பானி பூரி – சிறுகதை

சிறுகதை

சிறுகதை – சென்னை பெரம்பூரில் முருகன் கோயில் வீதியில் 25 வருடமாக மிட்டாய் கடை நடத்தும் சண்முகம் சில வருடங்களாக வியாபாரம், வருமானம் சரியாக இல்லாததால் வேண்டா வெறுப்பாக கடையை நடத்தி வருகிறார். மனதும் உடலும் சோர்வாகி சண்முகத்தை நோயில் தள்ளியது. பாதி நாட்கள் கடைப்பையனின் கையில் தான் அந்தக் கடையின் சாவி இருக்கும். இப்போதெல்லாம் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற பதார்த்தங்களை யார் தான் விரும்பி வாங்குகிறார்கள். பீட்சா, பர்கர், சவர்மா, பானிபூரி இந்த ஐட்டங்கள்தான் நகர மக்களின் பிடித்தமான மாலை நேர நொறுக்கு தீனியாக மாறிப்போனது.
வியாபாரம் சரியாக இல்லை, கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்ற கவலையோடு சண்முகம் இருக்கையில் மாணிக்சந்த் என்ற வடநாட்டு இளைஞன் வணக்கணா என்றபடி அவனிடம் வந்து நின்றான். ஏறெடுத்து பார்த்த சண்முகம் என்னப்பா வேணும் என்று கேட்க, அண்ணா உங்க கட வாசல்ல சைடுல ஒரு எடம் கொடுத்தீங்கன்னா நா பானி பூரி இஸ்ஸ்டால் போட்டுக்குவேன் என்று பவ்யமாக கேட்டான். ஏப்பா….. நா கட ஓனர் இல்லப்பா, நானே வாடகைக்குதான் இருக்கேன் என்றதும். இல்லனா நா நாலு மணிக்கு கட போட்டு பத்து மணிக்கு எடுத்துருவேன் டெய்லி 500 ரூவா தரேன் என்று சொல்ல, சண்முகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. ஓடாத கடைக்கு 500 ரூபாயா? அதுவும் டெய்லியா! அந்த வார்த்தை வயிற்றில் பாலை வார்த்தது. சண்முகம் சிறிது நேரம் யோசித்து விட்டு சரிப்பா நாளைக்கு வா ஓனர் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்று கூற மாணிக்சந்த் சரிங்கணா என்று விடைபெற்றான். மூன்று மாதமாக வாடகை பாக்கி இருப்பதால் மாணிக்சந்த் சொன்ன வார்த்தை யோசிக்க வைத்தது. ஓனரிடம் ஏதேதோ சொல்லி அனுமதியும் வாங்கி விட்டான். மறுநாள் மாணிக்சந்திடம் பத்தாயிரம் அட்வான்ஸ் வாங்கி கடை நடத்த அனுமதி தந்தான். தற்போதுள்ள சூழ்நிலைக்கு பத்தாயிரம் ரூபாய் அவனுக்கு பத்து லட்சம் போல் இருந்தது.

மாலையில் பானிபூரி கடையில் இளைஞர்களின் கூட்டம் ஈ மொய்ப்பது போல் மொய்க்கத் தொடங்கியது. மாணிக்சந்த் இடது பெரு விரலில் பானிபூரியை ஓட்டை போட்டு, பச்சை வெங்காயம் கலந்த கிழங்கு மசாலாவை சிறிது நிரப்பி சிகப்புக் கலர் துணிக்கட்டிய சில்வர் பானையில் பூரியை உள்ளே விட்டு புளிப்பான தண்ணீரை கையில் ஒழுக ஒழுக அள்ளி ஒரு தொண்ணையில் வைக்க, சாப்பிட வந்தவர்கள் ஏதோ கோயில் பிரசாதம் தருவதைப் போல் கையில் பவ்யமாக வாங்கி அண்ணாந்து வாயில் அல்வா போல போட்டு தண்ணீர் வெளி வராமல் வாய்மூடி அம் அம்மென்று ஆனந்தமாக சாப்பிட்டார்கள். சென்னையின் கோடம்பாக்கத்தில் ஒரு சந்தில் சில வடநாட்டு குடும்பங்கள் மொத்த விற்பனைக்கு பானிப்பூரி செய்து தருகிறார்கள். அங்கு சென்று பார்த்தீர்களென்றால். பானிப்பூரி அல்ல, ப என்ற வார்த்தை சொல்வதற்கே வாயைத் திறக்க மாட்டீர்கள். (சரி அது இருக்கட்டும்) . இதை பார்க்கும் சண்முகத்திற்கு இவன் வாயில் புளிப்புத் தட்டுகிறது. கையை உட்டு அள்ளித் தரும் பானி பூரியை எவ்வளவு ருசித்து சாப்பிடுகிறார்கள் நம் மக்கள் என்று வியந்து பார்க்கிறான். ஒரு பக்கம் பானிபூரி கடை ஜோராக ஓட, மறுபக்கம் முருகனுக்கு நோய் சற்று அதிகமாகிறது. இருமிக் கொண்டே மாணிக்சந்திடம் கடையை நீயே எடுத்துக்கொள். எனக்கு மருந்து செலவுக்கு மேலும் ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடு என்று கேட்க, மாணிக்சந்த் பெரிய மனது படைத்தவனாக 15,000 ஆக தந்தான். சண்முகம் ரொம்ப நன்றிப்பா என்று கூறி சாவியை மாணிக்சந்திடம் ஒப்படைத்துவிட்டு நன்றியோடு விடைபெற்றான்.

ஒரு வருடம் கழித்து சண்முகத்திற்கு நோயெல்லாம் குணமாகி பூரண நலத்துடன் இருக்கிறான். குடும்பத்தை காப்பாற்ற போதிய வருமானம் இல்லை. எல்லா பணமும் வைத்தியத்திற்கே செலவாகிவிட்டது. ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று மீண்டும் அவன் கடை வைத்திருந்த முருகன் கோயில் வீதிக்கு வருகிறான். அவன் மிட்டாய் கடை இருந்த இடம் இப்போது மானிக் சாட் என்ற கடையாக மாறிவிட்டது. கடையில் ஏகப்பட்ட கூட்டம் பானி பூரி, பேல் பூரி, சமோசா, பாவ் பாஜி, வடபாவ் இப்படி ஏகப்பட்ட ஐட்டங்கள். அவன் கடையில் நாலு பேர் வேலை செய்ய பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சண்முகம் மணிச்சந்தை தேடுகிறான் கேஷ் கவுண்டரில் பீடாவை மென்ற படி அடையாளம் தெரியாமல் மாறி இருந்தான்.
சண்முகம் கடைக்குள் நுழைந்ததும் மாணிக்சந்த் அவனைப் பார்த்து என்ன சார், என்ன சாப்டுறீங்க என்று கேட்க, என்ன தெர்லையா என்று சண்முகம் கேட்க மாணிக்சந்த் ஒரு நிமிடம் சண்முகத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு கொண்டான். அண்ணே நீங்ளா வாங்கனே எப்டி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா என்று மறக்காமல் ஞாபகம் வைத்துக் கேட்டதை நினைத்து மகிழ்ச்சியடைந்தான் சண்முகம். தம்பி அதெல்லாம் வேணாம் இப்பதான் சாப்ட்டு வந்தேன். பரவால்ல இந்த வழியா வந்தேன் அப்படியே உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று விசயத்தை சொல்ல முடியாமல் தவித்தான். அப்டியாண்ணா ரொம்ப சந்தோசம் என்று பேசியபடியே சாப்பிட்டுவிட்டு பணம் தரும் வாடிக்கையாளரிடம் காசை வாங்கி வாங்கி கல்லாவில் நிரப்பினான் மாணிக்சந்த்.
ஒரு சின்ன உதவி என்று தயங்கினான் சண்முகம். சொல்லுங்கணே காசு ஏதாவது வேணுமா என்று கேட்க, இல்லப்பா நீ கேட்டதே ரொம்ப சந்தோஷம் அது இல்ல கட வாசல்ல சின்னதா ஒரு எடம் குடுத்தா சின்ன பெட்டிய வச்சு பூக்கட ஒன்னு வெச்சுக்குவேன். முருகன் கோயிலுக்கு போறவங்க வர்றவங்க அப்டியே பூ வாங்கிப்பாங்க, நாலு மணிக்கு போட்டு எட்டு மணிக்கு எடுத்துறுவேன் என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அண்ணே கோச்சுக்காதீங்க அந்த எடத்துல நம்ம ஊரு பையன் ஒருத்தன் பீடா ஸ்டால் போட சொல்லிட்டேன் அவன் நாளைக்கு போட்டுருவான் தப்பா எடுத்துக்காதீங்க காசு வேணா ஏதாவது ஹெல்ப் பண்ணுட்டா என்று கேட்க. சண்முகத்திற்கு சங்கடமாகிவிட்டது. பரவால்லப்பா நான் பாத்துக்குறேன் என்றபடி கிளம்ப
அண்ணே தமிழ்நாட்டுக்கு பொழைக்க வந்தப்ப எனக்கு நீங்க ஹெல்ப் பண்ணீங்க கட்சில ஒங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாம போச்சு அதான் கொஞ்சம் கஷ்ட்டமாருக்கு என்று சொல்லிவிட்டு, ஏய் பையா அந்த பார்சல குடு என்று சொல்லி வட பாவு பார்சலை சண்முகத்திடம் நீட்டுகிறான். சண்முகம் இல்லப்பா பரவால்ல எனக்கு இதெல்லா புடிக்காது. சாப்புட மாட்டேன் நா வர்றேன் என்று சொல்லிவிட்டு முருகன் கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
ஆறு மாதங்களுக்கு பிறகு……
குமரப்பச் செட்டியாரின் மீனாட்சி ஜுவல்லரியில் செய்கூலி இல்லை! சேதாரமில்லை! என்ற போர்டு மாட்டியிருந்தும் அவருக்கு வியாபாரமில்லை. வெற்றிலை மென்றபடி கல்லாவில் அமர்ந்திருந்த செட்டியாரிடம் முகுல் யாதவ் என்ற வடநாட்டு பையன் கடை வாசலில் பானிபூரி கடைப் போட அனுமதி கேட்கிறான் . செட்டியார் ஒரு நாளைக்கு 500 ரூபாய் மாதத்திற்கு 15,000 என்று கணக்கு போட்டுவிட்டு மகிழ்ச்சியாக ஓகே பையா நாளைக்கே போட்டுக்கோ என்று கூறிவிட்டு வெற்றிலையை துப்ப எழுந்திருக்கிறார். அவருடைய வேட்டி அணியில் மாட்டி டர்ரென்று கிழிகிறது. முகில் யாதவ் மகிழ்ச்சியோடு புறப்பட்டான்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
July 23, 2025Every subject is entirely different story
all the best and congrats ,