கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை –

காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து நின்றாள் ருக்மணி கிழவி. அவளுக்கு மீன் வியாபாரம் தான் தொழில். சிறிது தூரத்திலிருந்து பஸ் ஒன்று நேற்று பெய்த மழையில் ஏற்பட்ட பள்ளத்தில் தவழ்ந்து தவழ்ந்து வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றது. கிழவி மீன் கூடையுடன் பஸ்ஸில் ஏற முயல, கிழவியை பார்த்து கண்டக்டர் ஏம்மா, மீன் கூடய வண்டில ஏத்தாத என்று குரல் கொடுக்க. இன்னாபா கூடய ஏத்தாதுன்ற, ரோட்ல கூடய கடாசினு நா மட்டும் வண்டில ஏறி குந்தவா என்று வாதம் பண்ண. தோபாரு கிழவி வண்டில கூடய ஏத்தாதனா ஏத்தாத அவ்ளோதான் என்று கறாராக சொல்ல, கவர்மென்ட் பஸ்ல ஏத்துனா ஒனக்கு இன்னாபா நோவுது. கூடய ஏத்த மாட்டானா பொறம்போக்கு என்று வசைபாட
கண்டக்டர் ஏம்மா பஸ்ஸுக்குள்ள மீன் கூடய ஏத்துனா கவிச்சி நாத்தடிக்காதா இப்பதான் கவர்மெண்ட் புது பஸ் உட்ருக்கு அதுல கொண்டாந்து ஏத்த சொல்ற என்று கராராக பேச, கிழவிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. என்னாயா புதுசா உட்டானுங்கோ. பொம்பளைங்க பஸ்ல போகசொல்ல கவர்மெண்ட் ஃப்ரீயாதான உட்ருக்கு. நீ இன்னா ஏத்த மாட்டேனு வம்பு வலிக்ரே என்று கிழவி எகிர. கண்டக்டர் டிரைவரைப் பார்த்து ஏப்பா நீ பஸ் டோர மூடுப்பா இதுங்களுக்கெல்லா சொன்னா புரியாது என்றபடி விசில் அடிக்க புதிய தாழ்த்தள பேருந்து தன் கதவை சடக்கென்று சாத்திக்கொண்டது. அடித்தட்டு மக்களைக் கண்டால் அதிகார வர்க்கம் எப்போதும் அப்படித்தான் தன் கதவை அறைந்து சாத்தும்.
ருக்மணி கிழவி கண்டக்டரை வசைப்பாடியபடி கூடையை கீழே வைத்துவிட்டு ஷேர் ஆட்டோவுக்கு கை போடுகிறாள். ஒரு ஷேர் ஆட்டோ பிதிங்கி வழிந்தபடி முன்னாடி வரும் மோட்டார் பைக்கை ஓவர் டேக் செய்து ஆயா முன் மோதுவதுபோல் வந்து நின்றது. கிழவி ஒரு அடிகூட அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். ஆட்டோக்காரர் வண்டியிலிருந்து குனிந்து இன்னாமா எங்க போனும் என்று கேட்க. கிழவி காண்டாகி ஏண்டா இன்னா வண்டி ஓட்ற உட்டா ஆளு மேல ஏத்தினுவ போல என்று ஆட்டோக்காரனிடம் வம்பு பேச,
ஷேர் ஆட்டோ டிரைவர் கிழவியை பார்த்து ஏறிக்குந்துமா என்று சொல்ல ருக்மணி பாட்டி வண்டியில் பிதுங்கிக் கொண்டிருக்கும் கூட்டத்தை பார்த்துவிட்டு. எங்க குந்திறது நீயே வண்டில தொத்திகினு வர்ற. இம்மா சனத்த உள்ள அடைச்சு வெச்சிக்கினு கூடையோட வந்து குந்துன்ற, ஏமா சும்மா அட்ஜஸ்ட் பண்ணி ஏறிக்கமா உள்ள தான் எடம் இருக்ல என்று வஞ்சனை இல்லாமல் டிரைவர் பொய் சொல்ல, ஆட்டோ உள்ளேருந்து ஒரு குரல் இன்னாயா இங்க எடம் இருக்கு அட்ஜஸ்ட் பண்ணனுமா ஏத்துனது போதாதா வண்டி எடுப்பா மொதல்ல என்று கடிந்து கொள்ள பின்னாடி உள்ள வாகனங்களின் ஹாரன் சத்தமும் காதைக் கிழிக்க டிரைவர் ஆட்டோவை விசுக் என்று எடுத்து தவ்வித் தவ்வி ஓட்டிச் செல்கிறார்.
ஆட்டோ போன பிறகு பின்னாடியே வேறொரு ஆட்டோ இரண்டு பெண்களை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் வந்து நிற்கிறது. அந்த இரண்டு பெண்களும் மீன் கூடையை காலுக்கு கீழே வைத்தபடி அமர்ந்திருந்தார்கள். கிழவியின் அருகில் வந்து நின்றதும் ஆட்டோவிலிருந்து ஒரு பெண்மணி ருக்மணி கிழவியை பார்த்து ஏக்கா வண்டியில வர்றியா? ஊட்டான்ட உட்டுர்ரேன் என்று குரல் கொடுக்க, கிழவி அந்த பெண்ணை பார்த்து ஏ சரோஜா நீயா, மீனு வாங்கினு வர்ரியா? நா மார்கெட்ல பாக்க சொல்ல உன்ன ஆளேயே காணோம் என்று கேட்க என்னாத்த வர்றது மார்கெட்ல மீனா விக்கிது கொல்ல வெல சொல்றான் தடகால வேறயா ஒரு மீனும் கெடக்கல தம்மாத்துண்டு மீனு வாங்கிக்கினு வர்றோம் என்று சலித்துக் கொள்கிறாள்.
கிழவிய பார்த்து நீ இன்னா வாங்குன என்று கேட்க, நான் இன்னா வாங்குறது ரோட்ல போட்டு விக்க நாலு மீனு. நான் என்னாத்த பெரிய யாவாரமா பண்றேன். ஏதோ வயித்து பொழப்புக்கு நாலு மீனு வித்து பொழைக்கிறேன் என்றதும் சரோஜா சரி சொம்மா பெணாத்தாத வண்டில வந்து குந்து அல்லாரும் வயித்து பொழப்புக்குதான் ஓடிக்கினு இருக்கோம் என்றதும் ருக்மணி கிழவி நீ இன்னாத்துக்கு கோவிச்சிக்கிற என்று சொல்லிக் கொண்டே கீழே இருக்கும் கூடையை தூக்கப்போக கூடைக்கு பக்கத்தில் ஒரு நாய் வந்து மோப்பம் பிடித்தபடி நிற்கிறது. நாயை பார்த்த ருக்மணி கிழவி இன்னா சும்மா மோந்துகினு இருக்க கொஞ்சம் விட்டா கூடையில இருக்கறத லவட்டிகினு போயிடுவ போல என்று சொல்லி கூடையில் கையை விட்டு ஒரு மீனை எடுத்து நாய்க்கு போடுகிறாள். பின்னாடி ஹாரன் சத்தம் அதிகமாக ஒலிக்க சரோஜா கிழவியிடம் சட்டுனு வந்து ஏறுக்கா வண்டி எம்மா நேரம் நிக்குது நாய் கிட்ட கூட சண்ட வலிச்சிகினு இருக்க என்று சலித்துக் கொண்டாள். ருக்மணி கிழவி கூடையை தூக்கிக் கொண்டு வாயில் முனகியபடி வண்டியில் ஏறுகிறாள். சரோஜா பக்கத்தில் உள்ள பெண்ணிடம் சும்மா நாளும் வாய் நிக்கிதா பாத்தியா கிழவிக்கு என்று சொல்ல. இருவரும் சிரித்துக் கொள்கிறார்கள்.

ஆட்டோ கிளம்புகிறது. டிரைவர் வண்டி ஓட்டியபடியே பின்னாடி திருப்பி பார்த்து ஏம்மா வயசு பொண்ண இப்படி கலாய்க்கிறீங்க என்று கிண்டலடிக்க, ருக்மணி கிழவிக்கு கோபம் வெடுக்கென்று வந்தது. யார பாத்து வயசு பொண்ணுன்ற நா கொமரிக்கெல்லாம் கொமரி நீ மூடிக்கினு ரோட்டபாத்து வண்டிய ஓட்டு என்று ஒருமையில் திட்ட பதிலுக்கு டிரைவர், அக்கா சொன்னாப்ல உனக்கு வாய் ஜாஸ்தி தான் என்று மறுபடியும் கிழவியிடம் வம்படிக்க . இந்த ஊர்ல வாய் இல்லனா நாய் தூக்கிகினு பூடும் என்று பதிலடி தந்தாள். சரோஜா கிழவியை சாந்தப்படுத்த அப்படியே ரூட்டை மாற்றி ஏக்கா நேத்து ஒன்ன பாக்க ஊட்டான்ட போலிஸ் வந்துச்சினு மேரியக்கா சொன்னிச்சி இன்னா பிச்சின. யார் கைலயும் வம்பு வெச்சுக்கினியா என்று ஆர்வமாக கேட்க., மேரிக்கு இன்னா தெரியும் உன்னான்ட வந்து சொல்றதுக்கு. எவன் எங்க வர்றான். யார் ஊட்டான்ட இன்னா நடக்குதுனு பாக்கிறதே சோலியா வச்சிகினு திரியிறா என்று மேரியையும் வாற. தெரியாம உன்னான்ட கேட்டேன் ஆள வுடுக்கா என்று கையெடுத்து கும்பிட்டாள் சரோஜா.
கிழவிக்கு சிறியதாக கண்கள் களங்க புடவை முந்தானையில் கண்ணை துடைத்து விட்டு என் புருஷன் செத்து 30 வருஷமாச்சு தோ ஒன்டியாதான் பொழப்ப ஓட்டிக்கினு இருக்கேன் எனக்கு இன்னா புள்ளயா குட்டியா என்ன வெச்சு காவந்தம் பண்ண. எவன் கைலயும் வம்பு வெச்சிக்காம நாலு மீனு வித்து யாவாரம் பண்ணி பொழப்ப ஓட்டிகினு இருக்கேன் என்று புலம்புகிறாள். நீ இன்னாக்கா ஒரு பேச்சிக்கு சொன்னா கண்ணக் கசக்குற என்ற சரோஜா. இல்ல சரோஜா உன்னான்ட எனக்கு இன்னா கோவம் இந்தா என்று இடுப்பிலிருந்து ஒரு பழைய ஸ்மார்ட்போனை உருவி எடுத்து இந்த ஒரு போன் தான் எனக்கு ஒத்தாசையா இருக்கு என்று காட்டுகிறாள். அதைப் பார்த்த டிரைவர் பாத்தியாக்கா கிழவி ஸ்மார்ட் போன்லாம் வெச்சுனுருக்கு பலே ஆளு தான் என்று சொல்ல ஆமாண்டா போன் வச்சினுக்கிறது அவ்ளோ பெரிய சமாச்சாரமா.
இந்த காலத்துல எல்லா நாய்க்கிட்டயும் தான் போனுருக்கு. பொறந்த பச்ச புள்ள கூட இந்த போன வெச்சி தள்ளி தள்ளி விளையாடிக்கினுருக்கு என்று பதிலடித்தர மற்றொரு பெண் ஆனந்தி பாத்தியாக்கா நம்மள விட நல்ல போனா கெழவி வெச்சினுருக்கு என்றதும் இவையவடி நல்ல போனு கெட்ட போனுனு நான் என்ன துட்டு குடுத்தா வாங்குனே ஒரு வீடியோ எடுக்குற பையன் வந்தான் இதோ காசிமேடு மார்க்கெட்லதான் எல்லாத்தையும் வீடியோ புடிச்சுகினு இருந்தான் என்னப்பா எல்லாத்தையும் போட்டோ புடிச்சுகினு இருக்க அப்படின்னு கேட்டேன் அது வந்து ஆயா பிளாக் பன்றேன்னான் நமக்கு விலாங்கு மீனு தான் தெரியும் அது இன்னாடா பிளாக்ன்ற சரி இந்தா என்னயும் பிடிச்சுக்கோனேன் என்னய படம் புடிச்சிட்டு இன்னா ஆயா ஒனக்கு வேணுனு கேட்டான். எனக்கு என்னா வேணும் எது வேணா குடுப்பா அப்படின்னே. சரி இந்தா ஆயா அப்புடினு இந்த போன கைல குடுத்தான். அதான் இந்த போனு என்று வரலாறை ஒப்புவித்தால் கிழவி.
சரோஜா பக்கத்தில் இருக்கும் ஆனந்தியை பார்த்து நம்மளான்டா எவணா வந்து இந்தா போனு வெச்சிக்கோனு சொல்றானுங்களா பாத்தியா என்று குத்தலாக பேச ஊட்டாண்ட குந்திகினு இரு வந்து தருவான் என்று கிழவி பதிலடி கொடுக்க. சரிக்கா அந்த போலீஸ் மேட்ர உட்டியே என்று விடுபட்ட விஷயத்தை கிளற அது இன்னாத்துக்கு ஒனக்கு சும்மா நோண்டி நோண்டி கேட்டுகினு இருக்க இல்லகா சும்மா தெரிஞ்சுக்கலானு கேட்டா பிகு பண்ற, அந்தா வெளிநாட்டுக்கு போறோம்ல அதான் ஏரோபிளேன்ல ஏறி என்று கிழவி கேட்க, ஆமா தெரியும் சொல்லுக்கா என்று ஆர்வமாகிறாள் சரோஜா. அந்த பிளேன்ல போறதுக்கு ரேசன் அட்ட மாரி அதுக்கும் ஒரு அட்ட வேணுமாம்ள ஆமா பாஸ்போட்டு என்று சொல்ல, ஆங் அதுக்கு தான் எழுதி குடுத்தேன் அத்த விசாரிக்கனு போலீஸ் வந்தாப்ல. ஒனக்கு இன்னாத்துக்கு பாஸ்போர்ட்டு என்று அதிர்ச்சியாக சரோஜா கேட்க இன்னாத்துக்கா அப்பால நான் ஏரோபிளேன்ல போறதுக்கு வேணாமா என்று சொல்ல எக்கோ உன்னை எவன் கூப்பிட்டான் நீ போறதுக்கு என்று சரோஜா கேட்க
இதோ இந்த ஆசையெல்லாம் இந்த போனால் தான் வந்துச்சு என்று கிழவி குழப்ப என்னக்கா சொல்ற என்று எல்லோரும் ஆர்வமாய் கேட்க, போன்ல எப்படி படம் பாக்கணும்ன்னு ஊட்டாண்டா இருக்குற புள்ளைங்க சொல்லிக் குடுத்துச்சு அத்த நானும் சும்மா இருக்கசொல்ல பாக்க ஆரம்பிச்சன் எல்லோரும் எல்லா நாட்டயும் புல்லா சுத்தி சுத்தி காட்டறானுங்கோ நாமலுந்தான் இருக்கோம் ஒருவேளை சோத்துக்கு நாறிக்கிட்டு ஊர்ல அவன் அவன் என்னமா வாழ்ந்துகினுருக்கான் என்றதும். இப்ப பொலம்பி இன்னா பண்றது என்று டிரைவர் நக்கலாக சொல்ல அத்த சொல்லு நாமெல்லாம் பொலம்பி தான் சாவணும் என்னடா வாழ்க்கை வாழ்ந்துகினுருக்கோம் நமக்கே ஒண்ட கூட எடயில்ல, என்ன ஏதுன்னு பாக்க நாதியில்ல
நமக்கு வெளிஊர சுத்தி பார்க்க ஆச இருக்கு எவனா ஒரு மவராசா ஃப்ரீயா போன குடுத்தான் அத்தமாரி வேற எவனாவது நம்மள வெளியூருக்கு இட்டுக்குனு போ மாட்டானா என்ன என்று நம்பிக்கையாக சொல்ல டிரைவர் கிழவிய பார்த்து இதுக்கு வெவரத்த பாத்தியாக்கா என்றதும். அதுக்காகதான் இப்ப பாஸ்போர்ட் வாங்கி வச்சுக்கினியா என்று சரோஜா கேக்க , பின்ன திடீர்னு வந்து கூப்டசொல்ல போக வேணாமா என்றதும் டிரைவர் கிழவிய பார்த்து நீ ஒரு நாள் போனாலும் போயிடுவ என்று ஆமோதிக்க சரோஜா கிழவிய பார்த்து நமக்கு தான் அந்த சூதானா இல்ல நீ இந்த வயசுலயும் பொழச்சுப்பக்கா என்று சொல்லி முடிக்க, கிழவி இறங்குகிற வீடு வருகிறது. எக்கா ஓன் வூடு வந்துருச்சு எறங்கிக்கோ என்று சரோஜா செல்ல, கிழவி மீன் கூடையுடன் கீழே இறங்குகிறாள். கிழவி ஆட்டோக்காரனை பார்த்து இரண்டு பொம்பளயும் தள்ளிகினு போயிடாமா ஊட்டான்ட போய் பத்திரமா எறக்கிவுடு என்று டிரைவரை நக்கலாக கலாய்க்கிறாள். ஆமா இத்த ஏன் பொஞ்சாதி பாத்தா செவுட்லே ரெண்டு உடு உடும் என்று டிரைவர் சொல்ல சரோஜா யோவ் ஓன் மூஞ்சிக்கு மூணு பேர் கேக்குதா என் புருஷனுக்கு தெரிஞ்சா உன்ன கடல்ல கட்டி எறக்கிடுவான் வாய பாக்காம வண்டிய எடுயா என்றதும் டிரைவர் கப்சிப் என்று வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டிச் செல்கிறான். கிழவி தன்னம்பிக்கையோடு மீன் வியாபாரம் செய்ய கிளம்பி விட்டாள்.
– ஃப்ரெடி டிக்ரூஸ் _
Chandran t
July 17, 2025வாழ்த்துகள்