கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 5

ரவிக்குமார் மீண்டும் இரண்டு முறை மரகதத்திற்கு தொடர்பு கொள்ள   முயற்சிக்கிறான். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போனை கேசனிடம் திருப்பித் தருகிறான். போன் கட்டாயிடுச்சு அதுக்கப்புறம் சுவிட்ச் ஆஃப் அப்டின்னு வருது ஏன்னு தெரியல என்று கேசனிடம் பதிலளித்தான் ரவிக்குமார். சரிடா ஓன் ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் போட்டு மேலே கொண்டு போய் குடுக்க சொல்லு என்று வழி சொன்னான். சேச்சே…பாவம் அவங்க கொஞ்சம் வயசானவங்க எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு விடு பாத்துக்கலாம் கொஞ்ச நேரம் கழிச்சு திரும்ப அடிச்சு பேசிக்கலாம் என்று சமாதானம் சொன்னான். உனக்கு ஓகே நா அது மாதிரி பண்ணிக்கோ, டீ ஏதாவது சாப்டுறியா ரொம்ப டல்லா இருக்க என்று ரவிக்குமாரை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சித்தான். அவன் மறுபடியும் ஏதாவது யோசனைக்கு போய்ட்டா அடுத்த அஞ்சு வெரல் நெகமும் காருக்குள்ளதான் கெடக்கும். அப்புறம் லட்சுமிய சமாளிக்கிறது பெரியபாடு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ஆமாண்டா எனக்கும் ஒரு மாதிரி டீ சாப்பிடணும் போல இருக்கு ஏதாவது ஒரு கடையில் நிறுத்து. சரிடா ஹைவேஸ்ல  ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு அங்க டயருக்கு ஏர் செக் பண்ணிட்டு பக்கத்துல உள்ள காபி ஷாப்ல சாப்பிடலாம். அங்க பில்டர் காபி ரொம்ப சூப்பரா இருக்கும் என்றான். சரி அங்கயே நிப்பாட்டு என்றபடி  இதுதான் நல்ல சந்தர்ப்பம் பேனா பத்தி  கேசன்கிட்ட சொல்லிர்லாம். அவன் எப்படி நெனைச்சுக்கிட்டாலும் பரவால்ல இதுக்கு மேல மறைச்சா வேலைக்காகாது என்று முடிவாய் தீர்மானித்துக் கொண்டான்.

ரவிக்குமாரின் வீட்டில் உள்ள சேரில் ஹவுஸ் ஓனர் புண்ணியக்கோடியும் சுந்தரியம்மாளும் இறுக்கமாக அமர்ந்திருந்தார்கள். ஹாலில் தரையில் சீலிங் ஃபேன் அறுந்து விழுந்து கிடக்கிறது. றெக்கைகள் நெளிந்து கிடக்கின்றன. மரகதம் அந்த இடத்தில் இல்லை. பாத்ரூம் கதவு திறக்கப்பட கழுவிய முகத்தை துடைத்தபடி வெளியே வந்தாள். ஓனர் எதிரே உள்ள பெஞ்சில் வந்து அமர்ந்தாள். குனிந்த தலை நிமிரவில்லை. ஒரு தப்பான முடிவு எடுத்து விட்டோம். எப்படி நியாயப்படுத்த முடியும் என்று அமைதியாக இருந்தாள். பேச்சை தொடங்கினார் சுந்தரி அம்மாள். உன் வீட்டுக்காரர் போன் வரலையா என்றதும், இல்லைங்க அவர்தான் வேற போன்ல இருந்து பேசுனார். அதுக்குள்ள சார்ஜ் போயிடுச்சு. இப்ப சார்ஜ் போட்ருக்கேன் என்று பதில் சொன்னாள்.

உத்ரம் ரொம்ப பழசு அதான் கொக்கி புடுங்கிட்டு வந்துருச்சு கீழே விழுந்த சத்தம் கேட்டு என்ன ஆச்சுன்னு பதறிப் போய் மேல வந்தா நீ இப்படி ஒரு காரியம் பண்ணி வெச்சிருக்கே எங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க ஓடி வருவாங்கனு நெனைச்சுதான் உங்கள மேல குடி வெச்சோம். ஆனா நீங்க எங்களுக்கு உபத்திரமா மாறிடுவீங்க போல என்று ஆதங்கப்பட்டார் புண்ணியகோடி. குடும்பம்னா பிரச்சன இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லோரும் பிரச்சனைக்கு பயந்து தூக்குல தொங்க முடியுமா என்று குறைபாட்டாள் சுந்தரி அம்மாள். நான் பதறிப் போய் படி ஏறி வந்ததில்ல எனக்கு இப்ப  முட்டி வலி ஜாஸ்தியாயிடுச்சு. சரி நாங்க கீழ போறோம் ஓன் வூட்டுக்காரர் போன் வந்தா விஷயத்த சொல்லி ஒடனே பொறப்ட்டு வர சொல்லு. பொண்டாட்டிக்கு சோறு போட வக்கில்ல, ஃபிரண்ட்ஸோட பெங்களூர் போறானா வரட்டும் வந்ததும் ரெண்டு வாங்கு  வாங்குறேன்  என்று கடிந்து கொண்டே இருவரும் கீழே இறங்கி சென்றார்கள்.

கார் பெட்ரோல் பங்கை சென்றடைந்தது. லட்சுமியும் ரவிக்குமாரும் இறங்கி கொள்கிறார்கள். கேசன் நான்கு டயர்களிலும் போதுமான காற்றை நிரப்பி கொண்டான்.  பங்கை ஒட்டி அமைந்த காபி ஷாப் பார்க்கிங்கில் காரை நிறுத்துகிறான். கேசன் இருவரையும் காபி சாப்பிட அழைக்கிறான். கேசனிடம் தனியாக பேனா பற்றி சொல்லி விட வேண்டும் என்று  சந்தர்ப்பத்தை தேடினான் ரவிக்குமார்.   நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க எனக்கு வேணாம் என்றாள் லட்சுமி. ரவிக்குமாருக்கு அப்பாடா என்று  இருந்தது. லாஸ்ட் டைம் சாப்ட்டப்ப ஒனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்ன அதனாலதான் இங்க வந்து நிறுத்தினேன். எனக்கு காப்பி சாப்டுற மூடு இல்ல நான் கார்லயே வெயிட் பண்றேன். நீங்க சாப்ட்டு வாங்க என்று ஒதுங்கிக் கொண்டாள். சரிமா நீ கார்ல வெயிட் பண்ணு  என்று கூறிவிட்டு  இருவரும் காபி ஷாப்பிற்குள் நுழைகிறார்கள்.

இரண்டு பில்டர் காபி ஆர்டர் செய்யப்படுகிறது. ரவிக்குமார் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. பேச்சை அவனாகவே துவங்க ஆரம்பித்தான். கேசா இப்ப நா சொல்லப் போறத கொஞ்சம் பொறுமையா கேளு. நான் முழுசா சொல்லி முடிச்சிடுறேன் அதுக்கப்புறம் ஒனக்கு என்ன தோணுதோ அத சொல்லு என்றான். சரிடா சொல்லு என்று ஆமோதித்தான் கேசன். நா ஏற்கனவே ஓன் வீட்டுல இந்த விஷயத்த சொல்லணும்னு நெனைச்சேன் ஆனா அது முடியாம போயிடுச்சு. நான் வரைஞ்ச டிராயிங்ஸ்ல ஒரு சில டிராயிகங்ஸ் மட்டும்  ஒரு வித்தியாசமான பிரஸ்ல  வரஞ்சேன். ஒரு சைடுல பேனா இருக்கும் இன்னொரு சைடுல  பிரஷ் இருக்கும். அந்த பிரஸ்ல வரஞ்ச  படங்கள மாதிரி நெஜமாவே நடக்க ஆரம்பிச்சுருச்சு. அதுல என்ன ஒரு பிரச்சனனா. நடக்கிற எல்லா சம்பவமும் விபத்தா தான் நடக்குது

போன வாரம் நீ உன்ன படம் வரஞ்சித் தர சொல்லிருந்த அந்த பிரஸ்ல தான் ஓன் படத்த வரஞ்சேன். உன்ன யங்கா காட்டணும்னு மீச தாடிலாம் வெச்சு வரஞ்சிருந்தேன். இந்த பிரஸ்ல வரஞ்சதுக்கு அப்புறம் உனக்கு ஏதாவது ஆயிடும்னு தெரிஞ்சதும் பதறி அடிச்சு ஓடி வந்தேன். ஆனா  ஒனக்கு எதுவும் ஆகல, ஒருவேள நாந்தான் இத தப்பா புரிஞ்சுகிட்டேன் போலன்னு நெனச்சேன்.  ஓன் வீட்டுக்கு வந்தப்ப  உன் தம்பி ஆக்சிடெண்ட்ல இறந்த விஷயம் தெரிஞ்சதும்  எனக்கு திரும்பவும் பயம் வந்துருச்சு. நா வரைஞ்ச  படமும்  உன் தம்பியோட படமும் ஒரே முக சாடையில் இருக்கிறத பாத்து  எனக்கு என்னமோ இது உண்மையா தான் நடக்குதுனு தோணுச்சு. சரி  நடந்த விஷயத்த உங்கிட்ட சொல்லனும்னு ட்ரை பண்ணேன். ஆனா நீ பெங்களூர் கூப்டதால என்னால மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியல.  இப்பதான் சந்தர்ப்பம் கெடச்சது. சரி நா உன்கிட்ட நடந்தத சொல்லிட்டேன் இதுக்கு மேல  என்ன நினைக்கிறேனு நீ தான் சொல்லணும் என்று ஒரு மூச்சாய் சொல்லி முடித்தான்.

கேசன் அமைதியாக இருந்தான். ரவிக்குமாருக்கு குழப்பமாக இருந்தது. என்னடா நீ எதுவும் சொல்லல உனக்கு நான் சொல்றதில நம்பிக்கை இல்லையா என்று தயக்கத்துடன் கேட்டான். அப்போது ஆர்டர் செய்த காபி டேபிளில் வைக்கப்பட்டது. சரிடா நீ காபியை சாப்டுட்டு காபி எப்டினு சொல்லு என்று கேசன் சாதாரணமாக காபியை பற்றி கேட்கிறான்.  ஒருவேளை நாம சொல்றத கேசன் நம்பலப் போல சரி நாம சொல்றதை சொல்லிட்டோம் அத நம்புனாலும் சரி நம்பாட்டியும் சரி என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.

இருவரும் காபி குடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். நல்லா இருக்கா என்று கேட்டான். அதற்கு ரவிக்குமார் நீ சொன்ன மாறி காபி நல்லா இருக்குடா. நான் காஃபிய கேக்கல நீ செஞ்சது நல்லா இருக்கான்னு கேட்டேன் என்று பீடிகையோடு கேட்டான். என்னடா சொல்ற  என்று கேட்க. ஒனக்கு எவ்ளோ  ஹெல்ப் பண்ணிருக்கேன் எனக்கு நீ குடுக்குற பதில் மரியாத இதுதானா? அந்த பேனாவை கொண்டு வந்து காமிச்சு இதனால தான் நடந்துச்சுனு முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல. நீ பண்ண கிறுக்குத்தனத்தால ஒரு உயிர் போயிருச்சு  என்று கோபமாக தோளை புடித்து உழுக்கினான். ரவிக்குமார் நொறுங்கி விட்டான். ஏன்டா என்ன இப்படி தப்பா நெனைக்கிற. இதெல்லாம் பொய்னு தான் இப்ப வரைக்கும் நம்புறேன். வேற வழி தெரியல குற்ற உணர்ச்சியால தான் உன்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கலாம்னு முடிவு பண்ணேன். என்ன மன்னிச்சிடுறா  என்று கண்ணீர் வழிய மன்னிப்பு கேட்டான்.

சரி விடு நீ மொதல்ல மரகதத்துக்கு  போன போடு. அந்த பேனாவை பத்திரமா எடுத்து வெக்க சொல்லு. வேற யாராவது அதை வெச்சு வரைஞ்சிட்டா   மறுபடியும் அசம்பாவிதம் ஏதாவது நடந்துட போகுது.  என்று தன்னுடைய போனை எடுத்து ரவிக்குமாரிடம் நீட்டினான். ரவிக்குமார் கண்களை துடைத்து விட்டு போனை  வாங்கினான். அப்போது போனில் மரகதமே அழைத்தாள்.  போனை ஆன் பண்ணியதும் மரகதம் அழ ஆரம்பித்தாள்.  என்னாச்சி, அழாத மரகதம்  என்று அவளை அமைதி படுத்தினான். அவள் நடந்த விஷயத்தை எல்லாம்  அழுதபடி சொல்லி முடித்தாள்.  என்ன காரியம் பண்ணி வச்சிருக்க, சரி உனக்கு ஒன்னும் ஆகலல்ல நான் இப்பவே கிளம்பி வரேன் நீ கவலைப்படாத இனிமே நான் வேலைக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்றதும் மரகதத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை. இப்பவாவது மனசு மாறினீங்களே உங்களுக்கு நல்ல புத்தி வந்தா சரி என்று சொன்னாள். உண்மைதான் இந்த உலகத்துல எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும் எந்த யூசும் இல்ல. புத்திசாலியா இருந்தா மட்டுந்தான் பணம், காசுன்னு சம்பாதிக்க முடியும்.  நேர்மையானவனா, திறமைசாலியா இருக்கிறவங்கள இந்த உலகம் பொழைக்கத் தெரியாதவன், வேஸ்ட் அப்படின்னு தான் இளக்காரமா பேசும். பணத்தோட அருமை இப்பதான் உங்களுக்கு புரியுது என்னவோ நல்லது நடந்தா சரி சீக்கிரம் வீட்டுக்கு வாங்க என்று மரகதம் போனை கட் பண்ண போக

ஒரு நிமிஷம் உன்கிட்ட ஒன்னு கேட்கணும் ஆமா அந்த பேனா எங்க இருக்கு என்று கேட்டான். எந்த பேனாவை கேக்கிறீங்க? அதாண்டி அந்த பிரஷ் வச்ச பேனா அதைத்தான் கேட்கிறேன். அதுவா நீங்க காலையில போனதுக்கு அப்புறம் ஹவுஸ் ஓனர் வீட்டில புதுசா வேலைக்கு சேந்த வேலைக்காரம்மா பேரனை மேல கூட்டிட்டு வந்தாங்க. அந்த பையன் ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்தான். அவன் அந்த பேனாவை கேட்டான். சரி இது பழைய பேனா தானே அப்படின்னு அவனுக்கு கொடுத்துட்டேன் என்று சொல்ல ரவிக்குமாருக்கு தூக்கி வாரி போட்டது. அட பைத்தியம் அத எதுக்கு தூக்கி கொடுத்த வேற பேனா கொடுக்க வேண்டியதுதானே என்று ரோடு என்றும் பாராமல் கத்தினான்.
ஏன் கத்துறீங்க அது பழைய பேனா தானே அதான் கொடுத்தேன். புது பேனாவை தூக்கி தர சொல்றீங்களா? உன்ன என்று பல்லை கடித்துக் கொண்டு கையை முறுக்கி கத்தினான். இதை பார்த்த கேசன் ஏன் இப்படி கத்துறான் மறுபடியும் ரெண்டு பேரும் சண்டை போட தொடங்கிட்டாங்க போல என்று முனுமுனுத்துக் கொண்டான்.

சரி அந்த பையன் பிரஷ்ச வச்சு ஏதாவது வரஞ்சானா என்று கேட்டான் இல்ல ஒன்னும் வரையில அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன வரைய தெரியும். நான் தான் அந்த பேனாவை எழுதுதான்னு செக் பண்ணேன். என்னது பேனாவ செக் பண்ணியா? என்ன எழுதின என்று அவசரப்படுத்தினான். என் பேர தான் எழுதினேன். உன் பேர எழுதுனியா? ஆமா பேரைத்தான் எழுதினேன் அதுக்கு ஏங்க டென்ஷன் ஆகுறீங்க என்று விபரீதம் தெரியாமல் கேள்வி கேட்டாள். அப்ப அந்த பேனாவுல எழுதுனதுக்கு அப்புறம் தான்  நீ தூக்கு போட போனியா? நீங்க வீட்டுக்கு வரதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அந்தப் பையனுக்கு பேனாவை கொடுத்தேன். அது உங்க கிட்ட சொல்லலாம்னு பார்த்தேன் நீ அவசரமா கார்ல கிளம்பி போயிட்டீங்க அதுக்கு அப்புறம் தான் எல்லாம்  நடந்துச்சு. நான் தொப்புன்னு கீழ விழுந்துட்டேன். சத்தம் கேட்டு ஹவுஸ் ஓனர் ஓடி வந்தாங்க என்று சொல்லி முடித்தாள்.

அந்த எழுதுன பேப்பரை எடுத்து வெய்யி நான் உடனே வரேன் என்றதும். பேப்பர்ல எழுதலைங்க உங்கள வரைஞ்சி வெச்சிறிந்தீங்கள்ல  அந்தப் படத்துக்கு பின்னாடி தான் எழுதி பார்த்தேன் என்று சொல்ல கேசன் ரவிக்குமாரை நோக்கி ஓடி வருகிறான்.  வேகமாக டேங்கர் லாரி  பங்கில் திரும்ப  ரவிக்குமார் இரண்டு ஸ்டெப் முன்னாடி நகர  அப்படியே அடித்து தூக்கி எறிந்து பொத்தென்று ரத்த வெள்ளத்தில் கீழே விழுகிறான். கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிகிறது. கேசன் ஓடி வந்து ரவிக்குமாரை தூக்கி கதறுகிறான். கேசன் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடி வருகிறார்கள்.  போனில் ஹலோ ஹலோ என்று மரகதம் கத்துகிறாள். கையில் போனை இறுக்கிப்பிடித்தபடி  ரவிக்குமார் தனது இறுதி மூச்சை விடுகிறான். திறமை இருந்தும் தலைசிறந்த ஓவியன் வான்கோவை போல சிறிய வயதிலேயே ரவிக்குமாரின் வாழ்க்கை முடிந்து போகிறது.

சிறுவனின் கையில் சிக்கிய பேனா அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறது  என்பதை அடுத்த தொடரில் காண்போம்.

மீண்டும் பயணிப்போம். . .

அன்புள்ளம் கொண்ட அறிவார்ந்த வாசகர்களாகிய உங்கள் பேராதரவுக்கு  நன்றிகள். ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தொடரை பற்றி தங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த தொடர் தங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உங்களின் ஆதரவு எங்களின்  பயணத்திற்கு ஒரு ஏணிப்படியாக அமையட்டும்.

நன்றி வணக்கம்
– ஃப்ரெடி டிக்ரூஸ் –

admin

About Author

1 Comment

  1. Chandran t

    August 24, 2025

    semma thrilling ga, pogudu,
    next yeppo ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

கதைகள் சிறுகதை

குச்சித்தூக்கி – சிறுகதை

சிறுகதை – தஞ்சாவூரில் கீரைக்கொல்லைத் தெருவில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க மாரியப்பனின் வீட்டில் உள்ள மரத்தில் காக்கைகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த காக்கைகள் மாரியப்பனின் வீட்டின் மீது பழைய மாமிச
கதைகள் சிறுகதை

கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை

சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து