JUDGEMENT DAY – 2026 – D.M.K Vs T.V.K- அரசியல் கட்டுரை – பகுதி.2


2026 – தமிழக சட்டமன்றத் தேர்தல் நோக்கி ஒரு பயணம்
திரைப்படத்துறையில் இல்லாமல் அரசியல் களத்தில் மட்டுமே களமாடிக் கொண்டிருந்த அரசியல் ஆளுமைகளில் கரிஷ்மாடிக் லீடர் அல்லாத தலைவர்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இந்த பகுதி இரண்டில் காணப் போகிறோம்.
எம்ஜிஆருக்கு பிறகு திமுகவில் இரண்டாவது பிளவு திரு. வைகோ அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அப்பிளவின் பாதிப்பினால் திமுகவிலிருந்து நிறைய மாவட்டச் செயலாளர்கள் வைகோ அவர்களுடன் அணிவகுத்து சென்றனர். திமுகவுக்கு மாற்றாக திரு எம் ஜி ஆரால் அதிமுக எப்படி பிளவை கண்டதோ அதே போன்ற ஒரு பிளவை திரு வைகோ அவர்கள் ஏற்படுத்தி திமுகவில் மிகப்பெரிய சரிவை உண்டாக்குவார் என்று அரசியல் ஆர்வலர்களும் மக்களும் எதிர்பார்த்தனர். 1994 இல் மதுரையில் மதிமுக என்ற கட்சியை அறிவித்த திரு வைகோ அவர்கள் 1995ல் திருச்சியில் முதல் மாநில மாநாட்டில் மிகப் பெரிய ஒரு பேரணியை நடத்திக் காட்டினார். மாலை தொடங்கி அந்தப் பேரணி இரவு விடிய விடிய மாநாட்டுத் திடலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த பேரணியை நான் நேரடியாக களத்தில் கண்டேன். அந்த அனுபவம் எனக்கு உண்டு. இவ்வளவு பெரிய மிக நீண்ட பேரணியா என்ற வியப்பு எனக்கும் அதை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கும் ஏற்பட்டது. அப்படி ஒரு எழுச்சி மிகுந்த பேரணியை கட்டி அமைத்தார் திரு. வைகோ அவர்கள். 1996 ல் நடந்த சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவருக்கு கிடைத்த வாக்கு சதவீதம் 4.5%. அதன் பிறகு அவருடைய கூட்டணி நிலைப்பாட்டில் மாறி மாறி எடுத்த முடிவுகளால் மிகப் பெரிய தலைவராக வரக்கூடிய திரு வைகோ அவர்கள் தோல்விகளால் வீழ்ந்து இன்று சிறிய கட்சியாக வலுவிழந்து காணப்படுகிறார். பேச்சாற்றல் மிகுந்த திரு. வைகோ அவர்கள் தன் பேச்சை மட்டுமே வைத்து மக்களிடம் தன்னை ஒரு கரிஷ்மாட்டிக் லீடர் என்ற பிம்பத்தை கட்டமைக்கலாம் என்று நினைத்தார் அது இன்று வரை அவருக்கு கை கூடாமல் சென்று விட்டது .
இட ஒதுக்கீட்டுக்காக, சமூக நீதிக்காக போராடிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் அய்யா. டாக்டர். ராமதாஸ் அவர்கள் ஒரு சாதிக் கட்சியாக தங்களை சுருக்கிக் கொண்டார். அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி அமைத்து தன்னை ஒரு கரிஷ்மாடிக் லீடர் என்ற பொதுவான மக்களின் அபிப்பிராயத்தை பெற தவறிவிட்டார்.

தலித் மக்களின் பெருவாரியான எதிர்பார்ப்பாக இருந்த திரு.தொல் திருமா அவர்கள் தன்னுடைய பேச்சாற்றலாலும் சீரிய சிந்தனையாளும் தன் கட்சியை திறம்பட வழி நடத்திக் கொண்டு வந்தார். சில நேரங்களில் அவர் எடுத்த தவறான முடிவுகள் அவருக்கு வெற்றி வாய்ப்பை ஈட்டித்தர முடியவில்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக சரியான நிலைப்பாட்டில் ஒரு நிலையான கூட்டணியை அமைத்து அந்தக் கூட்டணியில் தனக்கான பங்கையும் வெற்றி வாய்ப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். இன்று தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். எப்படி பாமகவை பற்றி மக்களிடம் சாதியக் கட்சி என்ற பார்வை இருக்கின்றதோ அதே போல் திரு. தொல் திருமாவளவன் அவர்களையும் ஒரு சாதிய குறியீட்டுக்குள் இந்த சமூகம் அடைத்துவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ இந்த சமூகம் அதை ஏற்றுக் கொண்டுவிட்டது. அவர் தன் கட்சியை ஒரு சாதிக்கான கட்சி அல்லாமல் அனைவருக்குமான இயக்கம் என்ற சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார். தன்னுடைய இயக்கத்தை எல்லோருக்கமான இயக்கமாக மக்கள் மனதில் பதிய வைப்பதற்கே போராடிக் கொண்டிருக்கும் சூழலில் அவரை ஒரு கரிஸ்மாட்டிக் லீடர் என்று அவர் கட்சியை சாராத மக்கள் இன்னும் கொண்டாட தயாராகவில்லை. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது என்று அவரே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
2009 ல் தமிழ் தேசியம் என்ற ஒரு தனி அரசியல் பாதையை தமிழக அரசியலில் உருவாக்கிக் கொள்ள நாம் தமிழர் என்ற கட்சியை திரு. சீமான் அவர்கள் துவக்கி வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு சினிமா பின்புலம் இருந்தாலும் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்காத ஒரு இயக்குனராகத்தான் அறியப்பட்டார். அவர் கட்சியை துவங்கிய பிறகு அவரை நோக்கி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் இன்னும் பிற கட்சிகளையும் ஈர்க்காத இளைஞர்கள் அவரை நோக்கி பயணப்பட ஆரம்பித்தார்கள். அவருக்கான ஒரு கணிசமான இளைஞர் பட்டாளம் திரண்டு கொண்டிருந்தது. அதன் பிறகு அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டிலும், கொள்கை நிலைப்பாட்டிலும் இளைஞர் அல்லாத வெகுஜன மக்கள் ஈர்க்கப்படுவதை அவரே தடுத்துக் கொண்டார். அதே அரசியல் நிலைப்பாட்டில் இன்னும் அவர் பின் வாங்காமல் அதே பாணியில் தொடர்ந்து சென்று கொண்டு இருப்பதால் அவர் எல்லோருக்குமான ஒரு கரிஷ்மாட்டிக் லீடராக எமர்ஜாகி வர வாய்ப்பே இல்லை.

செல்வி.ஜெ ஜெயலலிதா அவர்களுக்குப் பிறகு அதிமுகவில் திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், திரு. டிடிவி தினகரன் அவர்களும், திருமதி. சசிகலா அவர்களும் பிரிந்த பிறகு எப்படி ஒரு ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு ஒரு கரிஷ்மாடிக் லீடர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறதோ அதே சூழலும் திமுகவில் உருவானது அந்த சூழலை அரசியல் வித்தகரான அண்ணாவிடம், பெரியாரிடமும் பாடம் பயின்று தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்த திரு. கலைஞர் கருணாநிதி அவர்களின் புதல்வர் இன்றைய முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக என்ற மாபெரும் கட்சியை மிகச் சிறப்பாக வெற்றிகரமாக வழி நடத்திச் சென்று கொண்டிருக்கிறார். அவர் இன்றளவில் தமிழகத்தில் கட்டமைத்த ஒரு மெகா கூட்டணி மிக உறுதியான கூட்டணியாக வலு பெற்று நிற்கின்றது. அந்தக் கூட்டணி சிந்தாமல் சிதறாமல் வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமாடும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

இதில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளைப் பற்றி நாம் பெரிதாக பேசவில்லை. அதற்கு காரணம் இந்த தேசிய கட்சிகள் எல்லாமே தமிழ்நாட்டில் உள்ள ஏதோ ஒரு மாநிலக் கட்சிகளை சார்ந்து தான் இயங்க வேண்டிய சூழல் இருக்கின்றது. அவர்களுக்கென்று தனியான ஒரு லீடர் உருவாவதற்கும், தோன்றுவதற்கும் வாய்ப்புகள் குறைவே என்பதால் அவர்களைப் பற்றி விலாவாரியாக பேசாமல் மாநில கட்சிகளை மட்டுமே நாம் விவாத பொருளாக எடுத்துக் கொண்டுள்ளோம். இன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக, கூட்டணி பலத்துடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு இணையாக எந்த எதிர்க்கட்சிகளும் களத்தில் தென்படவில்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது. இந்தத் தருணத்தில் தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திரைப்பட நடிகர் திரு. விஜய் அவர்கள் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற ஒரு புதுக் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண புறப்பட்டு இருக்கிறார். விஜய் அவர்களின் பலம், பலவீனம் பற்றிய பகுப்பாய்வை நாம் அடுத்த தொடரில் காண்போம்.
பயணம் தொடரும்……
– ஃப்ரெடி டிக்ரூஸ் –