது இந்த இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றது.
தெலுங்கு தேசம்
ஆந்திராவில் என்.டி.ஆர் “தெலுங்கு தேசம்” என்ற கட்சியை துவக்கினார். அவர் எம்ஜிஆர் தான் தனக்கு வழிகாட்டி என்று அறிவித்தார். எம்ஜிஆர் கட்சி துவங்கி ஐந்தாண்டுகளில் ஆட்சியைப் பிடித்தார். ஆனால் என்.டி.ஆர் கட்சித் துவங்கி ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடித்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அவர் முதல்வராக பதவியேற்றதும் சென்னைக்கு வந்து எம்ஜியாரிடம் ஆசி வாங்கினார். என்.டி.ஆர், எம்ஜிஆர் இருவரும் இணைந்து 27 ஏப்ரல் 1983இல் கடப்பாவில் “தெலுங்கு கங்கை” திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்த சமயத்தில் நம் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்கள் பிரச்சனை பெரிதாக கிளம்பியது. அதனை விரிவாக நாம் வேறொரு கட்டுரையில் காண்போம்.
S.T.S ன் போர்க்கொடி
மாநிலங்களவைத் தேர்தல் வர அதில் போட்டியிட ஜெயலலிதா, வலம்புரிஜான் போன்றோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் கே.வி.தங்கபாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்திருந்த இருக்கை. ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்ட போது அதிருப்தியில் இருந்த எஸ்.டி.எஸ் தற்போது கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்டு வெளிப்படையாகவே விமர்சனம் செய்ய துவங்கினார். இதனால் அவரின் கலால் துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. மறைமுகமாக தாக்கிக் கொண்டிருந்த எஸ்.டி.எஸ் இப்போது நேரடியாகவே எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் தாக்கிப் பேசத் தொடங்கினார். இதனால் 1 செப்டம்பர் 1984 அன்று செயற்குழுவில் எஸ்.டி.எஸ் ஐ நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் “அண்ணா திமுக” என்ற கட்சியை துவங்கி பின்னர் அது வழக்காக நீதிமன்றத்திற்கு சென்று கட்சியின் பெயர் “நமது கழகம்” என்று மாற்றப்பட்டது. எஸ்.டி.எஸ்ன் நடவடிக்கை எம்ஜிஆரை சங்கடத்தில் ஆழ்த்தியது.

அப்பல்லோ டூ ப்ரூக்ளின்
5 அக்டோபர் 1984 அன்று நள்ளிரவு எம்ஜிஆர்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்ஜிஆரின் உடல்நிலை பற்றி பல வதந்திகள் தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. மக்கள் கூட்டம் கூட்டமாக சென்னை நோக்கி வரத் தொடங்கினர். எம்ஜிஆர் உயிர் பிழைக்க உண்ணாவிரதங்கள், வேண்டுதல்கள், யாகங்கள், பிரார்த்தனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சிலர் மொட்டை அடித்துக் கொண்டனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்து இறந்ததாக செய்திகள் வெளியாகின. எம்.ஜி.ஆருக்காக பிரார்த்தனை செய்வதாக கருணாநிதி அறிவித்தார். எம்ஜிஆரை காண ஜானகி நெடுஞ்செழியன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாததற்கு சில நாட்களுக்கு முன்புதான் அவருடைய கொள்கை பரப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆரை பார்க்க இந்திரா காந்தி நேரில் வந்தார். எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க செல்ல ஏற்பாடுகள் தயாராயிண. தமிழக நிர்வாகத்தை நெடுஞ்செழியனும், கட்சி நிர்வாகத்தை ஆர்.எம்.வீராப்பனும் கவனிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மறைந்தார் இந்திரா
எம்ஜிஆர் அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் 31 அக்டோபர் 1984 அன்று காலை டெல்லியில் தனது வீட்டில் தன்னுடைய மெய்க்காப்பாளர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய பிரதமராக “ராஜீவ் காந்தி” தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி டிசம்பர் 1984 மக்களவை தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் எம்ஜிஆரின் மீது அனுதாப அலை வலுவாக இருந்தது. மத்தியில் இந்திரா காந்தி இறப்பிற்கு பின் காங்கிரஸ் மீது அனுதாப அலை வலுவாக உருவாகி இருந்தது. உடனே அமெரிக்கா சென்ற நெடுஞ்செழியன் குழு தமிழக சட்டசபையை கலைத்து மக்களவைத் தேர்தலுடன் சந்திப்பதற்காக சம்மதம் பெறப்பட்டதாக அறிக்கை வெளியிட்டார். இரண்டு தேர்தல்களும் ஒன்று சேர நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் சூடு பிடித்துக் கொண்டிருக்க, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.
அந்த தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்
நன்றி வணக்கம்
ஃப்ரெடி டிக்ரூஸ்





Rajesh
December 31, 2025சிறந்த கட்டுரை. கடந்த காலம் குறித்த சம்பவங்கள் படிக்க சுவாரசியமா உள்ளது. வாழ்த்துக்கள்.
Chandran t
December 31, 2025Excellent writer all the best,
Prakash
December 31, 2025அருமை
கடந்த காலத்திற்கு பயணித்த மாதிரி இருந்தது எண்ணற்ற தகவல்கள்
நன்றி அய்யா