அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1989 – AIADMK Vs DMK – அரசியல் கட்டுரை – பகுதி -12

1984-ல் தமிழக தேர்தல் களம் தகதகவென்று தகித்துக் கொண்டிருக்க, எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ளபுரூக்களின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் 1967 முதல் எல்லா தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்ற நட்சத்திர வேட்பாளர். இப்போது அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அஇஅதிமுக வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி தொண்டர்களை கேள்வியாய் குடைந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிவந்தது. அச்செய்தி எம்ஜிஆர் ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் போவதாக தெரிவித்தது. அதைக் கேள்விப்பட்ட அஇஅதிமுக தொண்டர்கள் அளவில்லாத ஆனந்தத்தில்  துள்ளி குதித்தார்கள்.  

எம்ஜிஆர் ஆண்டிப்பட்டியில் நிற்கப் போகிறார் என்ற செய்தி ஒருவருக்கு மட்டும் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் எஸ்.எஸ்.ஆர், அதற்கு காரணம் அவர் கடந்த முறை ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை தனக்கு அந்த இடம் கிடைக்காது என்று தெரிந்து விட்டதால் கட்சியை விட்டு வெளியேறி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். எம்ஜிஆர் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலையில் அவரைப் பற்றி விதவிதமான வதந்திகள் வரத் தொடங்கின.

ஆர்.எம்.வீரப்பன் மற்றும் அவரது குழு ஒரு முடிவு செய்தார்கள். 1967-ல் எம்ஜிஆர் குண்டடிப்பட்டிருக்கையில் அவரின் புகைப்படத்தை தேர்தலில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்கள். அதுபோல் இந்த முறை எம்ஜிஆர் மருத்துவமனையில் இருப்பதை வீடியோவாக எடுத்து பிரச்சாரத்தில் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தனர். அதிமுக குழு இந்திய வெளியுறவு துறையின் மூலம் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுத்து வீடியோ எடுக்க ஒப்புதல் பெற்றது. இயக்குனர் எஸ்.பி.முத்துராமனை கொண்டு வீடியோ தொகுப்பு ஒன்று தயாரிக்கப்பட்டது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் இந்திரா காந்தி இறப்பை வைத்து வாக்கு சேகரித்தது. தமிழ்நாட்டில் எம்ஜிஆரை வைத்து அஇஅதிமுக வாக்கு சேகரித்தது. இதனால் நாடு முழுவதும் அனுதாப அலை வீசப்பட்டது. இதைக் கண்டு எரிச்சல் அடைந்த திமுக சாவுக்கு ஒரு வாக்கு”, நோவுக்கு ஒரு வாக்கு” என்று கிண்டலுடன் தங்களுடைய பிரச்சார பாணியை கொண்டு சென்றது.

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா 300 கூட்டங்களுக்கு மேல் பிரச்சாரம் செய்தார். அவரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைக் கண்ட இரண்டாம் கட்ட அஇஅதிமுக தலைவர்களுக்குள் புகைச்சல் உண்டாக்கியது. ஜெயலலிதாவின் பிரச்சாரம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளில் அஇஅதிமுக 132 இடங்களில் அமோகமாக வெற்றி கண்டது. எம்ஜிஆர் ஆண்டிப்பட்டியில் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார் என்று இன்றளவும் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுக வெறும் 24 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மத்தியில் காங்கிரஸ் 415 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை  பெற்றது.

எம்ஜிஆர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்றுக்கொள்ள தமிழகமே காத்துக் கொண்டிருந்தது. அவரின் சிகிச்சை முடிந்து வருவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அதிமுக தலைவர்களை அழைத்து தற்காலிகமாக வேறு யாரையாவது முதல்வராக தேர்ந்தெடுங்கள் என்று ஆளுநர் தரப்பு சொல்ல, நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன் குழு உடனடியாக அமெரிக்கா சென்றது. அந்த குழுவும் இந்தியா திரும்பி வர நெடுநாட்கள் ஆனது. தமிழகத்தில் எம்ஜிஆர் எப்போது குணமடைந்து திரும்பி வருவார் என்ற ஏக்கம் மக்களிடையே காணப்பட்டது.

1985 ஜனவரி வடசென்னை மக்களவை மற்றும் பெரம்பூர், எழும்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை சில பத்திரிகைகள் எம்ஜிஆரின் அனுதாபாலையும் ஓய்ந்து விட்டது என்று எழுதின. 4 பிப்ரவரி 1985 அன்று சிகிச்சை முடித்து தமிழகம் வந்தடைந்தார். 10 பிப்ரவரி 1985 அன்று மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக எம்ஜிஆர் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக் காரணம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்தபோது கட்சிக்குள் நடந்த கலவரங்களை அவர் தெரிந்து வைத்திருந்தார். கட்சியில் ஜெயலலிதா ஆதரவு அணி  ஜெயலலிதா எதிர்ப்பு அணி என்று இரு அணிகளாக அப்போது உருவாகி இருந்தது. ஆனால் திமுகவின் தொடர் சட்ட ரீதியான நெருக்கடியால் எம்ஜிஆர் அமைச்சர்களை உடனடியாக நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அமைச்சரவையில் நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன்,  ஹண்டே, கே.ஏ.கிருஷ்ணசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன்,காளிமுத்து போன்றோருக்கு பதவி வழங்கப்பட்டது. ஒரு பக்கம் அதிமுகவின் வெற்றிக்கு பம்பரமாய் சுழன்ற ஜெயலலிதாவை அஇஅதிமுக புறக்கணித்தது. எம்ஜிஆரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று ஜெயலலிதா முயற்சி செய்தார். அந்த  முயற்சியின் பலனாக ஒரு மணி நேரம் மட்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருவரும் சந்தித்துக் கொண்ட சூழலை வைத்து ஜெயலலிதாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு அதன் பிறகு நடக்கவில்லை.   

மீண்டும் இலங்கையில் இனப்பிரச்சினை உருவெடுக்க துவங்கியது. தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தமிழக கட்சிகள் முறையிட்டன அதற்கு ராஜீவ் காந்தியின் மத்திய அரசு பெரிதாக செவி சாய்க்காமல் இருந்தது. பிரபாகரன் அவர்கள் எம்ஜிஆரை சந்திக்க ஆண்டன் பாலசிங்கத்தை தமிழ்நாட்டிற்கு அனுப்பினார். எல்லா விவரங்களையும் கேட்ட எம்ஜிஆர் தன்னுடைய தனிப்பட்ட பணம் சுமார் 4 கோடியை விடுதலைப் புலிகளுக்கு கொடுத்து உதவினார். இதுவரை அவர் தனது சொந்த பணம் ஆறு கோடி வரை ஈழ விடுதலைக்காக கொடுத்திருக்கிறார்.

திமுக தலைமையில் டெசோ என்ற அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் அவர் தலைவராகவும், அன்பழகன், கி.வீரமணி, பழ.நெடுமாறன் போன்றோர் உறுப்பினராகவும் இருந்தனர். இந்த அமைப்பு இலங்கை பிரச்சனையை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் விதமாக செயல்படும் என்று அறிவித்தது. பூட்டான் தலைநகர் திம்ராவில் நடக்கவிருந்த பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிவு செய்தார் ராஜீவ் காந்தி. 8 ஜூலை 1985 பேச்சுவார்த்தை துவங்கியது. அதில் விடுதலைப்புலிகள் இலங்கை அரசு பிரதிநிதிகள் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை துவங்கியது. பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை அரசு ஆகையால் ஜெயவர்த்தனாவை நம்பக்கூடாது என்று தமிழக தலைவர்கள் அறிக்கை விட பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்பு செய்தது விடுதலை புலிகள் இயக்கம்.

6 செப்டம்பர் 1985 அஇஅதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை மீண்டும் நியமித்தார். எம்ஜிஆர். இலங்கை தமிழருக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் எம்ஜிஆர் அதன்படி அனைத்து கட்சியையும் கூட்டி ஒரு உண்ணாவிரதம் அறிவித்தார். அண்ணா சதுக்கத்தில் எம்ஜிஆர் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது. செங்கல்பட்டில் ஜெயலலிதா தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கிடையில் பல நெடுமாறன் இலங்கை ரகசியமாக இலங்கை சென்றார்.

தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் வரத் தொடங்கியது அஇஅதிமுக கூட்டணியில் இந்திரா காங்கிரஸ், திமுக கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் முஸ்லிம் லீக், பார்வேர்ட் பிளாக் கூட்டணி அமைத்தது. திராவிடர் கழகமும், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியும் திமுகவை வெளியிலிருந்து ஆதரித்தது. தேர்தலில் யாரும் எதிர்பாராத நிலை உருவானது உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. உள்ளாட்சித் தேர்தலில் பெருவாரியான இடங்களை பெற்ற திமுக மேலவைத் தேர்தலை எதிர்கொண்டு காத்திருந்தது. மேலவைத் தேர்தலும் வந்தது. அஇஅதிமுகவின்4 இடங்களின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அந்தக் தேர்தலில் திமுக இரண்டு இடங்களையும், சுயேட்சைகள் இரண்டு இடங்களையும் கைப்பற்றினர். இதனால் மேலவையில் அதிமுகவின் பலம் குறைந்து போனது.

ஆளுநர் மூலமாக எம்ஜிஆர் அவர்கள் வெண்ணிறாடை நிர்மலாவையும் மேலும் இரண்டு பேர்களையும் மேலவைகளில் நியமித்தார். இதில் வெண்ணிறாடை நிர்மலா திவால் நோட்டீஸ் கொடுத்தவர் என்பதனால் அவர் மேல் புகார் எழுந்தது. ஆகவே அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. இந்த நிகழ்வு எம்ஜிஆரை  பெரிதும் பாதித்தது. அதன் பிறகு மேலவையை கலைக்க எம்ஜிஆர் முடிவு செய்தார் இதற்கு திமுக மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்தில் மெஜாரிட்டி வாக்குகள் பெற்று 14 மே 1986 இல் மேலவை கலைக்கப்பட்டது.

14 ஜூலை 1986 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் எம்ஜிஆர் தனது ரசிகர் மன்ற மாநாட்டை ஜெயலலிதா மேற்பார்வையில் நடத்தினார். அந்த மாநாட்டில் ஆறடி உயர செங்கோலை எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு கொடுத்தார்.

29 ஜூலை 1984இல் இலங்கையில் ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனை ஒப்பந்தம் கையெழுத்தானது அந்த நிகழ்வில் அதிமுக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற விழாவில் ராஜீவ் காந்தியை சிங்கள ராணுவ வீரர் துப்பாக்கியால் தாக்கம் முயன்றார். ஆனால் அவர் நல்வாய்ப்பாக உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டார். அதை தொடர்ந்து தமிழ்நாட்டின் நடைபெற்ற பாராட்டு விழாவில் ராஜீவ் காந்தி கலந்து கொள்ள வந்தார். அந்த சமயத்தில் எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்க தொடங்கியது. கடும் சிரமத்திற்கு இடையே விழாவில் கலந்து கொண்டார் எம்ஜிஆர். அதன் பிறகு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியது. அதற்கு காரணமாக பாமக என்ற கட்சி செயல்பட்டது. 17 செப்டம்பர் 1987 முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் சாலைகள் முழுவதும் மரங்களை வெட்டி குறுக்கே போட்டனர் பாமகவினர். அதன் பின்னும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமடைந்த வன்னிய இளைஞர்கள் பேருந்துகளை அடித்து நொறுக்கினர். போராட்டம் வட மாவட்டங்கள் முழுவதும் விரிவடைந்தது.  இந்த வன்முறையை கட்டுப்படுத்த தமிழக அரசு காவல்துறை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாக்கினார். இந்த துப்பாக்கி சூட்டை இனப்படுகொலை என்று விமர்சித்தார் ராமதாஸ். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் 20,000 மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். எம்ஜிஆர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்துவிட்டு தமிழ்நாடு திரும்பினார். 25 நவம்பர் 1987இல் ராமதாஸ் உள்ளிட்டவரை எம்ஜிஆர் அழைத்து பேசினார். பிறகு 94 சாதி சங்கங்களையும் அழைத்து பேசினார் முதல்வர். ஆனால் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

21 டிசம்பர் 1987இல் சென்னை கத்திப்பாராவில் நேருவின் சிலையை திறக்க ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் மிகுந்த சிரமத்துடன் எம்ஜிஆர் பங்கு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ஒரு சில தினங்களில் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை விழா நடக்க இருக்க அதிகாலையிலேயே சூரியன் மறைய தொடங்கியது.

24 டிசம்பர் 1987 தமிழக முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறைந்தார். இந்த செய்தி கேட்டு தமிழகமே சோகக் கடலில் மூழ்கியது. எம்ஜிஆர் உடல் வைக்கப்பட்ட ராணுவ வண்டியில் இருந்து செல்வி ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார். 42 குண்டுகள் முழங்க எம்ஜிஆரின் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது.

கட்சிக்குள் சண்டைகள் வெடிக்கத் துவங்கியது. தற்காலிக முதல்வராக நெடுஞ்செழியன் அமர்த்தபட்டார். ஆர்.எம்.வீரப்பன் திருமதி ஜானகி எம்ஜியாரை முதல்வராக்க வேண்டும் என்று பிரச்சினையை உண்டாக்கினார். நெடுஞ்செழியனை ஜெயலலிதா ஆதரித்தார். இந்த இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆளுநர் குரானா முன்னிலையில் ஜானகி அணியினர் ஆதரவு எம்எல்ஏக்கள் அணிவகுத்தனர். 6 ஜனவரி 1988 அன்று திருமதி ஜானகி எம்ஜியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மூணு வாரங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நிபந்தனை அவருக்கு விதிக்கப்பட்டது.

பெரும்பான்மையை நிரூபிக்க ஜானகி அணியினர் பெரும் பாடுபட்டனர் அவர்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை 97 பேர் மட்டுமே. பெரும்பான்மை 118 இடங்கள் தேவை. மத்திய அரசு உதவியை அவர்கள் நாடினார். அவர்கள் ஏதும் நம்பிக்கையான வார்த்தைகளை சொல்லவில்லை. பிறகு ஜெயலலிதா ஆதரவை நாடினார். அவர்களிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை. பிறகு திமுகவின் ஆதரவை நாடினார். இரண்டு குழுவுக்கும் இடையில் உள்ள சண்டையில் நாங்கள் யாருக்கும் ஆதரவளிக்கவில்லை என்று திமுக ஒதுங்கிக் கொண்டது.

26 ஜனவரி 1988 அன்று எம்ஜிஆருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. இந்த சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றம் கூட்டப்பட்டது. அங்கே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. நாற்காலிகள், மைக்குகள் பறந்தன. சட்டமன்றமே கலவர காடாக மாறியது. காவல்துறை ஆணையர் வால்டர் தேவாரம் தலைமையில் காவல்துறையினர் சட்டமன்றத்திற்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 99 வாக்குகள் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவிக்க, அதற்கு மாறாக கவர்னர் இதை ஏற்காமல் அரசு இயந்திரம் முற்றிலும் பலவீனமடைந்து இருக்கிறது. இதனால் திருமதி ஜானகி அவர்களால் கட்டுக்கோப்பாக ஆட்சி நடத்த முடியாது என்று மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இதனால் மே 30 இதனால் 30 ஜனவரி 1988 தமிழ்நாடு சட்டமன்றம் கலைக்கப்பட்டது.  தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது

1989 இல் அடுத்த யார் ஆட்சியைப் பிடித்தார் என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்

நன்றி வணக்கம்

ஃப்ரெடி டி’குரூஸ்

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் தலைவர்கள்

கர்மவீரருக்கு வான் புகழ் வாழ்த்து – வாழ்த்துக் கட்டுரை

காமராஜர் பிறந்த நாள் இன்று 15-07-2025 கட்டுரை – விருதுநகரில் வசிக்கும்  சிவகாமி அம்மையாரும் குமாரசாமி ஐயாவும் பார் போற்றும் தலைவனாக நமக்கு ஒரு பெருந்தலைவர் பிறப்பார்
அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 2026 – T.V.K Vs D.M.K- அரசியல் கட்டுரை – பகுதி – 1

2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  நோக்கி ஒரு பயணம் 2026 சட்டமன்றத் தேர்தல்  T.V.K Vs D.M.K என்ற இருமுனை போட்டிக் களமாக அமையப் போகிறது