பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 3

திரில்லர் தொடர் – பெங்களூரில் ஆக்சிடென்டில் இறந்து போன ரமேஷ் அச்சு அசலாக பஞ்சாபகேசனை உரித்து வைத்தது போல் இருப்பான். பஞ்சாபகேசனுக்கு உடன்பிறந்தோர் யாரும் இல்லை. ரமேஷ் அவனின் சின்னம்மா மகன். இருவரையும் பார்ப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று தான் நம்புவார்கள். இருவருக்கும் முகச்சாடை ஒன்றாக இருந்தாலும் ரமேஷ் தாடி மீசையுடன் இருப்பான். பஞ்சாபகேசன் மீசை தாடி இல்லாமல் இருப்பான். தில்லுமுல்லு படத்தில் மீசை இருந்தால் சந்திரன் மீசை இல்லனா இந்திரன் என்று வருமே அந்த வித்தியாசம் தான் ஏறக்குறைய இருவருக்குமே. ரவிக்குமார் வரைந்த ஓவியத்தில் பஞ்சாபகேசன் தாடி மீசையுடன் இருப்பது போல் வரையப்பட்டது தான் இந்த சம்பவம் நடக்க காரணம் என்று நினைத்துக் கொண்டாலும் அடுத்தடுத்து நிகழும் சம்பவத்தை ஒப்பிட்டு பார்த்தால் தான் இங்கு நடப்பவை உண்மையானதா என்று உறுதியாக தீர்மானிக்க முடியும். இது ஒரு மர்மமான திகிலூட்டும் உண்மை சம்பவமாக இப்போது வரை ரவிக்குமாருக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.

நடந்ததை பற்றி நண்பன் கேசனிடம் சொன்னால் என்ன நினைப்பான். அதுவும் தன் தம்பியை இழந்து நிற்கும் இந்த சூழ்நிலையில் அது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும். ஒரு வேலை உண்மை என்று நம்பும் பட்சத்தில் என் மீது அல்லவா பழி வந்து சேரும். இதை மூடி மறைத்து விடலாமா என்று கூட யோசித்தான். ஆனால் இதனால் வரை பசி பட்டினியாய் இருந்த அவன் குடும்பம் இன்று ஓரளவு கௌரவமாக வாழ உதவி செய்த நண்பனிடம் உண்மையை சொல்லி விடுவதே நியாயம் என்று நினைக்கிறான். இஸ்ரேலுக்கும் ஈராக்கும் நடக்கும் போர் போல அவன் மனதிற்குள் பெறும் யுத்தமே நடந்து கொண்டிருந்தது.
பஞ்சாபகேசன் ரவியை தட்டி எழுப்பினான். நீ என்னடா இடிஞ்சு போய் உக்காந்துருக்க. சிந்துன காப்பிய தொடச்சிடலாம் என்று ஒரு பழைய துணியை எடுத்து தரையை துடைக்க ஆரம்பித்தான். ரவிக்குமார் குடுடா நான் தொடக்கிறேன் என்று துணியைப் பிடுங்கி துடைக்க ஆரம்பித்தான். அதை பார்த்த லட்சுமி அண்ணே விடுங்கண்ணே நான் பாத்துக்கிறேன் முதல்ல நீங்க எந்திரிச்சு சோபால போய் உக்காருங்க என்று துணியை ரவிக்குமாரிடமிருந்து பிடுங்கி கொண்டாள். ரவி சோபாவில் சென்று அமர்ந்தான்.

பஞ்சாபகேசன் ரவியை பார்த்து டேய் நீ ஃப்ரீயா இருக்கியா என்று கேட்க எதுக்குடா கேக்குற இல்ல ரெண்டு பேரும் பெங்களூர் போக ஒரு மாதிரியா இருக்கு நீயும் கூட துணைக்கு வந்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ரெண்டு நாள்ள திரும்பி வந்துடுலாம் என்று கேட்கிறான். ரவிக்குமாருக்கு தன்னால் தான் இந்த கொடுமை நடந்துள்ளது நானே எப்படி நேரில் சென்று பார்ப்பது என்று பெரும் குழப்பம். டக்கென்று கேசன் கேட்டதும் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை இதற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியாமல் விழிப்புதுங்கி நின்று கொண்டிருந்தான்.
டேய் என்னடா யோசிக்கிற உனக்கு வேற ஏதாவது வேலை இருக்கா என்று கூறி விட்டு சரி நீ என்ன எதுக்கு பாக்க வந்த, அங்க எதுக்கு அழுதுகிட்டு நின்ன அத சொல்லு மொதல்ல என்று பழசை கிளற ஆரம்பித்தான். ஏன் பார்க்க வந்தோம் என்பதை சொல்ல ஆரம்பித்தான் ரவி. நான் எதுக்கு வந்தேன்னா என்கிட்ட ஒரு வித்தியாசமான பேனா வீட்ல இருக்கு. ஒரு சைடுல பேனா இன்னொரு சைடுல பிரஸ் என்றதும் சரிடா ஆர்டிஸ்ட்னா பேனா பிரஷ் இருக்கிறது பெரிய விஷயமா அதை எதுக்குடா சொல்ற எதுக்கு வந்தேன்னு சொல்லு. அத பத்தி தான் சொல்ல வந்தேன். வித்தியாசமான பேனா என்று மறுபடியும் அதையே திரும்ப சொல்ல, பாருடா மறுபடியும் பேனாவா என்று சலித்துக் கொண்டான் கேசன்.
கேசா ஒரு நிமிஷம் பொறுமையா கேளு அப்பதான் நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும் என்று கெஞ்சாத குறையாக முறையிட்டான். சரி சொல்லுடா அந்த வித்தியாசமான பேனா அதுக்கப்புறம் என்று எடுத்துக் கொடுத்தான். கரெக்ட் அந்த பேனா வச்சு சாரி பேனாவுக்கு பின்னாடி பிரஷ் வச்சு என்று தடுமாறினான். என்னடா போட்டு கொழப்புற பேனாவா? பிரஷா? இல்லடா பிரஸ்தான் சரி சொல்லு அந்த பிரஷ்ஷ வெச்சு வரைஞ்சா எல்லாம் அப்படியே உண்மையா நடக்குது. சரி நடக்கட்டும். அதாண்டா சொல்ல வந்தேன். கேசனுக்கு மண்டை சூடானது எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று ரவிக்குமார் குழம்பி தவித்தான்.
மறுபடியும் பிரஷ்னு ஆரம்பிச்சா என்ன அடிச்சே கொன்னுடுவான். ஏற்கனவே தம்பி இறந்த சோகத்துல இருக்கான். அவன கோபப்பட வைக்க வேண்டாம் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு போயிடலாம் என்று டக்கென்று விஷயத்தை சொல்ல ஆரம்பித்தான். உன் தம்பி இறந்ததுக்கு நான் தான் என்று சொல்லும்போது லட்சுமி ஏங்க டிரஸ் எல்லாம் எடுத்தாச்சி சீக்கிரம் புறப்படுங்க என்று இடைமறித்தாள். சட்டுன்னு பேச்சை நிப்பாட்டிக் கொண்டான் ரவிக்குமார். சரிடா நீயும் என் கூட வா மூணு பேரும் போலாம் என்று அடுத்த விஷயத்திற்கு தாவி போனான் கேசன். எனக்கு போட்டுக்க துணி வேணும் போற வழியில வீட்டில எடுத்துட்டு போலாம் என்றதும் அதுவும் சரிதான் சரி கார்ல ஏறிக்கோ என்று வேகமாய் மூவரும் புறப்பட்டார்கள். கார் கிளம்பி ரவிக்குமார் வீட்டிற்கு வந்தடைந்தது.

ரவிக்குமார் வேகமாக காரை விட்டு இறங்கி வீட்டின் மாடிப்படியில் ஏறிச் சென்றான். ரவிக்குமாரின் வீடு முதல் மாடியில் உள்ளது கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளர் குடியிருக்கிறார். அது கொஞ்சம் பழைய வீடு தான் இருந்தாலும் தொந்தரவு இல்லாத வீடு. உரிமையாளர்கள் கணவன் மனைவி இருவரும் அரசாங்க ஊழியராக இருந்து ரிட்டையர்டு ஆகி இருந்தனர். இரண்டு பிள்ளைகள் ஒரு பையன் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒரு மகள் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியர் இருவரும் கல்யாணம் ஆகி ஆளுக்கு ஒரு பிள்ளைகளை பெற்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். அப்பா அம்மா இருவரும் மூன்று மாதம் அமெரிக்காவிலும் மூன்று மாதம் லண்டனிலும், மீதி ஆறு மாதம் இந்த வீட்டிலும் காலத்தை கழிப்பார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்ள ஒரு நம்பிக்கையான ஆட்கள் வேண்டும் என்பதால் வாடகை முன்ன பின்ன கொடுத்தாலும் ரவிக்குமார் குடும்பத்தை தங்களுக்கு பாதுகாப்புக்காக அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டார்கள். மற்ற வேலைக்கு வேலையாட்களை வைத்துக் கொள்வார்கள். இவைதான் அவர்களின் வாழ்க்கை.
ரவிக்குமார் வேகமாக மேலே ஏறி வீட்டிற்கு செல்கிறான். மனைவி ஏன்ங்க எங்க போனீங்க என்று கேட்க, அவசரமாக பெங்களூர் போறேன் போகும்போதே பிரச்சனை பண்ணாத கேசன் வீட்ல பிரச்சனை போயிட்டு வந்து சொல்றேன். டைம் இல்ல அவன் வைப்போட கீழ கார்ல தான் வெயிட் பண்றான் என்று பரபரப்பாக பேசியபடி ஒரு பேக்கில் துணியை எடுத்து வைக்கிறான். மரகதம் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறாள். காரில் கேசன் மனைவி லட்சுமி அமர்ந்திருக்கிறாள். கேசன் காரை விட்டு வெளியே நின்று தம் அடித்து கொண்டிருந்தான். சரி எப்ப வருவீங்க….இரண்டு நாள்ல வந்துடுவேன். அரிசி தீர்ந்துடுச்சு வாங்கி கொடுத்துட்டு போங்க என்று சொல்ல இப்ப அரிசி வாங்குற நேரமா கீழ ஹவுஸ் ஓனர் கிட்ட வாங்கிக்க இரண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நான் வந்ததும் திருப்பி கொடுத்ர்லாம் என்று பேசிக்கொண்டே வெளியேறினான்.
இப்படியே போங்க சோறு தண்ணி இல்லாம நான் சாகுறேன் என்று விசும்பினாள் மரகதம். அவள் புலம்புவதை காதில் வாங்காமல் படியை விட்டு கீழே இறங்கி வேகமாக வெளியேறினான்.
டேபிளில் இருந்த பேப்பர் காற்றுக்கு சலசலப்புடன் பறக்கத் தொடங்கியது. மரகதம் கண்ணீருடன் மேலே தொங்கும் ஃபேனை பார்த்தாள்.
கடகடவென்று டேபிளை இழுத்து போட்டு ஃபேனில் புடவையை மாட்டி கழுத்தில் இருக்கி அப்படியே தூக்கில் தொங்கினாள்.
பேப்பரில் மரகதம் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.
ரவிக்குமார் நடக்கப்போகும் நிகழ்வை பற்றி ஏதும் அறியாமல் காரில் கணத்த இதயத்துடன் போய்க் கொண்டிருந்தான்.
மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம். . . . .
அன்புள்ளம் கொண்ட அறிவார்ந்த வாசகர்களாகிய உங்கள் பேராதரவுக்கு நன்றிகள். ஒரு சிறிய வேண்டுகோள் இந்த கதையை பற்றி தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த கதை தங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு எங்களின் பயணத்திற்கு ஒரு ஏணிப்படியாக அமையட்டும்.
நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –
Chandran t
August 13, 2025Very interesting when next episode?